TNPSC Thervupettagam

விண்வெளி குளிருமா

January 17 , 2024 224 days 256 0
  • விண்வெளி பிரம்மாண்டமானது. அங்கே கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் எரிந்துகொண்டு இருக்கின்றன. அவற்றில் ஒரு நட்சத்திரம்தான் சூரியன். சூரியன் பூமிக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரம் என்று சொல்லப்பட்டாலும் அவை இரண்டுக்குமான இடைவெளி சுமார் 15 கோடி கிலோ மீட்டர்கள். ஆனால், அவ்வளவு தொலைவில் இருந்தும் சூரியனின் வெப்பம் பூமியைக் கடுமையாக வாட்டுகிறது.
  • ஒரு சூரியனுக்கே இந்த நிலை என்றால், விண்வெளி முழுவதும் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. சில நட்சத்திரங்கள் சூரியனைவிட அளவில் மிகப் பெரிதாக இருக்கின்றன. அத்தனை நட்சத்திரங்கள் இருந்தால், விண்வெளி எங்கும் வெப்பம் பரவிக் கொதிக்க வேண்டும் அல்லவா? ஆனால், விண்வெளி குளிர்ச்சியான இடம் என்று சொல்கிறார்களே, ஏன்?
  • உண்மையில் விண்வெளி குளிராகவும் இருக்காது, வெப்பமாகவும் இருக்காது. விண்வெளி என்பது எதுவும் அற்ற வெளி. அது ஒரு வெற்றிடம். வெற்றிடத்தில் நம்மால் வெப்பத்தை உணர முடியாது. இது ஏன்?
  • முதலில் வெப்ப மாற்றம் குறித்துப் பார்ப்போம். இரண்டு பொருள்களுக்கு இடையே வெப்பநிலை வேறுபடும்போது வெப்பப் பரிமாற்றம் நடைபெறுகிறது. இந்த வெப்ப மாற்றம் வெப்பக்கடத்தல், வெப்பச்சலனம், வெப்பக்கதிர்வீச்சு ஆகிய மூன்று வழிகளில் நடைபெறுகிறது.
  • அடுப்பில் நாம் பாத்திரத்தை வைக்கும்போது ஓர் இடத்தில் படும் தீயால் முழுப் பாத்திரமும் கொதிக்கிறது இல்லையா? இதுதான் வெப்பக்கடத்தல். இதில் இரண்டு பொருள்கள் ஒன்றுடன் மற்றொன்று தொட்டுக்கொண்டிருக்கும்போது உயர் வெப்பநிலையிலுள்ள பொருளிலிருந்து குறைந்த வெப்பநிலை உள்ள பொருளுக்கு வெப்பம் மாற்றப்படுகிறது.
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்துத் தீ மூட்டும்போது கீழே மட்டும் தீ எரிந்தாலும் அதன் சூடு, நீர் முழுவதும் பரவுகிறது அல்லவா? இதுதான் வெப்பச்சலனம். திரவங்கள், வாயுக்கள் போன்ற பாய்மங்களில் உள்ள மூலக்கூறுகளின் நகர்வினால் வெப்ப ஆற்றல் மாற்றப்படுவதை நாம் வெப்பச்சலனம் என்கிறோம்.
  • மூன்றாவது வெப்பக்கதிர்வீச்சு. சூரிய வெப்பம் பூமியைத் தாக்குவதும், சூடான பொருளின் பக்கத்தில் நாம் கைகளை எடுத்துச் சென்றாலே வெப்பத்தை உணர்வதும் இந்த வெப்பக்கதிர்வீச்சால்தான்.
  • வெப்பக்கதிர்வீச்சு மூலம் வெப்பம் பரவுவதற்கு நாம் நேரடியாக வெப்பத்தை உருவாக்கும் பொருளுடன் தொடர்புகொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. அவை பரவுவதற்கு ஊடகங்களும் அவசியமில்லை. இதனால்தான் சூரியனில் உள்ள வெப்பம் வெற்றிடத்தைக் கடந்து நம் பூமியை வந்தடைந்து விடுகிறது.
  • ஆனால், விண்வெளி எங்கும் நட்சத்திரங்கள் இருந்தும் வெப்பம் பரவாததற்கு முதல் காரணம், அது வெற்றிடம் என்பதுதான். அங்கே வெப்பத்தைக் கடத்தும் துகள்கள் போதுமான அளவு இல்லை என்பதால் நட்சத்திரங்களிலிருந்து வெளிவரும் வெப்பம் பிற பொருள்களைச் சென்று அடைவதில்லை. பூமியில் வெப்பம் பரவுவதற்குக் காற்றில் உள்ள மூலக்கூறுகள் உதவுகின்றன. ஆனால், வெற்றிடத்தில் அவ்வளவாகத் துகள்கள் கிடையாது என்பதால் வெப்ப ஆற்றலைக் கடத்தி, விண்வெளி எங்கும் எடுத்துச் செல்வதற்கு எந்த ஊடகமும் கிடையாது.
  • அதே நேரம் ஊடகம் இல்லாமலேயே பரவும் வெப்பக்கதிர்வீச்சு மூலமும் வெப்பம் பரவாததற்குக் காரணம், கதிர்வீச்சால் பாதிக்கப்படும் பொருள்கள் குறிப்பிட்ட காலத்தில் வெப்பத்தை இழந்துவிடுகின்றன என்பதுதான்.
  • கதிர்வீச்சை உமிழும் பொருள்களும் கதிர்வீச்சால் பாதிக்கப்படும் பொருள் களும் தொடர்ந்து வெப்பத்தை வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றன. இதனால், வெப்பத்தை இழந்துகொண்டே இருக் கின்றன. அவை தொடர்ந்து சூடேற்றப்படவில்லை என்றால், ஒருகட்டத்தில் வெப்பம் அனைத்தும் தீர்ந்துபோய் அந்தப் பொருள் குளிர்ந்துவிடும்.
  • விண்வெளிப் பொருள்கள் அனைத்தும் நட்சத்திரங்களிடம் இருந்து வெப்பத்தைப் பெற்றாலும் அவை வெப்பத்தைத் தொடர்ந்து இழப்பதால் குளிர்ந்துவிடுகின்றன. அவை சூடாகவே இருப்பதற்கு நட்சத்திரங்களின் அருகிலேயே இருப்பது அவசியம். ஆனால், விண்வெளிப் பொருள்கள் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருப்பவை. அவை நிலையான சூட்டில் இருக்காது.
  • விண்வெளியில் வெப்பம் அதிகரிக் காததற்கு இன்னொரு காரணம், நட்சத்திரங் களுக்கு இடையே இருக்கும் தொலைவு மிக மிக அதிகம். இரவு வானத்தைப் பார்க்கும்போது நிறைய நட்சத்திரங்கள் அருகருகே இருப்பதுபோல் தோன்றலாம். ஆனால், அவற்றுக்கு இடையேயான தொலைவு கோடிக்கணக்கான கிலோ மீட்டர்களாக இருக்கும்.
  • உதாரணமாகச் சூரியனுக்கு அடுத்து நம் அருகில் இருக்கும் பிராக்ஸிமா சென்டாரி எனும் நட்சத்திரம் சூரியனிலிருந்து 4.3 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளது. இங்கிருந்து ஒரு கார் புறப்பட்டு மணிக்கு 60 மைல் வேகத்தில் நகர்கிறது என்றால், அது பிராக்ஸிமா சென்டாரியை அடைய 4.8 கோடி ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இவ்வளவு தொலைவில் நட்சத்திரங்கள் இருக்கும்போது, அவற்றால் பாதிக்கப்படும் பொருள்கள் விரைவாகக் குளிர்ந்துவிடுகின்றன. இதனால்தான் விண்வெளி முழுவதும் சூடு பரவாமல் இருக்கிறது.
  • இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம். கதிர்வீச்சால் பாதிக்கப்படும் பொருள்கள் வெப்பத்தை இழந்துவிடும் என்றால், பூமி மட்டும் ஏன் சூடாகவே இருக்கிறது?
  • பூமி சூடாகவே இருப்பதற்குக் காரணம் நமது வளிமண்டலம். வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள் போர்வைபோல் செயல்பட்டு வெப்பம் வெளியேறாமல் தடுத்துவிடுகின்றன. இதனால், சூரியனில் இருந்து பூமிக்கு வரும் வெப்பம் திரும்பிச் செல்ல வழி இல்லாததால் நமது பூமி சூடாகவே இருக்கிறது.
  • இதுவே நீங்கள் நிலவுக்குச் சென்றால் நிலைமையே வேறு. அங்கே பூமியைப் போன்ற வளிமண்டலம் இல்லாததால் திடீரென அதிக வெப்பத்தை உணர்வீர்கள், திடீரென வெப்பத்தைக் குறைவாக உணர்வீர்கள். நட்சத்திரங்களுக்கு அருகில் இருக்கும் வரை நிலையான வெப்பம் என்பதே விண்வெளியில் கிடையாது.
  • விண்வெளி ஏன் வெப்பமாக இருப்பது இல்லை என்பதைச் சுருக்கமாகச் சொல்வ தென்றால், விண்வெளிப் பொருள்கள் நட்சத்திரங்களின் கதிர்வீச்சால் கிடைக்கும் வெப்பத்தைவிட, அதிக வெப்பத்தை வெளியிடுகின்றன என்பதால் அவை குளிர்ந்துவிடுகின்றன. இன்னொன்று அங்கு வெப்பம் பரவுவதற்கும் வழி கிடையாது.

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories