- மைல்கற்களை எட்டி, சர்வதேச அளவில் நம் நாட்டை தலைநிமிரச் செய்திருக்கிறது.
- இன்றைய காலகட்டத்தில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் பட்ஜெட் மதிப்பு ஆண்டுக்கு ரூ.10,000 கோடியைத் தாண்டிவிட்டது. 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் தொகை ரூ.6,000 கோடி அளவில்தான் இருந்தது.
- அதேவேளையில், இந்தியாவில் விண்வெளிசார் சேவைகளின் தேவை, இஸ்ரோவின் அளிப்பு (சப்ளை) வீதத்தைக் காட்டிலும் மிகவும் அதிகமாகவே உள்ளதை மறுக்க முடியாது. இதை ஈடுசெய்ய வேண்டுமாயின், விண்வெளித் துறையில் தனியார் முதலீடு இன்றியமையாதது.
- இதற்கு பொருத்தமான கொள்கை உருவாக்கப்பட வேண்டியது அவசியம். மேலும், விண்வெளித் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதிப்படுத்த தேசிய அளவில் சட்டமியற்றுவதும் கட்டாயமாகிறது.
விண்வெளிப் பயணம்
- சர்வதேச அளவில் இந்தியாவின் விண்வெளி ஆய்வுப் பயணத்தை விரிவுபடுத்த தனியார் துறையினரை வரவேற்கும் வகையில் புதிய மசோதாவுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளது.
- கடந்த 1969-ஆம் ஆண்டு இஸ்ரோ தொடங்கப்பட்டது முதல் பரந்த சமூக நோக்கங்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் முதலாவதாக தொலைத்தொடர்பு, ஒலிபரப்பு, அகண்ட அலைவரிசை, உள்கட்டமைப்பு போன்ற நோக்கங்களை அடைவதற்கு முதுகெலும்பாகத் திகழும் இன்சாட், ஜிசாட் செயற்கைக்கோள்களுக்கு இஸ்ரோ முக்கியத்துவம் அளித்தது.
- படிப்படியாக, பெரிய வகை டிரான்ஸ்பாண்டர்களை சுமந்து செல்லக்கூடிய செயற்கைக்கோள்கள் வடிவமைக்கப்பட்டன. தற்போது தொலைத்தொடர்பு, தொலை மருத்துவம், தொலைக்காட்சி, அலைவரிசை, வானொலி, பேரிடர் காலத்தில் மீட்பு மற்றும் தேடுதல் பணி எனச் சகலவிதமான தரவுகளையும் சுமார் 200 டிரான்ஸ்பாண்டர்கள் நமக்கு வழங்குகின்றன.
புவியியல் தகவல் அமைப்புகளின் செயலிகள்
- இரண்டாவதாக, புவிக்கோளை உன்னிப்பாக கண்காணித்து காலநிலையைக் கணிப்பது, பேரிடர் மேலாண்மை, தேசிய வள வரைபடம் தயாரித்தல் மற்றும் திட்டமிடுவதற்கு விண்வெளி அடிப்படையிலான படங்களை இஸ்ரோ பயன்படுத்துகிறது.
- இங்கு வளம் என்கிற பதத்தில் வேளாண்மை, நீர்நிலைகள், நில வளம், வன மேலாண்மை ஆகியன அடங்கும். தெளிவான நிலைத்தன்மையுடன் புவியியல் தகவல் அமைப்புகளின் செயலிகள் இன்றைக்கு கிராமப்புற மற்றும் நகர்ப்புற மேம்பாடு, திட்டமிடலின் அனைத்துக் கோணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளன.
- மேலும், பல விண்வெளி ஆய்வுப் பணிகளை இஸ்ரோ தொடங்கியுள்ளது. இதில், சந்திரயான் மற்றும் மங்கள்யான் திட்டங்களைப் பெருமிதத்தோடு குறிப்பிட முடியும். மேலும், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் வகையில் ககன்யான் விண்கலம் வரும் 2021-இல் அதன் முதல்கட்ட சோதனைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.
- இதுபோன்ற இலக்குகளை வெறும் தொழில்நுட்ப வளர்ச்சி என்றில்லாமல், விண்வெளி அறிவியல் பாதையில் அதன் எல்லையை விரிவுபடுத்தும் உத்தி என்றே கருதலாம்.
- தொழிற்சாலைகளுடன் அதிலும் குறிப்பாக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் போன்ற பொதுத் துறை நிறுவனங்களுடனும், மிகப் பெரிய தனியார் நிறுவனங்களுடனும் இஸ்ரோ உறுதியான உறவைப் பேணி வருகிறது. பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் தொழில்நுட்ப கட்டமைப்புகளுக்குத் தேவையான உள்ளீடுகளை வழங்குகின்றன.
ஆய்வின் செலவினம்
- தற்போது சர்வதேச விண்வெளி ஆய்வின் ஒட்டுமொத்த செலவினம் ஆண்டுக்கு ரூ.35,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், விண்வெளி ஆய்வில் வல்லரசு நாடுகளுக்கே சவால் விடும் இந்தியாவின் பங்களிப்பு வெறும் 2 சதவீதம்தான் உள்ளது.
- மேலும், சர்வதேச நாடுகளின் விண்வெளி ஆய்வு செலவினம் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் ரூ.55,000 கோடியாக உயரும் எனக் கணக்கிடப்படுவதால், இந்த இலக்கில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இதற்கு தெளிவான விதிமுறைகளும், ஒழுங்குமுறைகளும் அத்தியாவசியம்.
- சர்வதேச அளவில் சிறிய ரக செயற்கைக்கோள் புரட்சி அதன் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் சர்வதேச அளவில் 17,000 சிறிய ரக செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சில ஆண்டுகளுக்கு முன்பு, கிராமப் பஞ்சாயத்து மற்றும் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் கிராம வள மையங்கள் ("வில்லேஜ் ரிசர்வ்ஸ் சென்டர்') என்கிற யோசனையை இஸ்ரோ முன்னெடுத்தது. இதை கிராமப்புறங்களில் விரிவுபடுத்துவது சவாலாக இருந்தாலும், "ஜன்தன் யோஜனா' போன்றவற்றின் அங்கமாகக் கருதினால், கிராமப்புறத்தை உருமாற்றம் செய்யக்கூடிய திறன் இந்தத் திட்டத்துக்கு உண்டு என்பது புலப்படும்.
- தற்போது பாதுகாப்பு விண்வெளி நிறுவனம் மற்றும் பாதுகாப்பு விண்வெளி ஆய்வு அமைப்பை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் நிறுவியுள்ளது. இந்தத் தருணத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வில் இந்தியாவின் பங்களிப்பை அடுத்த பத்தாண்டுகளில் குறைந்தது 10 சதவீதமாவது உறுதிப்படுத்தும் வகையில், தனியார் துறையுடனும், புதிய விண்வெளி தொழில்முனைவோருடனும் இஸ்ரோ உடன்பாடு செய்து கொள்வது அவசியம்.
நன்றி: தினமணி (23-09-2019)