TNPSC Thervupettagam

விண்ணளக்கும் வியன் மகளிர்

July 29 , 2019 1986 days 1882 0
  • நம் வானியல் அறிவும் அது தொடர்பான தேடலும் பல காலமாகத் தொடர்ந்திருப்பவை. தமிழகத்தில் சங்கம் காட்டும் கணியன் பூங்குன்றனார், கணிமேதாவியார், பக்குடுக்கை நன்கணியார் போன்றோர் வானியல் சாஸ்திர அறிவு மிக்கவர்களாகவும் அதிலே ஆய்வு மேற்கொண்டவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இவர்களில் பெண்களும் தங்கள் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.
  • ரிக் வேதமும் வான சாஸ்திரம் குறித்துப் பேசுகிறது. வான சாஸ்திர வல்லுநர்களை "நட்சத்திர தர்ச' அல்லது "கணக' என்று குறிப்பிடுகிறது. சங்கத் தமிழிலும் கணிகன், கணியன் என்ற சொற்கள் வானசாஸ்திர வல்லுநர்களைக் குறிக்கப் பயன்படுத்துகிறோம். அதர்வண வேதத்திலும் வானியல் செய்திகள் இருக்கின்றன. ரிக் வேதம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சூரியனுக்கும் மற்ற கிரகங்களுக்கும் இயற்கையிலேயே இருக்கும் ஈர்ப்பு விசை காரணமாகத்தான் அவை ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளாமல் இருப்பதாகக் குறிப்பிடுகிறது. பல சூரிய மண்டலங்கள் இருப்பதாகவும், சூரியனின் வெளிச்சத்தை உள்வாங்கி நிலவு இரவில் அதனைப் பிரதிபலிக்கிறது என்றும் ரிக் வேதம் கூறுகிறது.

கிரகம்

  • யுரேனஸ், நெப்டியூன் கிரகங்கள் 18-ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக இன்றைய அறிவியல் கூறுகிறது. ஆனால் பச்சை மற்றும் வெள்ளை நிறம் கலந்த யுரேனஸ் கிரகத்தை, "ஸ்வேத' என்றும் நீலம் மற்றும் வெள்ளை நிற நெப்டியூன் கிரகத்தை, "சியாமா' என்றும் வியாசர் குறிப்பிட்டுள்ளார்.
  • கிரகங்களின் சுற்றுப்பாதை, அவை சூரியனை சுற்றுவதற்கான கால அளவு பற்றி ரிக் வேதத்தில் காண்கிறோம். ரிக் வேதத்தைத் தந்தவர்களுள் பெண்களும் அடங்குவர். பெண்களும் வானியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்ற தகவல்களை வேத காலத்திலும் சங்க காலத்திலும் காண்கிறோம். இடைப்பட்ட காலங்களில் இதிலே தொய்வு தோன்றியது என்றாலும் மீண்டும் தன் பெருமைகளை  பாரதம் மீட்டெடுக்கும் விதத்தில் பெரும் உழைப்பைச் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியே தற்போதைய இஸ்ரோவின் செயல்பாடுகள்.
  • சந்திரயான்-2 விண்கலத்துடன் ஜிஎஸ்எல்வி மார்க் 3 எம்1 ராக்கெட்  ஜூலை 22 ஆம் தேதியன்று  ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் ஏவப்பட்ட ஐந்து நிமிஷங்கள் 18 விநாடிகளில் அதன் கிரையோஜெனிக் என்ஜின் பற்ற வைக்கப்பட்டு அடுத்த நிலைக்கு ராக்கெட் கொண்டு செல்லப்பட்டது. 16 நிமிஷங்கள் 23 விநாடிகளில் ராக்கெட்டில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் பிரித்து விடப்பட்டு திட்டமிட்ட புவி சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்பட்டது. பெரும் சப்தத்துடன் நெருப்பை உமிழ்ந்தபடி ராக்கெட் மேலெழும்பிய போது ஒவ்வொரு இந்தியரும் நிமிர்ந்து நின்றனர். தேசத் தலைவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குத் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று நாடே பெருமை கொண்டது. 
  • தற்போது நிலவின் தென்பகுதியில் தன்னுடைய ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான பயணத்தில் சந்திரயான்-2 விண்கலம் இருக்கிறது. முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இந்த விண்கலம் உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாகவும் பேசும் பொருளாகவும் இருக்கிறது. சந்திரயான்-2 விண்கலம் தொடர்ந்து மிகச் சரியாக தன் பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது விண்கலத்துக்கான வெற்றிப் பயணம் மட்டுமல்ல. பாரத தேசத்திற்கும் பாரதப் பெண்களுக்குமான பெருமைமிகு பயணமாகும்.
    நிலவில் தடம் பதிக்கும் நான்காம் நாடாக இந்தியா திகழுமா என்பதில் உலகின் கவனம் நிலைத்திருக்க, நிலவில் சந்திரயான்-2 விண்கலம் பாதுகாப்பாகத் தன் ஆய்வை முற்றிலும் வெற்றிகரமாகச் செய்ய வேண்டும் எனும் பிரார்த்தனையில்  ஒட்டுமொத்த இந்தியாவும் இருக்கிறது. இந்த விண்கலம் உலக அளவிலான நமக்கான அங்கீகாரம், அறிவியல் முன்னேற்றத்தில் தேசத்தின் வளர்ச்சிக்கான மைல்கல் என்பதோடு பாரதப் பெண்களின் அறிவாற்றலை உலகுக்குப் பறைசாற்றும் மற்றுமோர் உதாரணம் ஆகும்.

சந்திரயான்-1

  • 2008-இல்  சந்திரயான்-1 அனுப்பப்பட்டது. அது நிலவைச் சுற்றி வரும்படியாக அமைந்தது. தொழில்நுட்ப ரீதியில் அதற்கு அடுத்தகட்டம் நிலவில் தரை இறங்குவது. ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு முன்பே நிலவின் மையப் பகுதியில் இறங்கி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அங்கே பெரிதாக ஏதுமில்லை என்ற முடிவு ஏற்பட்டது. நிலவு குறித்த அடுத்தகட்ட ஆய்வை மேற்கொள்ள நிலவின் துருவப் பகுதிகளில் இறங்க வேண்டும்; அதற்காகத்தான் சந்திரயான்-2 வடிவமைக்கப்பட்டுள்ளது. 
  • இந்தியாவுக்குச் சவாலான விண்கலம் சந்திரயான்-2 என்று குறிப்பிடும் இஸ்ரோவின் தலைவர் சிவன், "பணியிடத்தில் ஆண் - பெண் பாகுபாடு இல்லை; ஆற்றல் மட்டுமே கவனம் பெறுகிறது என்கிறார். இதற்கு முன்பு பெண்கள் தகவல் தொடர்பு போன்ற பொறுப்புகளில் இருந்திருக்கிறார்கள்; ஆனால், விண்கலத்தின் பாகங்கள் வடிவமைப்பு தொடங்கி அதன் செயல்பாடு என்று அனைத்துப் பணிகளையும் பெண்கள் தலைமை ஏற்று நடத்துவது இதுவே முதல் முறை' என்றும் கூறுகிறார். 
  • தன் நீண்ட கால அனுபவத்தால் இஸ்ரோவில் பெரும் பொறுப்புகளை பெற்றிருப்பவர் சென்னையைச் சேர்ந்த வனிதா முத்தையா. இஸ்ரோவில் 32 ஆண்டுகால அனுபவம் கொண்டவர். இஸ்ரோவின் முதல் பெண் திட்ட இயக்குநர்  வனிதா முத்தையா. சிறந்த பெண் விஞ்ஞானி விருது பெற்றவர். சந்திரயான்-2 திட்டத்தில், திட்ட இயக்குநராக செயல்படுபவர். விண்கலம் தயாரிப்பு மற்றும் அதன் பாகங்கள் சரிபார்ப்பது, அதற்கு இறுதி வடிவம் கொடுத்து விண்ணுக்கு அனுப்புவது வரை இவருடைய பொறுப்பு இருக்கிறது. இதற்கு முன்னாலும் "கார்டோசாட் 1', "ஓசன்சாட் 2' முதலிய விண்கல தயாரிப்புப் பணிகளில் பங்கெடுத்தவர். வனிதா குறித்துக் கூறும்போது, "சிக்கல்களை உடனடியாகக் கண்டுபிடித்து அதனை சரிசெய்யும் ஆற்றலுடையவர்; குழுவை நிர்வகிக்கும் திறனில் சிறந்து விளங்குவதால்தான், அவர் சந்திரயான்-2 விண்கலம் திட்டத்தில் சேர்க்கப்பட்டார்' என்று இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கூறியிருக்கிறார். 

இளம் விஞ்ஞானி விருது

  • 2007-ஆம் ஆண்டு இளம் விஞ்ஞானி விருது, விண்வெளித் துறையில் பெண் சாதனையாளர் என்று அங்கீகாரங்களையும் விருதுகளையும் பெற்றிருக்கிறார் ரித்து. சிறுவயதில் வானியல் மீது கொண்ட ஆர்வத்தால் அறிவியல் கல்வி கற்ற ரித்து, விண்வெளி பொறியாளராக 1997-இல் இஸ்ரோவில் பணியில் சேர்ந்தவர். இஸ்ரோவில் பணியாற்ற வேண்டும் என்பதைக் குழந்தைப் பருவத்தில் இருந்தே தன்னுடைய லட்சியமாகக் கொண்டவர். தன் லட்சியத்தில் வெற்றி கண்டு இஸ்ரோவில் தன்னுடைய 22 ஆண்டுகால உழைப்பால் இந்தியாவின் ராக்கெட் பெண்மணி என்ற அங்கீகாரத்தைப் பெற்றவர். சந்திரயான் 2 திட்டத்தின் துணை செயல்பாட்டு இயக்குநர் ரித்து. விண்கலத்தின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு மேற்கொள்வது இவரது பணி. மங்கள்யான் விண்கலம் தயாரிப்பிலும் பணியாற்றியவர் என்பதுதான் ரித்துவின் சிறப்பு.
    "எத்தனையோ காலமாய் மேன்மையுற்று வாழ்ந்த பெண்களே; நீங்கள் மீண்டும் புத்துயிர் பெற்றுப் புது உலகம் சமைக்க வாருங்கள்' என்று அறைகூவல் விடுத்த பாரதியின், "எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி' என்ற கனவு நனவாகிக் கொண்டிருக்கிறது. 
  • சந்திரயான்-2 திட்டத்தில் பொறுப்பேற்றிருக்கும் இந்த இரு பெண்களும் காலம் கருதாது பல தியாகங்களைச் செய்து தங்கள் பணியை முழுமையாக நிறைவேற்றிக் கொண்டிருப்பவர்கள். இவர்களது குழுவில் இன்னும் பல பெண்கள் இருக்கிறார்கள். இஸ்ரோவில் பணியாற்றுவோரில் ஏறத்தாழ 30 சதவீதம் பேர் பெண்கள். விண்கலத்தின் பயணத்திற்காகத் தங்களது உழைப்பைத் தந்திருக்கிறார்கள்.
  • சந்திரயான்-1 நமக்குப் பெற்றுத் தந்த நற்பெயரை சந்திரயான்-2 தொடர்ந்து நிலைநிறுத்தும் என்று நம்புவோம். மேலும் மேலும் வானியல் ஆராய்ச்சியில் இந்தியாவை முன்னுக்கு இட்டுச் செல்லும் என்பதோடு தேசத்தின் மேன்மையில் பெண்களின் பங்களிப்பும் மென்மேலும் வளரும் என்ற நம்பிக்கையையும் சந்திரயான் 2 சுமந்து முன்னேறுகிறது.

நன்றி: தினமணி(29-07-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories