TNPSC Thervupettagam

விதிமீறல்களுக்கு அபராதம்

February 25 , 2021 1371 days 717 0
  • பல உயிர்களை பலிவாங்கும் விபத்துகளில் குடும்பத்தினருக்கு, அவசர நிவாரணமாக, உதவித் தொகையினை அரசு வழங்குகின்றது. சில விபத்துகள் குறித்த விசாரணை கமிஷன்களும் நியமிக்கப்படுகின்றன; ஆனால், பெரும்பாலும் சடங்குகள் இத்துடன் முடிவடைகின்றன என்பதும் வருத்தமான செய்திதான்.
  • விபத்துகளுக்கான அடிப்படையான காரணங்கள் கண்டறியப்பட்டு, அவை முழுவதுமாக அகற்றப்பட வேண்டியது அவசியம் ஆகும். விபத்துகள் நிகழ்வனவல்ல - ஏற்படுத்தப்படுகின்றன என்று கூறப்படுவதுண்டு. ஊன்றிப் பார்க்கும்போது, தனி மனிதனின் அலட்சியம் மட்டுமே பிரதானக்  காரணமாக விளங்குவதனை உணரலாம்.
  • மேலும், விதிமீறல்கள் விபத்துகளுக்கு காரணமாக அமைவதனைப்போலவே, விதிகளை குறித்த விழிப்புணர்வின்மையும் காரணமாக அமைகின்றன. மேலை நாடுகளில், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வினை இடையறாது தொழிற்கூடங்களில் - நிர்மாண கட்டட பணிகளில் செய்த வண்ணம் இருப்பர்.
  • தொழிற்கூடங்களில், அனைவரும் பங்குபெறும் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் - பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு போட்டிகள் - முன்னர் நிகழ்ந்த ஒரு விபத்து குறித்த உரையாடல் - விபத்துகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் போன்றவை அக்குவேறு ஆணிவேராக அலசப்படும்.
  • பல மில்லியன் டாலர் செலவில் நடைபெறும் நிர்மாணப் பணியின் ஆய்வுக்கூட்டத்தில், அப்பணி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடியுமா, ,திட்டமிடப்பட்ட தொகைக்குள் நிறைவேற்றப்படுமா என்பன பற்றி பேசப்படுவதற்கு முன்,  விபத்துகள் ஏதேனும் நிகழ்ந்துள்ளனவா -அல்லது இனி அவை ஏற்பட வாய்ப்புள்ளனவா - அவற்றைத்  தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், சரியானவைûயாக  உள்ளனவா என்பன குறித்தே விவாதிக்கப்படும்.
  • அவை குறித்த ,திருப்தியும் - முடிவும் எட்டப்பட்டாலன்றி அடுத்த விஷயம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மாட்டாது. அந்த அளவுக்கு பாதுகாப்பு என்பது முக்கியத்துவம் கொண்டதாக அமைகிறது.
  • இவை உணர்த்துவது என்னவென்றால், பாதுகாப்பு குறித்த புரிதலில் சமரசத்துக்கு இடமே இல்லை. உதாரணமாக, ஒரு விமான  ஓட்டியின் முன்னால் இருக்கும் (சுவிட்ச்களில்) - விசைகளில் மூன்றில் இரண்டு பங்கு குறித்த அறிவு மட்டுமே அவனுக்கு உள்ளது என்றால், அவனிடம் விமானத்தை நம்பிக்கொடுப்போமா? அல்லது ஒன்றில் பாதியை மட்டுமே அறிந்த மருத்துவரை, வைத்தியத்துக்காக அணுகுவோமா?
  • இன்னும் ஒருசில தவறான கண்ணோட்டமும் நிலவுகிறது. பாதுகாப்பும் - காலதாமதமும் இணைபிரியாதவை என்பதும் அவற்றுள் ஒன்று. மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உற்பத்திக்குறைவுக்கு வழி வகுக்கும் என்பனவுமாகும். இதனால், பல இடங்களில் பாதுகாப்பு விதிகள் மீறப்படுகின்றன.
  • மாறாக, பாதுகாப்பு குறித்த புரிதல் - விழிப்புணர்வு ஆகியனவும் அதற்கான பொருள் செலவு, கால அவகாசம் ஆகியன,  உற்பத்தித்திறனை அதிகரிக்கவே செய்கிறது என்ற உண்மை மேலை நாடுகளில் தெளிவாக நிரூபிக்கப்பட்டு, இவ்வுண்மை தொழிற்துறையின்  எல்லாத்தரப்பினராலும் ஏற்றும் கொள்ளப்பட்டு விட்டது என்பதும் கவனிக்க தக்கதாகும்.
  • இன்னொரு முக்கியமான அம்சம் : பாதுகாப்புடன் செய்யப்படும் வேலை  சிறப்பானதாக - உருவாக்கப்படும் பொருள் தரம் மிக்கதாக அமைகின்றது என்ற உண்மையும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • இவற்றினைவிட இன்னொரு முக்கிய அம்சம், விபத்துகள் என்பன, தொழிற்கூடங்கள் - தொழிலாளிகள் சார்ந்த விஷயம்  மட்டுமே அல்ல; இது ஒவ்வொரு சராசரி மனிதன் சார்ந்த விஷயமும் ஆகும்.
  • ஒரு சங்கிலியின் பலம் என்பது,அதன் மிக பலவீனமான வளையத்தினால் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது என்று சொல்வார்கள். ஒரு குழுவின் திறமை என்பதும், அக்குழுவின் மிகக் குறைந்த திறன் கொண்டவனின் அடிப்படையில்தான் நிர்ணயிக்கப்படுகிறது.
  • அதுபோல, விபத்துக்களும், மிகக் குறைந்த விழிப்புணர்வு - புரிதல் கொண்டவர்களாலேயே நிர்ணயிக்கப்படுகிறது - நிகழ்த்தப்படுகிறது எனலாம்.
  • அந்த அடிப்படையில் நோக்கும்போது, ஒவ்வொரு மனிதனுக்கும் - மீண்டும் வலியுறுத்துகிறேன் - ஒவ்வொரு மனிதனுக்கும் விபத்துகள் ஏற்படுவதற்கானக் காரணங்கள் குறித்த புரிதல் ஏற்படும் வரை விபத்துக்கள் தவிர்க்கப்பட இயலாது.
  • அது, பட்டாசுத்  தொழிற்சாலை - கட்டட நிர்மாணப் பணி - ஆழ்குழாய்கிணறு அமைத்தல் - கிணறுவெட்டுதல் - பாதாள சாக்கடை சுத்தம்செய்தல் - சாலையில் நடந்து செல்லுதல் - வாகனம் ஓட்டுதல் என எந்தவிதமான பணிக்கும் செயலுக்கும் பொருந்தும்.
  • இந்த புரிதல் - விழிப்புணர்வு என்பது, படித்தவர் - படிக்காதவர் - செல்வந்தர் - எளியோர் - ஆண் - பெண் என எல்லாத்தரப்பினருக்கும் ஏற்படுத்தப்படுதல் அவசியம். இப்பின்னணியில், விபத்துகளை அறவே ஒழிக்க, செய்யப்படவேண்டிய சில முக்கியமான நடவடிக்கைகள்.
  • பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கல்விக்கூடங்களில் இருந்தே முக்கியத்துவம் தரப்படவேண்டும். ஓட்டுநர் பயிற்சி, தொழிற்கூடங்களில் பாதுகாப்பு சார்ந்த தேர்வுகளில் கிஞ்சித்தும் சமரசம் கூடாது. தொழிற்துறை சாராத - சாமான்ய மனிதனின் பாதுகாப்பு விழிப்புணர்வு  இடையறாது அதிகரிக்கப்பட வேண்டும்.
  • இவை அனைத்தயும் விட, பாதுகாப்பு என்பது, நமது கலாச்சாரத்தின் அங்கமாக மாற்றப்பட வேண்டும் அதற்கான செலவினைச் செய்யத் தயக்கமும் கூடாது. எந்த ஓர் இடத்திலும் - எந்த ஒரு தனி மனிதனாலும், பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்படுவதற்கல்ல என்ற உண்மை அனைவருக்கும் புரிய வேண்டும்.
  • உயிர்களும் உறுப்புகளும் விலை மதிப்பற்றவை என்ற ஆழமான புரிதல் ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்தப்பட வேண்டும். விதிமீறல்களுக்கு பணமல்ல - உயிர்களே,உறுப்புகளே  - அபராதமாக செலுத்தப்படுகின்றன என்ற  உண்மை புரிய வேண்டும்.

நன்றி: தினமணி  (25-02-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories