TNPSC Thervupettagam

விண்வெளி செல்லும் இந்தியர்கள்

August 21 , 2024 145 days 335 0

விண்வெளி செல்லும் இந்தியர்கள்

  • மனிதர்களை விண்வெளி ஆராய்ச்​சிக்கு அனுப்புவது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) நெடுங்​காலக் கனவு. ககன்யான் என்கிற திட்டம் மூலம் அக்கனவு நனவாகப்​போகிறது. இத்திட்​டத்​துக்கான குழுவில் இடம்பெற்றுள்ள வீரர்கள், பிப்ர​வரியில் அறிமுகப்​படுத்​தப்​பட்​டனர். திருவனந்​த​புரத்தில் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் நடந்த இந்நிகழ்ச்​சியில் பிரதமர் நரேந்திர மோடி, இவ்வீரர்​களைக் கௌரவித்​தார்.
  • இந்தியரான ராகேஷ் ஷர்மா, 1984இலேயே விண்வெளிக்குச் சென்றிருந்​தா​லும், ககன்யான் திட்டம் கூடுதல் சிறப்பு வாய்ந்தது. இம்முறை குழுவில் ஷுபான்ஷு சுக்லா, பிரசாந்த் பாலகிருஷ்ணன், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் ஆகிய நான்கு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
  • நால்வரில், விங் கமாண்டர் ஷுபான்ஷு சுக்லா பயணத்தை முன்னெடுக்கும் பொறுப்பில் இருப்​பார். குழுத் தலைவர்​களில் ஒருவரான பிரசாந்த் பாலகிருஷ்ணன் அவருக்கான மாற்றாக இருப்​பார். இந்தியா​விலேயே தயாரிக்​கப்பட்ட விண்கலத்தில் இப்பயணத்தை அவர்கள் மேற்கொள்ள இருக்​கின்​றனர். இவ்வீரர்கள் ‘ககன் யாத்ரி’ எனப்படு​கின்​றனர். வடமொழியில் ‘ககன்’ என்றால் வானம் என்று பொருள்.

ககன்யான் தனிச்​சிறப்பு:

  • ராகேஷ் சர்மா, 1984இல் இரண்டு சோவியத் ஒன்றிய வீரர்​களுடன் விண்வெளிக்குப் பயணம் செய்தார். விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் என்கிற பெருமை அவருக்குக் கிடைத்தது. சோவியத் ஒன்றியம் - இந்தியாவின் கூட்டுழைப்பில் நிகழ்ந்த இப்பயணம், சோவியத் ஒன்றி​யத்தில் தயாரான ‘சோயுஸ் டி11’ என்கிற விண்கலம் மூலமே நிகழ்ந்தது.
  • ககன்யான் திட்டத்​துக்கான விண்வெளிப் பயணம், இந்தியாவின் சொந்தத் தயாரிப்பான விண்கலம் மூலம் நிகழ உள்ளது. ஏறக்குறைய ரூ.9,000 கோடி செலவில் மேற்கொள்​ளப்​படும் இத்திட்​டத்தின் மூலம் அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், சீனாவைத் தொடர்ந்து விண்வெளிக்கு மனிதரைச் சொந்த விண்கலத்தில் அனுப்பும் நான்காம் நாடு என்கிற பெருமையை இந்தியா பெறவிருக்​கிறது.
  • இத்திட்டத்​துக்கான வேலைகள் 2012இலிருந்தே செய்யப்​பட்டு​வந்தன. இந்திய சுதந்திர தினத்தின் 75ஆம் ஆண்டு நிறைவான 2022இல் ககன்யான் பயணம் தொடங்கும் என 2018இல் பிரதமர் மோடி அறிவித்​தார். எனினும், கரோனா தொற்று காரணமாக இப்பயணத்​துக்கான வேலைகள் பாதிக்​கப்​பட்​டதால் இப்பயணம் தள்ளிவைக்​கப்​பட்டது. இப்போது வேலைகள் இறுதிக்​கட்​டத்தை எட்டி​யுள்ளன.

முன்த​யாரிப்பு வேலைகள்:

  • சந்திரயான் - 3 திட்டத்தில் பயன்பட்ட எல்விஎம் 3 என்கிற ஏவூர்தி (ராக்​கெட்), ககன்யான் திட்டத்​துக்கும் பயன்படுத்​தப்பட உள்ளது. ஸ்ரீஹரிகோட்​டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்​திலிருந்து இது செலுத்​தப்​படும். மனிதர்​களைச் சுமந்​துசெல்லும் விண்கலத்தைத் தாழ் விண்வெளிப் பாதையில் பயணிக்கச் செய்வதுதான் ககன்யான் திட்டத்தின் முதன்​மையான நோக்கம். திட்டத்தின் ஒவ்வொரு கூறும் சோதிக்​கப்​பட்டு வருகிறது.
  • அவை தோல்வி​யுறும் விகிதம் குறிப்​பிட்ட எண்ணிக்கைக்குக் குறைவாக இருந்தால் மட்டுமே, வீரர்​களுடன் இப்பயணம் மேற்கொள்​ளப்​படும். தேர்ந்​தெடுக்​கப்பட்ட நான்கு வீரர்​களுக்கும் ரஷ்யா பயிற்சி அளித்​ததுடன், மனிதரை ஏற்றிச் செல்லும் விண்கலத்தை உருவாக்கத் தொழில்​நுட்ப உதவியையும் வழங்கி​யுள்ளது. ரஷ்யாவில் உள்ள பயிற்சி மையத்தில் 13 மாதங்​களுக்கு ககன்யான் வீரர்​களுக்குப் பயிற்சி அளிக்​கப்​பட்டது. அதன் பின் பெங்களூருவில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்​சி பெற்றனர்.
  • சர்வதேச விண்வெளி நிலையத்தின் பாகங்​களைக் கையாள்​வதற்கும் விதி​முறை​களைப் பின்பற்று​வதற்​குமான பயிற்சி இங்கு நடைபெறும். உடல் - மனநலப் பயிற்​சி​யோடு, விண்வெளியில் உள்ள சூழலைப் பூமியிலேயே உணரத்​தகுந்த வகையிலான ‘சிமுலேட்டர்’ பயிற்​சியும் இதில் உண்டு.
  • அடுத்​த​படியாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா டெக்சாஸில் உள்ள ஹூஸ்டன் விண்வெளி மையத்தில் இவர்களுக்கு உயர்நிலைப் பயிற்சி அளிக்​க​வுள்ளது. ககன்யான் ஆராய்ச்சி, பூமியி​லிருந்து 400 கி.மீ. உயரத்தில் நடக்கும்.
  • இந்த விண்கலம் மனிதர்களை ஏற்றிச் செல்லும் திறன் சார்ந்த தரத்தை அறிவதற்கான சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று​வரு​கின்றன. விண்கலத்தில் உள்ள சுற்றுச்​சூழல் கட்டுப்​பாடு, உயிர் வாழ்தலுக்குத் தேவையான சூழல், பயணிகளின் உடல்நலத்தைப் பேணுவதற்கான ஒட்டுமொத்த அமைப்பு ஆகியவற்றைப் பொறியாளர்கள் தினமும் பரிசோ​தித்து வருகின்​றனர்.
  • எதிர்​பாராத நெருக்​கடிகளின்போது தப்பிக்கும் சாத்தி​யங்​களைச் சோதனை செய்து பார்க்கும் ‘பேட் அபார்ட்’ சோதனையும் ‘ஹை அல்டிடியூட்’ சோதனையும் முடிந்​து​விட்டன. இவர்களது பயணம், பயணிகள் நடவடிக்கைகளுக்கான பல்லடுக்குக் குழுவால் அங்கீகரிக்​கப்பட வேண்டும். ஆளற்ற விண்கலத்தை இருமுறை செலுத்தி சோதனை செய்யப்படும். எல்லாம் திருப்​தி​கரமாக இருந்தால் மட்டுமே வீரர்கள் பயணம் செய்வார்கள். 2024 இறுதியில் ககன்யான் ஆய்வுப் பயணம் தொடங்கத் திட்ட​மிடப்​பட்டுள்ளது.

ராகேஷ் சர்மாவும் ககன்யான் வீரர்​களும்:

  • ராகேஷ் சர்மா உள்ளிட்ட வீரர்கள், விண்வெளியில் உள்ள சால்யுட் 7 என்கிற நிலையத்தில் தங்கி, ஏறக்குறைய 8 நாள்கள் ஆய்வு செய்தார்கள். விண்வெளியி​லிருந்து இந்தியாவை ஒளிப்படம் எடுப்பது, யோகா பயிற்சி உடல் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை எடை உணரப்பட முடியாத சூழலில் ஆய்வுசெய்வது போன்ற​வற்​றையும் அப்பணி உள்ளடக்கி​யிருந்தது.
  • ககன்யான் வீரர்கள், விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) 3 நாள்கள் தங்கி ஆய்வுசெய்வர். தகவல் தொடர்பு, தொலையுணர்​திறன் போன்ற​வற்றை மேம்படுத்து​வதற்கான வழக்கமான செயற்​கைக்​கோள்​களையும் கடந்து, ககன்யான் மூலம் ஆய்வுப் பணிகள் நடக்க உள்ளன.

அமெரிக்​காவின் பங்களிப்பு:

  • 2023இல் பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சந்தித்ததை அடுத்து, 2024இல் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்​துக்கான பயணம் ஒன்றை இரண்டு நாடுகளும் கூட்டு முயற்​சி​யுடன் திட்ட​மிடுவதாகக் கூட்டாக அறிக்கை வெளியிட்டன.
  • ஹூஸ்டன் நகரில் செயல்​படும் ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்​துடன் இஸ்ரோவின் ‘மனிதர் பயணிப்​ப​தற்கான விண்கல மையம்’ ஒப்பந்தம் செய்துள்ளது. நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸுடன் ஒப்பந்தம் இட்டுச் செயல்​பட்டு​வரு​கிறது. சர்வதேச விண்வெளி நிலையத்​துக்கு இந்நிறுவனம் வீரர்களை வழிநடத்​தும்.

பயன்பாடுகள்:

  • ஐயத்துக்கு இடமற்ற, சிறப்பான செயல்​விளக்​கங்​களுடன் கூடிய அறிவியல் தொழில்​நுட்பச் சோதனைகளை (demonstration experiments) விண்வெளியில் இந்திய வீரர்கள் மேற்கொள்​வார்கள்; குறிப்பாக, சர்வதேச விண்வெளி நிலையத்​திலிருந்து ஐந்து வகையான பரிசோதனைகளை மேற்கொள்வர்.
  • இது மனிதர் மேற்கொள்ளும் விண்வெளிப் பயணம் தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்​பை மேம்படுத்​தும் எனக் கூறப்​படு​கிறது. இத்​திட்டம்​ தனி​யார் செயற்​கைக்​கோள்களை இயக்​க​வும் உத​வும் என எ​திர்​பார்க்​கப்​படு​கிறது. இதன் அடிப்​படை​யில் ​விண்​வெளித் துறை​யில் இந்தியா​வின் செல்​வாக்கு உயரும் என அறி​வியலாளர்கள்​ நம்​பிக்கை தெரிவிக்கின்றனர்.

நன்றி: இந்து தமிழ் திசை (21 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories