விண்வெளித்துறை முன்னோடி
- அறிவியல் தொழில்நுட்பக் கல்வியிலும் விண்வெளி ஆராய்ச்சித் துறையிலும் தடம் பதித்து, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த ஆர்.எம்.வாசகம் (ராமசாமி மாணிக்கவாசகம்) மறைந்துவிட்டார். முதல் தலைமுறை இந்திய அறிவியலாளர்களில் மிக முக்கியமான ஆளுமை இவர்.
சாதனை செய்த பொறியாளர்:
- ஆர்.எம்.வாசகம் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் ராமசாமி மாணிக்கவாசகம், ஈரோட்டில் பிறந்து, கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் இளநிலை பொறியியலும், மெட்ராஸ் ஐஐடி-யில் முதுநிலைப் பொறியியலும் படித்தவர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில், அதன் ஆரம்பக் காலத்தில் சேர்ந்த இந்தியப் பொறியாளர்களில் இவரும் ஒருவர்.
- ஏவுகலன் தொழில்நுட்பம், செயற்கைக்கோள் தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சிகளுக்குத் தேவையான முன்னோக்கிய பார்வை, பெரிய குழுவை முன்னெடுத்துச் செல்லும் தலைமைப் பண்பு உள்ளிட்ட பன்முகத் திறமைகள்தான் விண்வெளி அறிவியல் தொழில்நுட்பத்தின் முக்கிய அங்கங்கள். இவை எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியவர் ஆர்.எம்.வாசகம்.
- 1981இல் இந்திய விண்வெளி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, முதல் முறையாக 36,000 கி.மீ. உயரப் புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட முதல் தொலைத்தொடர்புக்கான செயற்கைக்கோளான - ‘ஆப்பிள்’ (Ariane Passenger Payload Experiment - APPLE) திட்டத்தின் திட்ட இயக்குநராக இருந்தவர் ஆர்.எம்.வாசகம்.
- ஐரோப்பிய நாடுகளின் ஒன்றிணைந்த குழுவால் விண்ணுக்கு முதல் முதலாக அனுப்பப்பட்ட ‘ஏரியேன்’ விண்கலத்தில் சென்ற முதல் ஆசிய செயற்கைக்கோள் என்கிற பெருமையை நமது இந்தியச் செயற்கைக்கோளுக்குப் பெற்றுத் தந்த பெருமையும் அவரையே சாரும். இந்தத் திட்டத்துக்குக் கிடைத்த வெற்றி பின்னாளில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளுடன் கூட்டாக உயர்நிலை விண்வெளி ஆராய்ச்சிப் பணிகள் செய்யத் தூண்டுகோலாக இருந்தது.
திறன் வாய்ந்த ஏவுகலன்கள்:
- செயற்கைக்கோள் அறிவியல் தொழில்நுட்பத்தில் ஏற்படுத்திய புதுமையைத் தாண்டி, இந்தியாவுக்குத் தேவையான விண்வெளி சார்ந்த பயன்பாடுகளுக்கான பல புதிய நடைமுறைகளுக்கும் ஆப்பிள் வழிவகுத்தது. இந்தியாவில் இப்போது செயல்பாட்டில் உள்ள தொலைத்தொடர்புத் திட்டங்களுக்கான முன்னோடி ‘ஆப்பிள்’. 1980களில் இந்திய விண்வெளி ஆராய்ச்சியில், எஸ்.எல்.வி-க்கு அடுத்து, புதிய திறன் வாய்ந்த ஏவுகலன்களுக்கான பாதை வகுக்கப்பட்டபோது, அதில் மிக முக்கிய பங்களிப்பைத் தந்தவர் ஆர்.எம்.வாசகம்.
- இப்போது பரவலாக அறிமுகமாகியுள்ள பல முன்னணி இந்திய விண்வெளி அறிவியலாளர்கள், ஊடகங்களின் விரிவும் தாக்கமும் அதிகம் இல்லாத 1980களின் ஆரம்பத்தில் இந்திய விண்வெளி ஆய்வுக்களத்தில் சேர்ந்தவர்கள் போன்றோர், ‘ஆப்பிள்’ பரிசோதனைக்குப் பின் அரசின் ஒப்புதலால் உருவான பல்வேறு விண்வெளித் திட்டங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இன்றைய விண்வெளித் திட்டங்களுக்கான காரணிகளில் ஆர்.எம்.வாசகமும் ஒருவர் என்பது மிகவும் பொருத்தம்.
சிறந்த கல்வியாளர்:
- தனக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தை நூலகத்திலும் நூல்கள் மத்தியிலும் அதிகம் கழித்த மாணிக்கவாசகம், சக அறிவியலாளர்களிடையே ‘நடமாடும் நூலகம்’ என்றும் ‘அறிவியல் களஞ்சியம்’ என்றும் செல்லமாக அறியப்பட்டவர். நவீன உலகின் முன்னேறிய நாடுகள், மிகச் சிறந்த அறிவியலாளர்களை நல்ல கல்வியாளர்களாய் மாணவர்களிடம் முன்னிறுத்தி வெற்றிகண்டுள்ளன.
- அந்த வழியில், 1996ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஆர்.எம்.வாசகத்தை, தமிழகம் இருகரம் நீட்டி வரவேற்று அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக்கிக் கௌரவித்தது. மாணவர்களாலும் செயற்கைக்கோள்கள் செய்ய முடியும் என்பதற்கு ஊக்க விதை போட்டு, பின்னாளில் இந்தியாவின் முதல் மாணவர் செயற்கைக்கோளான ‘அனுசாட்’டுக்கு அவர் வழிவகுத்தார். தனது கடைசி நாள்கள் வரை, பல கல்வி நிறுவனங்களின் - மாறிவரும் காலத்துக்கேற்ற வளர்ச்சிக்கு அவர் காரணமாக இருந்தார்.
- பத்மஸ்ரீ விருது, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான ‘ஹரி ஓம் ஆஷ்ரம் பிரிடிட் விக்ரம் சாராபாய்’ அறிவியல் விருது, சர்வதேச அளவிலான மின் - மின்னணுப் பொறியாளர்கள் நிறுவன விருது (IEEE Award) எனப் பல பெருமைமிகு விருதுகளைப் பெற்றவர் ஆர்.எம்.வாசகம். அவரது இறுதிச் சடங்கு மனைவி, இரு மகள்கள் மட்டும் கலந்துகொண்ட ஒரு சாதாரண நிகழ்வாக மட்டுமே நடந்தது, அறிவியல் உலகைத் தாண்டி இன்றைய சமுதாயம் உணர்ந்துகொள்ள வேண்டிய இன்னொரு பாடம்!
நன்றி: இந்து தமிழ் திசை (18 – 02 – 2025)