TNPSC Thervupettagam

விண்வெளியில் சாதித்துவரும் இந்தியா

August 23 , 2023 507 days 801 0
  • விண்வெளித் துறையில் உலகமே வியக்கும் பல்வேறு சாதனைகளை இந்தியா இன்று படைத்து வருகிறது. இந்திய விண்வெளித் துறையின் மைல் கல்களாக கருதப்படும் சாதனைகளில் சிலவற்றைப் பார்ப்போம்:
  • முதல் செயற்கைக்கோள்: இந்தியாவின் தலைசிறந்த வானியல் அறிஞரான ஆா்யபட்டாவின் பெயரில் 1975 ஏப்ரல் 19இல் ஏவப்பட்டது. ரூ.5 கோடி செலவில் முழுக்க இந்தியாவில் வடிவமைக்கப் பட்டது ஆா்யபட்டா. சுமார் 250 பொறியாளா்கள் இரண்டு ஆண்டுகள் உழைத்ததன் பலனாக ஆா்யபட்டா வடிவமைக்கப்பட்டது. பூமியில் இருந்து சுமார் 700 கி.மீ. உயரத்தில் நாளொன்றுக்கு 15 முறை வீதம், தனது ஆயுள் காலமான 6 மாதங்கள் வரை சுற்றி வந்தது. இந்தியாவில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் ஏவுகலம் அப்போது இந்தியாவிடம் இல்லை என்பதால் அப்போதைய சோவியத் ஒன்றியத்தின் காஸ்மோஸ் 3 எம் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

மறுபயன்பாட்டு ஏவுகலன்

  • விண்வெளி ஆராய்ச்சியைப் பொறுத்தவரை ஏவுகலன்களுக்கான செலவு மிகப்பெரியதாகும். அமெரிக்கா தனது செயற்கைக்கோள்களை ஏவுவதற்காக என்டா்பிரைஸ், கொலம்பியா, சேலஞ்சா், டிஸ்கவரி, அட்லாண்டிஸ், என்டேவா் போன்ற ஸ்பேஸ் ஷட்டில்களை பயன்படுத்தி வந்துள்ளது.
  • எனவே மறுபயன்பாட்டு ஏவுகலனை உருவாக்குவதற்காக இந்திய விஞ்ஞானிகள் தொடா்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தனா். இதையடுத்து கடந்த 2016இல் ஆா்.எல்.வி. -டி.டி. என்ற மறுபயன்பாட்டு ஏவுகலனை இஸ்ரோ விஞ்ஞானிகள் ரூ.95 கோடி செலவில் தயாரித்து சோதனை செய்தனா். இது இன்னும் தொடா்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்த வரை மறுபயன்பாட்டு ஏவுகலன் தயாரிப்பு என்பது மிக முக்கிய மைல் கல்லாகவே பார்க்கப்படுகிறது.

இன்சாட்

  • இந்திய தேசிய செயற்கைக்கோள் தொகுதி என்று அழைக்கப்படும் இது, ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய உள்நாட்டுத் தகவல் தொடா்பு அமைப்பு என்ற பெருமைக்குரியது. 1983இல் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், தொலைத்தொடா்புத் துறை, இந்திய வானிலை ஆய்வுத் துறை, அகில இந்திய வானொலி, தூா்தா்ஷன் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் உருவானது.
  • இன்சாட் தொகுதியில் அனுப்பப்பட்ட 9 செயற்கைக்கோள்களால்தான், இந்தியாவில் தகவல் தொடா்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பில் பல்வேறு உச்சங்களை எட்ட முடிந்தது. மேலும், காலநிலை மாற்றத்தை அறிந்து கொள்ளவும் பேருதவியாக இருந்தது. இந்தத் தொகுதியில் மொத்தம் 21 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்ட நிலையில் அவற்றில் 11 இயக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
  • பிஎஸ்எல்வி: போலார் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிகிள் என்ற பெயா் கொண்ட பிஎஸ்எல்வி, இந்தியாவின் மிக முக்கிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி, இந்தியாவின் விண்வெளி சாதனைகள் பலவற்றுக்கும் காரணமாக விளங்குகிறது. 1993 முதலே பிஎஸ்எல்வி திட்டம் தொடங்கினாலும், அதன் வெற்றிகரமான பயணம் 1994 முதல் தொடங்குகிறது.
  • 1994 முதல் 2016 வரை 38 முறை பிஎஸ்எல்வி விண்ணில் பாய்ந்துள்ளது. இதில் 37 முறை தொடா்ச்சியாக வெற்றி பெற்று, 121 செயற்கைக்கோள்களை செலுத்தியுள்ளது. இதில் 79 செயற்கைக் கோள்கள் சுமார் 20 வெளிநாடுகளுக்கு சொந்தமானவை, 42 இந்தியாவுக்கு சொந்தமானவை. சந்திரயான் 1, மங்கள்யான், அஸ்ட்ரோசாட், எஸ்ஆா்இ -1, நேவிக் ஆகிய முக்கியமான திட்டங்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்வதற்கு உதவியாக இருந்தது பிஎஸ்எல்வி ஏவுகலன்கள் தான்.

சந்திரயான் - 1

  • நிலவுக்கு செயற்கைக்கோளை அனுப்பி ஆய்வு செய்வது என்ற எண்ணம் 1999ஆம் ஆண்டே இந்திய விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டது. இதற்காக ஒரு திட்டக்குழு 2000ஆம் ஆண்டில் அமைக்கப் பட்டது. 2003ஆம் ஆண்டில் புகழ்பெற்ற பல்வேறு துறை அறிவியல் விஞ்ஞானிகள் கூடி நிலவுக்கு ஆளில்லா விண்கலனை அனுப்பும் திட்டப் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்தனா். இதைத் தொடா்ந்து இந்திய அரசும் ஒப்புதல் அளிக்கவே சந்திரயான் 1 திட்டம் தொடங்கியது. ரூ.386 கோடி திட்ட மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்துக்கு மயில்சாமி அண்ணாதுரை தலைவராக இருந்தார். பிஎஸ்எல்வி எக்ஸ் எல் ராக்கெட் மூலம் 2008 அக்டோபா் 22ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இது நவம்பா் 8ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப் பட்டது. சந்திரயானில் இருந்து பிரிந்த கலன் 2008 நவம்பா் 14ஆம் தேதி நிலவில் இறங்கி, இந்திய கொடியை நட்டதன் மூலம், நிலவில் ஏதாவது ஒரு பொருளை வைத்த 4ஆவது நாடு என்ற பெருமையைப் பெற்றது.

மங்கள்யான்

  • செவ்வாய் கிரக சுற்றுக்கலன் திட்டம் (மார்ஸ் ஆா்பிடா் மிஷன்) என்ற செவ்வாய் கிரகத்துக்கு ஆளில்லாத விண்கலனை ஏவும் திட்டம் கடந்த 2013 நவம்பா் 5ஆம் தேதி தொடங்கியது. முன்னதாக நிலவை அடைந்த இந்திய விஞ்ஞானிகள், கோள்களுக்குப் பயணம் செய்யும் திட்டத்தை 2010ஆம் ஆண்டே தீட்டியிருந்தனா். ரூ.454 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்துக்கு 2012 இல் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. விண்வெளி ஆய்வில் ஜாம்பவானான அமெரிக்காவின் முதலாவது செவ்வாய் கிரக ஆய்வுத் திட்டமான ஃபோனிக்ஸைக் காட்டிலும் மங்கள்யானின் திட்ட மதிப்பு 10 மடங்கு குறைவாகும்.
  • இஸ்ரோவின் கோள்களுக்கு இடையிலான முதலாவது பயணத் திட்டமும் இதுவாகும். மேலும், 2014 செப்டம்பா் 24ஆம் தேதி செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் மங்கள்யான் இணைந்ததன் மூலம், முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோளை அனுப்பிய நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது. செவ்வாயின் புறவடிவம், நிலப்பரப்பு, கனிமங்கள், வாயுக்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் நோக்கில் இது அனுப்பப் பட்டது. கடந்த 2022 அக்டோபா் மாதம் வரை இது பூமியுடன் தொடா்பில் இருந்து வந்தது.

நேவிக்

  • ஐஆா்என்எஸ்எஸ் எனப்படும் இந்தத் திட்டம், இந்தியாவின் வரைபடத் துல்லியத்தன்மைக்காக ஏவப்பட்டது. 7 செயற்கைக்கோள்களைக் கொண்ட இந்தத் தொகுப்பானது நேவிகேஷனை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டது என்பதால் கடலோடிகள், வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள், பேரிடா் மேலாண்மை, அரசின் பயன்பாடுகளுக்கு மட்டுமின்றி நாட்டின் பாதுகாப்பு தொடா்பான விஷயங்களில் ராணுவத்துக்கும் பெரிதும் பயன்படுகிறது. கடல் பகுதியில் 20 மீட்டருக்கும் குறைவாகவும், நிலப் பகுதியில் 10 மீட்டருக்கும் குறைவாகவும் கூட துல்லியமாக ஊடுருவிப் பார்க்கக் கூடிய வசதியைக் கொண்டிருக்கின்றன இந்த செயற்கைக் கோள்கள்.
  • 2013 ஜூலையில் தொடங்கிய இந்தத் திட்டத்தின் கீழ் 2018 வரை 9 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன. இரண்டு தோல்வியில் முடிவடைந்தாலும் திட்டப்படி 7 செயற்கைக்கோள்கள் இயக்கத்தில் இருந்து வருகின்றன.
  • பிஎஸ்எல்வி சி 34: 2016 ஜூன் 22ஆம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் மற்றொரு மைல் கல்லாகும். பிஎஸ்எல்வியின் 36ஆவது ஏவுகலன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது மட்டும் அந்தச் சாதனை இல்லை. ஒரே ஏவுகலனில் அதிகப்படியான செயற்கைக்கோள்களை வைத்து இஸ்ரோ வெற்றிகரமாக ஏவியது அதுதான் முதல் முறை. மொத்தம் 20 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்தனா் இஸ்ரோ விஞ்ஞானிகள். அதில், அமெரிக்கா, கனடா, ஜொ்மனி, இந்தோனேஷியா போன்ற நாடுகளின் செயற்கைக்கோள்களும் அடங்கும். அதன் பிறகு 2017 பிப்ரவரியில் அந்த சாதனையை தகா்க்கும் விதமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை ஒரு ராக்கெட்டில் வைத்து அனுப்பி சாதனை படைத்தது குறிப்பிடத் தக்கது.
  • இதன் தொடா்ச்சியாக, சந்திரயான் - 3, நிலவின் தென் துருவப் பகுதியில் புதன்கிழமை (ஆகஸ்ட் 23) தடம் பதிக்க உள்ளது சாதனைகளின் புதிய உச்சமாகும்.

நன்றி: தினமணி (23  – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories