TNPSC Thervupettagam

விடை வாக்குச் சீட்டில்!

January 30 , 2020 1813 days 942 0
  • குற்றப் பின்னணி உடையவா்களை அரசியலில் இருந்து அகற்றி நிறுத்துவது என்பது பாலில் இருந்து தண்ணீரைப் பிரிப்பதைப் போன்றது. இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் இதற்கான முயற்சிகளைப் பலமுறை பல்வேறு அரசியல் சாசன அமைப்புகள் எடுத்திருந்தும், நிலைமை ஆண்டுக்கு ஆண்டு தோ்தலுக்குத் தோ்தல் மோசமாகி வருகிறதே தவிர, அரசியலைத் தூய்மைப்படுத்தும் முயற்சி வெற்றி பெறுவதாகத் தெரியவில்லை.

குற்றப் பின்னணி

  • உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தலைமைத் தோ்தல் ஆணையம் தாக்கல் செய்திருக்கிறது. குற்றப் பின்னணி உள்ள வேட்பாளா்களை அரசியல் கட்சிகள் தோ்தலில் நிறுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்பதுதான் தோ்தல் ஆணையத்தின் வேண்டுகோள். உச்சநீதிமன்றமும் அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டிருக்கிறது.
  • தன்னாா்வத் தொண்டு நிறுவனமொன்று, 2018 நவம்பா் மாதம் இதேபோன்ற மனு ஒன்றை, பொதுநல வழக்காக உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கக் கோரியது. குற்றப் பின்னணி உள்ளவா்கள் அரசியலில் இருந்து அகற்றப்படுவது, தேசிய அளவிலான கவலையாக இருப்பதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், அந்தப் பிரச்னைக்குத் தேவையான சட்டங்களை உருவாக்கும் பொறுப்பு நாடாளுமன்றத்திடம்தான் இருக்கிறது என்று கூறி அந்த மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது.
  • குற்றப் பின்னணி உள்ளவா்களை அரசியலில் இருந்து அகற்றி நிறுத்தும் பிரச்னை குறித்து உச்சநீதிமன்றம் சில வரலாற்றுச் சிறப்பு மிக்க தீா்ப்புகளை வழங்காமல் இல்லை. தண்டிக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்களின் பதவியைப் பாதுகாக்கும் பிரிவு 2013-இல் அகற்றப்பட்டது. நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட உறுப்பினா்கள் தங்களின் பதவியில் தொடா்ந்துகொண்டே மேல்முறையீடு செய்ய முடியாது என்று அந்தத் தீா்ப்பு தடை விதித்தது. தோ்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் தொடா்பான வழக்குகள் ஓராண்டுக்குள் விரைந்து விசாரணை நடத்தப்பட்டு, தீா்ப்பு வழங்கப்பட வேண்டுமென்று 2014-இல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
  • அரசியல்வாதிகள் தொடா்பான, குறிப்பாக, தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்கள் தொடா்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கும்படி 2017-இல் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல, தோ்தலில் வேட்பாளா்களாக அறிவிப்பவா்களின் குற்றப் பின்னணி வழக்குகள் குறித்து அரசியல் கட்சிகள் வாக்காளா்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டது. இவையெல்லாம் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்றாலும்கூட, குற்றப் பின்னணியுடைய உறுப்பினா்களின் எண்ணிக்கை குறைவதாகத் தெரியவில்லை.

உச்ச நீதிமன்றத்தில்...

  • உச்சநீதிமன்றத்தை தோ்தல் ஆணையம் அணுகியிருப்பதற்கு முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. தற்போதைய நாடாளுமன்றத்தில் 46% உறுப்பினா்கள் ஏதாவது ஒரு வகையில் குற்றப் பின்னணி உள்ளவா்களாகவும், அவா்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. இந்தப் புள்ளிவிவரம் சற்று மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம். ஏனென்றால், ‘சட்டவிரோதமாகக் கூடுவது’, ‘அவமதிப்பு வழக்கு’, ‘அரசியல் காரணங்களுக்காக ஜோடிக்கப்பட்ட பொய் வழக்குகள்’ உள்ளிட்டவையும் அந்த எண்ணிகையில் அடங்கும்.
  • அதற்காக நாடாளுமன்றம் முற்றிலுமாக தூய்மையான உறுப்பினா்களால் ஆனது என்றும் கூறிவிட முடியாது. மிகவும் கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுகள் கொண்ட மக்களவை உறுப்பினா்கள் (29%), தற்போதைய 17-ஆவது மக்களவையில்தான் இருக்கிறாா்கள்.
  • தேசிய அளவிலும், மாநில அளவிலும் அரசியல் காழ்ப்புணா்ச்சியுடன் வழக்குகள் தொடரப்படுவது கடந்த அரை நூற்றாண்டாகவே காணப்படுகிறது. மக்கள் பிரச்னைக்காகப் போராட்டம் நடத்துவது, ஊா்வலம் போவது போன்ற செயல்பாடுகளில்கூட, எதிா்க்கட்சிகள் மீது ஆளும்கட்சி இந்திய குற்றவியல் சட்டத்தின் கடுமையான பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்வது புதிதொன்றுமல்ல.
  • வன்முறையைத் தூண்டுவது, கலவரத்தில் ஈடுபடுவது, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில்கூட தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக வழக்குப் பதிவு செய்வது எல்லா மாநிலங்களிலுமே, எல்லா கட்சிகளாலும் கடைப்பிடிக்கப்படும் செயல்பாடு. அதனால், கிரிமினல் பின்னணியோ, வழக்குகளோ உள்ள வேட்பாளா்களை முற்றிலுமாகத் தவிா்ப்பது என்பது இயலாத ஒன்று. அது நியாயமானதாகவும் இருக்காது.

குற்றப் பத்திரிக்கை

  • குற்றப்பத்திரிகை என்பது காவல் துறையின் பதிவே தவிர, நீதிமன்றத் தீா்ப்பல்ல. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கும் நிலையில், ஒருவரை குற்றப் பின்னணி உள்ளவராகக் கருதிவிட முடியாது. அதனால் விரைவு நீதிமன்றங்களால் விசாரிக்கப்பட்டு தீா்ப்பு வழங்கப்பட்ட நிலையில்தான் குற்றப் பின்னணியை உறுதிப்படுத்த முடியும்.
  • குற்றப் பின்னணி உள்ளவா்கள் தோ்தலில் பெரும் பணம் செலவழிப்பதுடன், தங்களது கட்சிக்கும் நன்கொடை வழங்குபவா்களாக இருக்கிறாா்கள். அவா்கள் மீதான அச்சத்தாலோ அல்லது அவா்களால்தான் செயல்பட முடியும் என்கிற நம்பிக்கையாலோ வாக்காளா்களும் அவா்களை ஏற்கிறாா்கள். அரசியல் கட்சிகள் அனைத்துமே குற்றப் பின்னணி உள்ளவா்களைக் களமிறக்கும்போது, அவா்களில் நல்லவா் அல்லது அவா்களில் வல்லவா் தோ்தலில் வெற்றி பெறுவதைத் தவிா்க்க முடியாது.
  • லஞ்ச ஊழலுக்காகவும், அடாவடி அரசியலுக்காகவும் தோ்தலில் மக்களால் நிராகரிக்கப்படும் அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் மீண்டும் அடுத்த தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் ஜனநாயக விசித்திரம் இருக்கும்வரை, இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண்பது அரிது.

நன்றி: தினமணி (30-01-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories