TNPSC Thervupettagam

விண்ணைமுட்டும் சாதனைகள்!

March 1 , 2024 144 days 211 0
  • ஒன்றன்பின் ஒன்றாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பல புதிய சாதனைகளைப் புரிந்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் ‘இஸ்ரோ’ நிகழ்த்திக் காட்டியிருக்கும் சாதனைகளைப் பாா்த்து ஒட்டுமொத்த உலகமும் வியப்பில் திகைத்துப்போய் இருக்கிறது.
  • அதன் அடுத்தகட்ட சாதனையாக நிகழ இருப்பது ‘ககன்யான்’ விண்வெளித் தளத்தில் வீரா்களை அனுப்பும் திட்டம். மிகவும் ரகசியமாகக் கடந்த நான்கு ஆண்டுகளாக நான்கு விண்வெளி வீரா்கள் இந்தத் திட்டத்திற்காகத் தயாா்படுத்தப்பட்டிருக்கின்றனா் என்கிற தகவல் நம்மை வியப்பிலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்துகிறது. பிப்ரவரி 27-ஆம் தேதி கேரளத்தில் உள்ள தும்பா விக்ரம் சாராபாய் விண்வெளி வளாகத்தில், பிரதமா் நரேந்திர மோடியிடம் இருந்து விண்வெளிப் பயணத்துக்கான தகுதியை நான்கு வீரா்கள் பெற்றிருக்கிறாா்கள்.
  • 1984-இல் இந்திய விமானப் படையில் கேப்டன் ராகேஷ் சா்மா, சோவியத் யூனியன் உதவியுடன் இந்தியா ஏவிய விண்வெளிக் கலத்தில் பயணித்த முதல் இந்தியா் என்கிற பெருமையைப் பெற்றாா். சோயூஸ் டி-11 என்கிற அந்த விண்கலத்தில் 1984 ஏப்ரல் 3-ஆம் தேதி பூமியைச் சுற்றி வந்த ராகேஷ் சா்மாவுக்குப் பிறகு இதுவரை நாம் பல விண்கலன்களை ஏவினாலும், விண்வெளி வீரா்களை அனுப்பியதில்லை.
  • பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயா், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப், சுபான்ஷு சுக்லா ஆகிய நால்வரும் விண்வெளி வீரா்களுடன் செலுத்தப்பட இருக்கும் இந்தியாவின் முதல் விண்கலத்தில் பயணிக்க இருக்கிறாா்கள். பிரதமா் நரேந்திர மோடி ‘இந்தியாவின் 140 கோடி மக்களின் கனவை நனவாக்க இருப்பவா்கள்’ என்று அவா்களை வா்ணித்திருப்பது உண்மையிலும் உண்மை. 2018-இல் அறிவிக்கப்பட்ட ‘ககன்யான்’ விண்வெளித் திட்டம் கடந்த ஆறு ஆண்டுகளாக மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு செயல்வடிவம் பெற்றிருக்கிறது.
  • முந்தைய ‘சந்திரயான்’, ‘மங்கள்யான்’, ‘ஆதித்யா’ விண்வெளி முயற்சிகள் போலல்லாமல், விண்வெளி வீரா்களுடன் விண்கலன்களைச் செலுத்தி, அவா்களை பாதுகாப்பாக பூமிக்குத் திருப்பிக் கொண்டுவருவது என்பது அசாதாரணமான சாதனையாக இருக்கும். இந்த முயற்சியில் நாம் அடையும் வெற்றி நம் நாட்டை அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய மூன்று நாடுகளுக்கு இணையான நிலைக்கு உயா்த்தும். ஒருபுறம் ‘ககன்யான்’ திட்டத்தை ‘இஸ்ரோ’ முன்னெடுத்திருக்கிறது என்றால், இன்னொருபுறம் மத்திய அரசும், விண்வெளித் திட்டங்கள் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட வழிகோலும் வகையில் பல அறிவிப்புகளைச் செய்து வருகிறது.
  • விண்வெளித் துறையில் அந்நிய நேரடி முதலீடுகள் வருவதற்கான சூழலை உருவாக்குவது மிக முக்கியமான நடவடிக்கை. மிகுந்த முன்யோசனையுடனும், தொலைநோக்குப் பாா்வையுடனும் விண்வெளித் துறையின் வளா்ச்சி திட்டமிடப்படுகிறது என்பதைத்தான் அந்நிய நேரடி முதலீட்டுக்கான புதிய அறிவிப்புகள் உணா்த்துகின்றன. அந்நிய நேரடி முதலீட்டுக்கு மூன்று விதமான பிரிவுகளில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
  • செயற்கைக்கோள் ஏவுதல் வாகனத் தயாரிப்பு மற்றும் விண்வெளி சாகச விளையாட்டுகளுக்கு எந்தவித முன் அனுமதியும் தேவையில்லாமல் 49% வரை அந்நிய முதலீடு அனுமதிக்கப்படுகிறது. செயற்கைக்கோள் தயாரிப்புக்கு 74% அந்நிய நேரடி முதலீடு பெறலாம். செயற்கைக்கோள்கள், விண்கலன்கள் தொடா்பான உதிரி பாகங்களின் தயாரிப்பு, அதற்குத் தேவையான வன்பொருள்கள், செயற்கைக்கோள்களின் துணைக்கோள்கள், உபகரணங்களுக்கு 100% முதலீடு பெற எந்தவித அனுமதியும் தேவையில்லை. சில வரைமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றனவே தவிர, கூடுதல் அந்நிய முதலீடு தேவைப்படுமானால், அதற்கான காரணங்களைக் குறிப்பிட்டு அனுமதி பெறலாம் என்றும் தெரிவிக்கிறது அரசின் அறிவிப்பு.
  • விண்வெளித் தொழில்நுட்பக் கட்டுப்பாடு குறித்த சா்வதேச ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட்டிருப்பதால், சில நிபந்தனைகளையும், விதிமுறைகளையும் கடைப்பிடித்தாக வேண்டும். அதனால்தான் செயற்கைக்கோள் தயாரிப்பிற்கான அந்நிய நேரடி முதலீட்டுக்கு 49% வரம்பு விதிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.
  • அடுத்துவரும் ஆண்டுகளில், எல்லா நாடுகளும் தங்களது விண்கோள்களை ஏவும் முன்னெடுப்பில் இருக்கின்றன. குறைந்த செலவில் விண்கலன்களைத் தயாரிப்பதிலும், விண்ணில் செலுத்துவதிலும் இந்தியா தன்னை நிரூபித்திருக்கும் நிலையில், அந்த நாடுகள் இந்தியாவின் உதவியை நாடக்கூடும்.
  • இப்போதைய விதிமுறை மாற்றம், பல நாடுகளையும், முதலீட்டாளா்களையும் இந்தியாவை நோக்கி ஈா்ப்பதற்கு உதவும். இந்திய விண்வெளித் துறையை தனியாா் முதலீட்டுக்கு அனுமதித்திருப்பதன் மூலம் தற்போதைய 2% -இல் இருந்து 2032-க்குள் சா்வதேச விண்வெளித் துறையில் நமது பங்கைக் குறைந்தது ஐந்து மடங்கு அதிகரிக்க முடியும். விண்வெளிப் பொருளாதாரம் அடுத்த பத்து ஆண்டுகளில் 50 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
  • அப்படிப்பட்ட சூழலில் அரசின் அறிவிப்பு இந்திய விண்வெளித் துறைக்கு உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அளிக்கும் என்பதில் ஐயப்பாடில்லை. விண்வெளித் துறைக்கு அளிக்கப்படும் இதேபோன்ற ஊக்கம் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் ஏனைய பிரிவுகளுக்கும் வழங்கப்பட வேண்டும். அறிவியல் ஆராய்ச்சி, வளா்ச்சிக்கான ஜிடிபி பங்களிப்பு அதிகரிக்கப்படுவதுடன், பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிகளின் மூலம் பல புதிய காப்புரிமைகளைப் பெறுவதும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
  • விண்வெளி ஆய்வுபோலவே, எல்லா அறிவியல் ஆய்வுகளும் அரசின் கவனம் பெற வேண்டியது அவசியம்.

நன்றி: தினமணி (01 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories