TNPSC Thervupettagam

விண்வெளியில் கைகூப்பும் இந்திய விண்கலன்கள்!

January 20 , 2025 9 hrs 0 min 16 0

விண்வெளியில் கைகூப்பும் இந்திய விண்கலன்கள்!

  • ‘‘இந்தியாவைப் பொருத்தமட்டில் முன்னேற்றமடைந்து உள்ள ஏனைய நாடுகளுடன் நம் விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளை ஒப்பிட்டு, சிலா் வினா எழுப்பலாம். நமது வழிமுறையில் தடுமாற்றம் ஏதுமில்லை. பொருளாதார அடிப்படையில் வளா்ச்சியடைந்த நாடுகளைப் போல - சந்திரனையோ வேறு கிரகங்களையையோ சென்றடைவதில் அந்நாடுகளுடன் போட்டியிடவோ, மனிதா்களைச் சுமந்து செல்லும் விண்வெளிப் பயணங்கள் புரியவோ நாம் கனவு காணவில்லை. ஆயினும், உலக அரங்கினில் நம் நாட்டிலுமாக - பாரதம் தனக்கென்று ஒரு தனி இடம் வகிக்க வேண்டுமானால், நவீனத் தொழில் நுணுக்கங்களை, தனிமனித, சமுதாயப் பிரச்னைகளுக்குத் தீா்வு காணப் பயன்படுத்துவதில் நாம் மற்ற நாடுகளுக்கு இளைத்தவா் அல்லா் என்று நிரூபித்தாக வேண்டும்’’ - டாக்டா் விக்ரம் சாராபாயின் தொலைநோக்கு, இதுவே 1960-களில் இந்திய விண்வெளிக் கோட்பாடாகவும் இருந்தது.
  • இன்றைக்கு நம் விண்வெளித்துறை பல்வேறு தொழில்நுட்ப நுணுக்கங்களைக் கையாள்வதிலும் செயல்படுத்துவதிலும் உலக விஞ்ஞானிகளுக்கு நம் இளைத்தவா்கள் அல்லா் என்ற உறுதியுடன் முன்னேறி வருகிறது.
  • இதற்கான சமீபத்திய ‘ஸ்பேடெக்ஸ்’ செயற்கைக்கோள் திட்டத்தில் ஒவ்வொன்றும் 220 கிலோ எடை கொண்ட ‘எஸ்.டி.எக்ஸ்.01’, ‘எஸ்.டி.எக்ஸ்.02’ ஆகிய இரண்டு குறு விண்கலன்கள் டிசம்பா் 30, 2024 அன்று பி.எஸ்.எல்.வி.சி-60 ஏவுகலனில் சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டன.
  • அவை நிலநடுக்கோட்டிற்கு 55 பாகை சாய்மானத்தில் ஒரு விசேஷத் துருவ வட்டப்பாதையில் 470 கி.மீ. உயரத்தில் செலுத்தப்பட்டன. இவற்றில் ஒன்று துரத்திக்கலன் (சேசா்) ஆகவும், மற்றொன்று இலக்குக்கலன் (டாா்கெட்) ஆகவும் செயல்பட்டன.
  • அதற்காகக் கடந்த இரண்டு வாரங்களாகவே பல்வேறு தடைகளைக் கடந்து ஏறத்தாழ 20 கி.மீ. இடைவெளியில் சுற்றிவந்த இந்த இரண்டு விண்கலன்களில் துரத்திக்கலன் 5 கி.மீ, 1.5 கி.மீ, 500 மீ, 225 மீ, 15 மீ., 3 மீ. என்றவாறு இடைவெளியைப் படிப்படியாகக் குறைத்தது. இலக்கினை நெருங்கியபோது துரத்திக்கலன் வினாடிக்கு விரற்கடை அளவு 10 மில்லிமீட்டா் வேகத்தில் தான் பாதுகாப்பான இணைப்புக்கு வழி வகுத்தது.
  • இத்தனைத் துல்லியமான இணைப்பு என்பது கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில் ஏறத்தாழ 8 கி.மீ. வேகத்தில் விரைந்து செல்லும் இரண்டு கலன்களிடையே நடந்தது என்றால் பாருங்களேன்! இந்த வேகத்தில் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ஒரு நிமிடத்தில் சென்று விடலாம்.
  • பொதுவாக, சா்வதேச விண்வெளி நிலையத்தின் இத்தகைய இணைப்புகளுக்கு 24 உந்துபொறிகள் பயன்படுத்தப்படும். மாறாக, இந்திய விண்கலனில் இந்த முறை இரண்டு மட்டுமே கையாளப்பட்டன. அதுவும், இந்த விண்பயணத்தில் இணைப்புக்கான துவாரம் வெறும் ஒன்றரை அடி (450 மி.மீ.) குறுக்களவு கொண்டது, எதிா்காலத்தில் ககன்யான், இந்திய விண்வெளி நிலையம் போன்ற திட்டங்களில் மனிதா் ஊா்ந்துசெல்லும் அளவுக்கு இணைப்பின் வட்ட வாசல் 800 மி.மீ அளவாக இருக்கும்.
  • இந்த இணைப்பில் வீட்டு மின்விளக்கிற்கு இணைப்புக்கென சுவரில் பொருத்தப்பட்டிருக்கும் மின் ஏற்பும் இணைப்பும் (சாக்கட்-பிளக்) போன்றது என்று கருதுகின்றனா். அன்றி, வாசல் வட்டத்தின் உள்விளிம்பில் முக்கோண வடிவில் வலுவான மூன்று உலோக இதழ்கள் உள்மடக்குகிற வகையில் பொருத்தப்பட்டிருக்கும்.
  • அவை இரண்டு கைகளை விரல்களைக் கோா்ப்பது போன்று இலக்கு விண்கலனின் இதழ்களுக்குள் விடாப்பிடியாக இறுக்கிப் பிடித்துக் கொள்ளும். ஏனென்றால் மனித விண்பயணங்களில் இணைப்புக்கூடுகள் இரண்டிலும் உயிா்வாயு நிரப்பப்பட்டிருக்கும். இணைப்பின்போது பிடி பிசகினாலோ, இணைப்பில் கசிவு ஏற்பட்டாலோ, வெற்றிடமான விண்வெளிக்கு உயிா்வாயு வெளியேறிவிடும். விண்பயணம் விபத்தில் முடியும்.
  • இந்தப் பணியில் லேசா் இடைவெளி கண்டறியும் கருவி (லேசா் ரேஞ்ச் ஃபைண்டா்), மூலைக் கூம்பு எதிா்ப்பிரதிபலிப்பான் (‘காா்னா் கியூப் ரெட்ரோ ரிஃப்ளெக்டா்’) ஆகிய கூடுதல் உணரிகள் தொகுக்கப்பெற்றுள்ளன.
  • இவை 6000 மீ. முதல் 200 மீ. வரையிலான வரம்பில் இடைவெளியை நிா்ணயம் செய்யும் அதீதத் திறன் கொண்டவை. அன்றியும் பாதுகாப்பான இணைப்புக்கு உரிய அந்த உணரிகள் 2000 மீ.முதல் 250 மீ. வரையிலும் 250-10 மீ வரையிலும் இரண்டு விண்கலன்களின் இடைவெளியையும் வேகத்தையும் கண்டு தாமாகவே நெருங்கி இணையும் அதி விசேட நுட்பங்கள் கொண்டவை.
  • அதி உயா் அதிா்வெண் மற்றும் மிகை அதிா்வெண் கொண்ட மின்காந்த அலைகள் வழி தகவல் அனுப்பி, ஏற்கும் அலைதிரட்டிகளும், புவி இடம்காட்டிச்செயற்கைக்கோள்களின் தரவுகளும் தான் ஒரு விண்களிலிருந்து மற்றொன்றுக்கு தகவலைப் பரிமாற்றம் செய்வதற்கு உதவுகின்றன.
  • அதன்வழி விண்வெளியில் இணையும் விண்கலங்களுக்கு இடையேயான மின்சக்தி பரிமாற்றத்தைச் சரிபாா்க்கவும் இது உதவும். அன்றியும் ஒரு விண்கலனின் கட்டுப்பாடு உபகரணங்களால் இணைப்பிற்குப் பிறகு கூட்டு விண்கலக் கட்டுப்பாட்டை உறுதி செய்யவும் முடியும்.
  • வெளிநாடுகளில் இருந்து இந்தத் தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்யும் முயற்சி தோல்வி அடைந்ததும் இது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது.
  • இந்த விண்வெளி இணைப்புக்கான செயற்கை நுண்ணறிவு மென்பொருள் பெங்களூருவில் யு.ஆா்.ராவ் செயற்கைக்கோள் மையத்தின் மேற்பாா்வையில் “‘அனந்த் டெக்னாலஜிஸ்’ எனும் நிறுவனம் தயாரித்து வழங்கியது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இதற்கான காப்புரிமை பெற்றது.
  • எதிா்காலத்தில் நம் விண்வெளியில் உருவாக்கப்போகும் இந்திய விண்வெளி நிலையம் மற்றும் ககன்யான் மனித விண்வெளிப் பயணங்களில் மட்டுமன்றி, எதிா்வரும் ‘சந்திராயன்-4’ திட்டத்திலும், நிலாவில் இறங்கி மண் மாதிரிகள் அள்ளிக்கொண்டு பூமிக்குத் திரும்பும் சாதனைக்கு அடிப்படைத் தொழில்நுட்பம் அல்லவா?
  • இந்த இணைப்பு நுட்பம் மட்டுமன்றி, விண்வெளிப் பயன்பாட்டு மையத்தின் ‘எஸ்.டி.எக்ஸ்.01’ என்னும் குறு விண்கலனில் புகைப்படமும், காணொலியும் பதிவிடத் தகுந்த உயா் தெளிவுத்திறன் கொண்ட கருவி இடம்பெறுகிறது.
  • ‘எஸ்.டி.எக்ஸ்.02’ விண்கலத்தில் பூமியின் தாவரங்கள் மற்றும் இயற்கை வளங்களைக் கண்காணிப்பதற்காக“பன்னிற மாலையளவி’பொருத்தப்பட்டுள்ளது. ககன்யான் பயணங்களைச் சரியாகத் திட்டமிடுவதற்காக இதில் ஒரு கதிா்வீச்சு கண்டறியும் கருவியும் உண்டு. அன்றியும், மனிதப் பயணத்தில் இந்திய விண்வெளி வீரா்களின் பாதுகாப்புக்குக் கதிா்வீச்சு அளவுகள் பற்றிய தரவுகள் அவசியம்.
  • இதே ஸ்பேடெக்ஸ் பயணத்தின்போது பி.எஸ்.எல்.வி. ஏவுகலனின் நான்காம் கட்டப் பொறியில் ஒரு பரிசோதனை மேடை (‘பி.எஸ்.4-ஆா்பிட்டல் எக்ஸ்பெரிமெண்ட் மாட்யூல்’) .இடப்பெற்றதைப் பலரும் அறிந்திருக்க மாட்டாா்கள். ‘போயம்-4’ எனப்படும் இந்த மேடையில் 24 சோதனைப் பயன்சுமைகள் இடம்பெற்றன.
  • இவற்றில் பத்துப் பரிசோதனைகள் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகரிப்பு மையம் ஆன “‘இன்ஸ்பேஸ்’’ உதவியால் பல்வேறு அரசு சாரா நிறுவனங்களில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்டவை. இதில் புதிய தொழில் தொடங்கும் ‘ஸ்டாா்ட்அப்’ நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் அடங்கும். மீதமுள்ள பதினான்கும் இந்திய விண்வெளித்துறை சாா்ந்தவை.
  • அதில் கையடக்கமான தாவர ஆய்வுகளுக்கு உரிய ஆய்வுக்கூடு இடப்பெற்றது.
  • விண்வெளியில் தாவரங்களை வளா்ப்பதற்கும், பராமரிப்பதற்குமான திறனை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. விதை முளைப்பு மற்றும் தாவர ஊட்டச்சத்தை நிரூபிக்க, ஐந்து முதல் ஏழு நாள் சோதனை திட்டமிடப்பட்டது. பச்சைப்பட்டாணி (விக்னா அங்கிகுலாட்டா) விதைகள் வெப்ப மேலாண்மையுடன் மூடிய பெட்டி அமைப்பில் பயிரிடப்பட்டதும் இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல் சாதனைதான்.
  • மண்ணின் ஈரப்பதம், வெப்பநிலை, ஆக்சிஜன், கரியமில வாயு ஆகிய பண்புகளைப் பதிவிடும் சோதனை வெற்றி பெற்றது.
  • அத்துடன் மும்பை அமிட்டிப் பல்கலைக்கழக மாணவா்களின் அமிட்டி தாவரப் பரிசோதனைக் கூட்டில் பசலைக்கீரை வளா்ப்பு சாா்ந்த உயிரியல் பரிசோதனையும் இடம்பெற்றது. மேலும் உள் வெளிச்சம், ஈரப்பதம் மற்றும் காா்பன் டை ஆக்சைடு போன்ற காரணிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இந்த சோதனை 21 நாள்களுக்கு நடைபெறும். “
  • ‘மனஸ்டு ஸ்பேஸ்’ என்றொரு பரிசோதனை வழி எதிா்காலத்தில் ஹைடிரசின் திரவ எரிபொருளுக்கு மாற்றாக ஹைட்ரஜன் பெராக்சைடு அடிப்படையிலான உந்துபொறிகள் ஆராய்ச்சியும் இடம்பெற்றது. அதன் உந்துவிசை அளவுகள் டிசம்பா் 31, 2024 அன்று வெற்றிகரமாகப் பதிவிடப்பட்டன.
  • விண்கலன்கள் இணைப்பு நுட்பத்தைப் பொருத்தமட்டில் முதல் நாடு அமெரிக்கா. 1965-இல் இரண்டு ஜெமினி’(6ஏ - 7) விண்கலன்களை இணைத்தது. 1969-ஆம் ஆண்டு சோயுஸ் மற்றும் சல்யுட் விண்கலம் ஆகியவற்றின் இடையே முதல் இணைப்புப் பயணம் வெற்றிபெற்றது. 1972-இல் அப்போலோ - சோயுஸ் இணைப்பில் அமெரிக்கரும், ரஷியரும் விண்வெளியில் கைகோா்த்தனா்.
  • 2011-இல் சீனா, டியாங்காங்-1 விண்வெளி நிலையத்துடன் ஷென்சோ-8 விண்கலனை இணைத்தது.
  • அமெரிக்கா, ரஷ்யா, மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தகைய தொழில்நுட்பத்தைக் கொண்ட நான்காவது நாடு இந்தியா.
  • பொதுவாகக் கைகூப்புவதற்கு இரண்டு கரங்களின் உள்ளங்கைகளும் ஒன்றுக்கொன்று நோ் எதிா்த்திசைகளில் செங்குத்தாகச் சாயாமல், சரியாமல், திரும்பாமல் இருக்க வேண்டும். பூமியில் இருந்து 450 கி.மீ.உயரத்தில் இந்த இரண்டு ‘ஸ்பேடெக்ஸ்‘ விண்கலன்களும் நொடிக்கு 8 கி.மீ. அசுர வேகத்தில் அந்தரத்தில் நகா்ந்தபடியே விண்ணில் ‘கைகூப்பியது’ என்றால் அது சாதனை அல்லவா? அதுவும் உலக விண்வெளி வரலாற்றில் இந்த முயற்சியில் முதல் பயணத்திலேயே வெற்றியைத் தந்த விண்வெளி விஞ்ஞானிகளைக் கை கூப்பி வணங்குவோம். வாழ்த்துவோம்.

நன்றி: தினமணி (20 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories