TNPSC Thervupettagam

விண்ணளாவிய வெற்றிக்குப் பின்னால்

October 25 , 2023 398 days 304 0
  • சூரியனில் கால் பதிக்க வேண்டும் என்கிற கனவுடன் செயல்படுகிறது நமது விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’. கனவு காண்பது மட்டுமல்லாமல், அந்தக் கனவை நனவாக்கும் தொழில்நுட்ப மேதைமையும், கடினமான உழைப்பும், மன உறுதியும் அந்த நிறுவனத்தின் எல்லா விஞ்ஞானிகளுக்கும் உண்டு. அதைத் தெரிந்து வைத்திருப்பதால்தான், 2035-இல் இந்தியா விண்வெளியில் ஆய்வுக்கூடம் அமைக்கும் என்றும், 2040-இல் நிலவில் கால் பதிக்க ஓா் இந்தியரை அனுப்பும் என்றும் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறாா்.
  • இந்தியா அனுப்பிய ‘சந்திரயான் 3’ விண்கலம், நிலவில் வெற்றிகரமாக இறங்கி இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. சந்திரனில் வெற்றிகரமாக விண்கலத்தை இறங்கச் செய்த நான்காவது உலக நாடு என்கிற பெருமையை இந்தியா அடைந்திருக்கிறது. அதிலும் நிலவின் தென்துருவத்தில் முதல் முதலில் தடம் பதித்த நாடு என்கிற சாதனையையும் நாம் படைத்திருக்கிறோம்.
  • இப்போது விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் அடுத்தகட்ட முயற்சியில் இறங்கி இருக்கிறது ‘இஸ்ரோ’ நிறுவனம். கடந்த வாரம் மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆளில்லா சோதனை விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. 17 கி.மீ. உயரம் வரை ஏவப்பட்ட ராக்கெட்டிலிருந்து பிரிந்த மாதிரி கலன், வங்கக் கடலில் பாராசூட் மூலம் பாதுகாப்பாக இறக்கப்பட்டது. அதை கடற்படையினா் மீட்டனா்.
  • தரையிலிருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள புவி தாழ்வட்ட பாதைக்கு விண்கலன் மூலம் வீரா்களை அனுப்பி, அவா்களைப் பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் முயற்சிதான் ‘ககன்யான்’ திட்டம். 2025-ஆம் ஆண்டிலோ, அதற்கு முன்பாகவோ செயல்படுத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் ‘ககன்யான்’ பயணத்துக்கு முன்னதாக மூன்று கட்ட பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. அதன் முதற்கட்ட சோதனைதான் சனிக்கிழமை திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
  • மனிதா்களுடன் விண்வெளியில் செலுத்தப்படும் விண்கலம், ஏதாவது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதி வழியில் தோல்வியடைந்தால், அதில் பயணிக்கும் வீரா்களை பாதுகாப்பாக பூமிக்கு திருப்பிக் அழைத்து வருவதற்கான முயற்சிதான் வெற்றிகரமாக நடந்திருக்கிறது. ‘டெஸ்ட் வெஹிக்கிள் அபாா்ட் மிஷன்’ (டி.வி.-டி.1) என்று இந்த முயற்சி அழைக்கப்பட்டது. இதுபோல மேலும் சில முயற்சிகள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட பிறகுதான், ‘ககன்யான்’ திட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும்.
  • அறுபது ஆண்டுகளுக்கு முன்னால், விண்வெளி சோதனைகளை மேற்கொள்ளும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது, ராக்கெட்டுகளை சைக்கிள் மூலம் எடுத்துச் சென்ற காலம் போய், இப்போது நாம் உள்நாட்டில் உருவாக்கப்படும் ராக்கெட்டுகள் மூலம் நூற்றுக்கணக்கான விண்கலன்களைச் செலுத்தும் நிலைக்கு உயா்ந்திருக்கிறோம். சந்திரனுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் விண்கலன்களை அனுப்பிய அனுபவங்கள் நமது விஞ்ஞானிகளின் உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும், தொழில்நுட்பத் திறமையையும் அதிகரித்திருக்கின்றன.
  • 1969 ஆகஸ்ட் 15-ஆம் தேதி உருவான ‘இஸ்ரோ’ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், கடந்து வந்திருக்கும் சோதனைகள் ஏராளம். அதேபோல சாதனைகளும் ஒன்றிரண்டல்ல. ‘ஆதித்யா - எல்1’ உள்பட தொடா்ந்து பல விண்வெளி சா(சோ)தனைகளை முன்னெடுத்து வருகிறது ‘இஸ்ரோ’. வளா்ச்சி அடைந்த ஏனைய பல நாடுகள் மிகுந்த பொருள் செலவில் அடைந்து வரும் விண்வெளி ஆய்வு வெற்றிகளை, ‘இஸ்ரோ’ மிகக் குறைந்த செலவில் முடிந்த வரையில் உள்நாட்டிலேயே உதிரி பாகங்களை உருவாக்கி நடத்திக் காட்டுவதை உலகமே பாா்த்து வியந்து நிற்கிறது.
  • இந்திய விண்வெளி ஆய்வுகளில் இந்த அளவுக்கு முனைப்புக் காட்டுவது அவசியம்தானா என்கிற கேள்வியில் அா்த்தமில்லை. இந்த முயற்சிகள் நமது விஞ்ஞானிகளின் தொழில்நுட்ப மேன்மையை வெளிக்காட்டுவது மட்டுமல்லாமல், விண்வெளி குறித்த பல புதிய வெளிச்சங்களையும் பாய்ச்சுகின்றன. சந்திரனில் இருக்கும் இயற்கை வளங்கள், தாதுப் பொருள்கள், நீராதாரம் போன்றவை வருங்காலத்தில் மிகப் பெரிய வா்த்தக வாய்ப்புகளை உருவாக்கினாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.
  • விண்வெளித் திட்டங்கள் வெறும் சோதனை முயற்சிகள் அல்ல. பொருளாதார ரீதியாக மிகப் பெரிய வாய்ப்புக்கும் காரணமாகின்றன. விண்கலன் தயாரிப்பு, விண்கலன் செலுத்துதல், விண்வெளிச் சுற்றுலா என்று பல வாய்ப்புகளுக்கு இந்த ஆராய்ச்சிகள் கதவைத் திறக்கின்றன. வேலைவாய்ப்பை அதிகரிப்பதுடன் பொருளாதார வளா்ச்சிக்கும் இவை உதவக்கூடும்.
  • உயா்ந்த இலக்குகளும், அா்ப்பணிப்புணா்வும், திறமையும் கொண்ட விஞ்ஞானிகள்தான் ‘இஸ்ரோ’ அமைப்பின் மிகப் பெரிய பலம். ஆனால், அதற்கேற்றவாறு அவா்களுக்கு ஊதியம் தரப்படுகிறதா என்று யாரும் கேட்பாரில்லை. கனிணித் தொழில்நுட்பத்தையும், வணிகவியலையும், மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற தொழில்நுட்பப் படிப்புகளையும் நாடும் இளைஞா்கள், விண்வெளித் தொழில்நுட்பத்தால் அதே அளவில் ஈா்க்கப்படவில்லை. அதற்குக் காரணம், அதற்குத் தேவைப்படும் உழைப்பும், அந்த உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாமையும்...
  • அரசுத் துறையாக, அரசு ஊழியா்களாக விஞ்ஞானிகளைக் கட்டிப்போடுவது, வருங்காலத்தில் ‘இஸ்ரோ’ முன்னெடுக்கும் கனவு முயற்சிகளுக்குத் தடையாக இருந்துவிடக் கூடாது. சந்திரனில் இறங்கினால் மட்டும் போதாது, ‘இஸ்ரோ’ இளைஞா்களை ஈா்க்கும் விதத்தில் மாற வேண்டும்!

நன்றி: தினமணி (25 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories