விடை கிடைக்குமா?
- அண்ணா பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு எதிராகப் பலர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். ஆனால், இதுபோல் கல்வி நிறுவனங்களுக்குள் நிகழும் கொடுமைகளையும் தற்கொலைகளையும் தனிப்பட்ட காரணங்கள் சொல்லப்பட்டு மூடப்பட்ட வழக்குகளாக மட்டுமே நாம் அறிவோம்.
- ஏழு ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட ஒரு கிராமத்துப் பெண், ஆங்கிலம் தெரியவில்லை என்பதால் இறந்துவிட்டாள் என்று சொல்லி அந்தத் தற்கொலை வழக்கைக் காவல்துறையினர் மூடிவிட்டனர். அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அங்கு படித்த மாணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறான். உடனே தற்கொலை செய்துகொண்ட பெண்ணுக்கும் அந்த மாணவனுக்கும் காதல், அது தோல்வியில் முடிந்ததால் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று ஒரு கட்டுக்கதையைக் கட்டினார்கள். அத்தகைய கட்டுக்கதைகளால் அந்த வழக்கை ‘வெற்றிகரமாக’ முடித்தும் வைத்தார்கள்.
- அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட நபர் எப்படி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைய முடிந்தது? இந்த ஒரு மாணவி மட்டுமல்ல பல்வேறு மாணவிகளும் இதுபோல பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று மெல்ல மெல்ல ஒன்றன்பின் ஒன்றாக உண்மைக் கதைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அப்படி எனில் இந்தப் பல்கலைக்கழகமும் அதன் நிர்வாகமும் அதன் செயற்குழுவும் அதன் காவலாளர்களை எந்த விதத்தில் கண்காணித்து வந்திருக்கின்றன என்பது விவாதிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.
மரத்துப்போன மனநிலை:
- நமக்கெல்லாம் தேவை ஒரு கிளுகிளுப்பான கதை. அந்தக் கதையின் வழியாக நாம் எதையாவது அடைகிறோமா என்றால் சத்தியமாக இல்லை. அடுத்த வீட்டு ஜன்னலை உற்றுப்பார்க்கும் மோசமான நடத்தை கொண்டவர்களின் கண்களையே நாம் கொண்டிருக்கிறோம். அதனால் என்ன நடக்கிறது? ஊடகங்கள் எல்லாமே போட்டி போட்டுக்கொண்டு நமக்கு உலகத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல்முறையாக யாருமே கேட்டிராத முதல்கட்ட செய்திகளை விரைந்து தருகின்றன. அவை உண்மையா பொய்யா என்று சலித்துப் பார்ப்பதில்லை. அது வெளிவந்தால் யாருக்குப் பாதிப்பை உண்டாக்கும் என்று ஒரு கணம்கூட யோசிப்பதில்லை. அவர்களுக்குத் தேவை செய்தி. நமக்குத் தேவை அடுத்தவர் வாழ்க்கையை எட்டிப் பார்க்கும் ஒரு சின்ன பரவசம்.
- பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்காக நாம் என்ன செய்துவிட்டோம்? ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகக் கூட்டம் கூட்டமாக முன்வந்து மெரினாவைச் சுற்றி ஒரு மனிதக் கடலாக நின்றோம். அதேபோல், ‘அண்ணா பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கு எதிரான அநீதி ஒழிக’ என்று கோஷமிட்டோமா? நம் அன்றாட வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சலிப்பிலிருந்து நமக்கு ஒரு நிமிடம் விடுதலை தருவதற்காக அந்தக் குறிப்பிட்ட செய்தியைப் பார்த்துவிட்டு மீண்டும் நாம் தேநீர் குடிக்கிறோம் அல்லது நமக்கான வேலைகளைச் செய்ய ஆரம்பித்து விடுகிறோம்.
குற்றங்களிலிருந்து விடுதலை:
- ஒரு பெண்ணின் ‘எஃப்.ஐ.ஆர்’ ஊடகத்தில் வெளிவருவது என்பது எவ்வளவு துயரமானது என்பதை நம்மில் பலரும் அறிவதில்லை. தன் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் ரீதியான வன்முறையை ஒரு பெண் வாக்குமூலமாகப் பதிவுசெய்யும்போது ஒவ்வொரு வார்த்தைக்கும் எவ்வளவு மன வேதனைக்குள் அவள் புகுந்து வெளிவந்திருப்பாள் என்பதை ஆண் உலகம் துல்லியமாகக் கணித்துவிட இயலாது. ஒரு பெண் எப்படி ஓர் ஆணுடன் தனியாக இருப்பாள், அவள் ஏன் இரவில் வெளியே செல்ல வேண்டும் என்பதெல்லாம் கேவலமான விவாதங்களாகச் சமூக ஊடகங்களில் ஓடிக்கொண்டிருக்கின்றன. நம் சமூகம் எப்போது பெண்ணின் மனதையும் உடலையும் அவளது மனத் தேவைகளையும் உடல் தேவைகளையும் உணருமோ அறியுமோ அங்கீகரிக்குமோ அன்றே இது போன்ற குற்றங்களிலிருந்து விடியல் ஏற்படும்.
- கொல்கத்தா மருத்துவரின் பாலியல் வன்முறைக் கொலை காற்றில் கரைந்து போனதுபோல் இதுவும் காணாமல் போகும். அதற்குப் பின் நாம் வேறு ஒரு பரபரப்பான வன்கொடுமைக்குப் பழகிக்கொள்ள ஆரம்பித்து விடுவோம். முதல் தலைமுறை மாணவர்கள் ஒரு சமூகத்தின் நம்பிக்கை வேர்களாகத்தான் நகரத்திற்கு வந்து படித்தபடி இருக்கிறார்கள். காதல் என்பது பதின்ம வயதில் இயல்பாக ஏற்படக்கூடிய ஒன்று. ஆனால், ஒழுங்கற்ற காமத்தின் மூலமாகப் பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளே நடைபெறும் பல்வேறு விஷயங்கள் பல உயிர்களைக் கொய்தபடியே இருக்கின்றன. நேர்மையான விசாரணையின் மூலமாக இதற்கெல்லாம் விடை கிடைக்குமா?
நன்றி: இந்து தமிழ் திசை (05 – 01 – 2025)a