வாழ்விட மேம்பாட்டு திட்டமும், நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை உயர்வும்!
- மஞ்சூர்: அழிவின் பட்டியலில் உள்ள விலங்கினங்களில் நீலகிரி வரையாடும் ஒன்று. ‘ஹெமிடிராகஸ் ஹைலோகிரையஸ்’ (Nilgiritragus hylocrius) என்ற விலங்கியல் பெயர் கொண்ட இந்த விலங்கினம், தமிழ்நாட்டின் மாநில விலங்கு. 12 வரையாடு இனங்களில் இந்த ஓரினம் மட்டுமே தென்னிந்தியாவில் காணப்படுகிறது.
- கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 2600 மீட்டர் உயரத்தில் உள்ள புல்வெளிகளில் வசிக்கும் இந்த வரையாடுகள், ஒரு காலகட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலை தொடர்கள் முழுவதும் பரவியிருந்தன. இவற்றின் வசிப்பிடங்கள், தற்போது கேரளா, தமிழ்நாடு அளவில் சுருங்கிவிட்டன. வேட்டை, சுருங்கிய வசிப்பிடங்கள், கால்நடை மேய்ச்சல் ஆகிய காரணங்களால் இவற்றின் எண்ணிக்கை வேகமாக குறைந்து, தற்போது அழிவின் விளம்பில் உள்ளன.
- 1972-ம் ஆண்டு வன உயிரின பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், வரையாடு களுக்கான அச்சுறுத்தல் ஓரளவு குறைந்தது. தற்போதைய காலகட்டத்தில் நீலகிரி மற்றும் ஆனைமலையில் மட்டுமே அதிகளவிலான வரையாடுகள் காணப்படுகின்றன.
- பழநி, மேகமலை மற்றும் அகஸ்திய மலைகளில் குறைந்த எண்ணிக்கையில் காணப்படுகின்றன. வரையாடுகளின் எண்ணிக்கை 2000-க்கும் சற்று அதிகமாக இருப்பதாக அறியப்பட்ட நிலையில், முக்குருத்தி தேசிய பூங்காவில் இவற்றின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 27 சதவீதம் உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
- முதுமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் முக்குருத்தி தேசிய பூங்கா நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 78.4 சதுர கி.மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பூங்காவில், அழியும் பட்டியலில் உள்ள வரையாடுகள் அதிகளவு வாழ்கின்றன. இந்நிலையில், இங்கு கடந்த 3 ஆண்டுகளில் வரையாடுகளின் எண்ணிக்கை 27 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 2016-ல் வரையாடுகள் எண்ணிக்கை 480-ஆகவும், 2017-ல் 438-ஆகவும், 2018-ல் 568-ஆகவும் இருந்தது. இந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 618-ஆக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. தமிழ்நாடு அரசின் வாழ்விட மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வரையாடுகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
- நீலகிரி மாவட்டத்திலுள்ள முக்குருத்தி தேசிய பூங்கா பகுதியில் குறைந்த அளவில் காணப்பட்ட வரையாடுகள், கடந்த மூன்று ஆண்டுகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 300-க்கும் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. முக்குருத்தியில் மட்டுமே கூட்டமாக வாழ்ந்த வரையாடுகள், கடந்த சில மாதங்களாக அவலாஞ்சி வனப்பகுதிக்குட்பட்ட கோலரிபெட்டா மலைத்தொடரில் குட்டிகளுடன் காணப் படுகின்றன.
- இதுகுறித்து நீலகிரி வனக்கோட்ட வன அலுவலர் கவுதம் கூறும்போது, ‘‘நீலகிரி வரையாடு திட்டம் என்ற திட்டத்தை, கடந்த 2023-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் வரையாடுகளின் வாழ்விடங்களை மீண்டும் அறிமுகப் படுத்துவது, அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வது, பாதுகாப்பு பணியில் வன ஊழியர்களை கூடுதலாக நியமிப்பது உட்பட பல்வேறு பணிகளை மேற்கொள்ள ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
- தற்போது அவலாஞ்சி மலைத்தொடரில் வரையாடுகள் வர தொடங்கியுள்ளன. தமிழ்நாடு முதல்வர் கொண்டுவந்த இத்திட்டத்தின் மூலமாக, வனத்துறையினர் எடுத்த அனைத்து முயற்சிகளுக்கும் வெற்றி கிடைத்துள்ளது’’ என்றார். அவலாஞ்சி மலைத்தொடரில் தற்போது வரையாடுகள் உலா வருவது வனத்துறையினர் மற்றும் இயற்கை ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி: இந்து தமிழ் திசை (09 – 03 – 2025)