TNPSC Thervupettagam

விதிமீறல்கள் பெருமை சேர்க்காது!

October 3 , 2019 1924 days 1040 0
  • சட்டத்தை மீறுவது நம் நாட்டில் தேசிய வழக்கமாகிவிட்டது. அதிகார மையங்களுடன் நெருக்கமாக  இருப்போர் சட்டத்தை மீறுபவர்களுக்குப் பக்கபலமாக இருக்கின்றனர்.
  • சட்டத்தை அலட்சியமாகக் கருதுவது பெரும்பாலும் பணக்காரர்கள் மற்றும் அதிகாரம் மிக்கவர்களின் சிறப்பு உரிமையாகி விட்டது.
  • சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அதிகார அமைப்புகளோ செயலற்று முடங்கி விட்டன  அல்லது தேர்ந்தெடுத்த சிலவற்றின் மீது  கூடுதலாகப் பிரயோகிக்கின்றன. அப்படி அமலாக்கப்பட்ட சட்டத்துக்குப் பலியாவது அதிகாரமற்ற அப்பாவிகளே.
  • இத்தகைய சீரற்ற அமலாக்கம் நமது சட்ட அமலாக்கத்தையே பெரிதும் பாரபட்சமுடையதாக்கி விட்டது. சிறிய சாலை விதிமீறலுக்கு அபராதத்   தொகை விதிப்பது முதல் பெரிய குற்றங்களின் மீது விசாரணை நடத்துவது வரை பாரபட்சம் உள்ளது.   
அண்மையில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள்
  • அண்மையில் கொண்டுவரப்பட்ட மோட்டார் வாகனச் சட்ட திருத்தம், சாலைப் போக்குவரத்தைப் பெரிதும் ஒழுங்குபடுத்தி மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது; சாலை விதிமீறல்கள் மீது அபராதம், தண்டனைகளை அது அதிகரித்தது.
  • இந்தச் சட்டத் திருத்தம் குறித்த அலட்சியமான அணுகுமுறை, பொதுவாக விதிகளின் மீது நமக்குள்ள தாக்கத்தை எடுத்துக்காட்டப் போதுமான உதாரணமாகும்.
  • நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு குடிமக்களின் நலன் அக்கறையோடு பேசப்பட்டு விவாதிக்கப்பட்டது என்றே நாம் அனுமானிக்க வேண்டும்.
  • ஆனால், மசோதாவை நாடாளுமன்றம் அங்கீகரித்து சட்டமானவுடன் அதன் அமலாக்கத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள், குழப்பங்கள் ஒரு ஜனநாயக வழிமுறையிலான குடியாட்சியின் நல்ல அறிகுறிகளாகத் தென்படவில்லை.
கேரளாவில்... 
  • கேரள மாநிலம் கொச்சி மரடு நகராட்சிப் பகுதியில் கடற்கரை கட்டுப்பாட்டு மண்டல விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட விண்முட்டும் 4 அடுக்குமாடிக் கட்டடங்களை இடிக்குமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தொடர்ந்து உச்சநீதிமன்றமும் அதையே கடுமையாக வலியுறுத்தியுள்ளது.
  • ஆனால், உச்சநீதிமன்றத்தின்  தீர்ப்பை அணுகும் கோணங்களில்தான் எத்தனை எத்தனை மாறுபட்ட கருத்துகள் வெளியிடப்படுகின்றன. அவ்வளவு பெரிய கட்டடங்களை இடிப்பதில் பண ரீதியாக,  சுற்றுச்சூழல் மற்றும் மனிதம் சார்ந்து பெரும் விலை கொடுக்க வேண்டியுள்ளது.
  • இத்தகைய மனிதத் துயரங்களைப் பட்டியலிடுவதால் கடற்கரை கட்டுப்பாட்டு மண்டல விதிமுறைகளை அப்பட்டமாக மீறியதை  நியாயப்படுத்த முடியாது. தங்கள் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் சொந்த வீடு என்ற கனவுக்காகச் செலவழித்து ஒரு குடியிருப்பை வாங்கியவர்களின் நஷ்டத்தை யார் ஈடு செய்து ஏற்கப் போகிறார்கள்
  • நாட்டின் பல இடங்களில் இப்படி விதிமீறிக் கட்டப்பட்ட கட்டடங்கள் எவ்வளவோ இருக்க, இந்த நான்கு அடுக்குமாடி கட்டடங்களை மட்டும் இடிக்க உத்தரவிடுவது பாரபட்சமானது என்றுகூட சுட்டிக்காட்டப்படுகிறது.
  • எல்லா குற்றவாளிகளும் பிடிபடாததால் விதிமீறிய இந்தச் சிலரையும் விட்டுவிட வேண்டும் என்ற அளவு நமது வாதத்தை நீட்டித்துவிடக் கூடாது. இத்தகைய வாதங்களால் குற்றத்தின் தன்மையைக் குறைக்கவோ அல்லது நிராகரித்து விடவோ முடியாது. 
  • தேர்ந்தெடுத்த சில சட்டங்களுக்கு மட்டுமே பணிந்து நடப்பது என்ற போக்கு நம்மை மரத்துப் போனவர்களாக்கி விட்டது. (கேரளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு தலைக்கவசம் அணிய மறுத்து இரு சக்கர வாகன ஓட்டிகளின் பிரம்மாண்ட எதிர்ப்புப் பேரணி நடைபெற்றதை நோயின் அடையாளமாகக் கொள்ளலாம்).  
சட்டங்கள் நிராகரிப்பு
  • இப்படிக் கட்டமைக்கப்பட்ட நியாயங்களால் சட்டங்களை நிராகரிக்கும்போது, எப்போதுமே அதையும் கைத்தட்டி பாராட்டச் சிலர் இருக்கவே செய்வர். வளரும் சமூகத்தில் சிறிய விதிமீறலும் கண்டிக்கப்படும்; ஆனால் நாம் வாழும் சமூகத்திலோ சட்டமீறல்களே கதாநாயக சாகசச் செயல்களாக, அதுவும் குற்றவாளிகள் பிடிபடாத நிலையில் ஹீரோயிசமாகக் கருதப்படுகின்ற அவலம்.  
  • அனைத்து நிலைகளிலும் சட்டங்களை வெகு சாதாரணமாக அலட்சியமாகக் கருதிச் செயல்படும் இந்தத் தேசிய வழக்கமே நம் சமூகத்தின் எல்லா நோய்களுக்குமான தொடக்க நதிமூலமாக உள்ளது. 
  • முக்கியப் பிரமுகர் ஒருவர் போலீஸ் வாகனங்கள் புடைசூழ சாலை வேகக் கட்டுப்பாட்டை மீறியோ அல்லது சிவப்பு விளக்கை மதிக்காமல் தாண்டியோ பிடிபடாமல் செல்வதைப் பார்க்கும் ஒருவர் ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்கிறார்: அதிகாரம் மிக்கவராக இருந்தால் போதும்; பாதுகாவலோடு நீங்கள் சட்டத்தை மீறலாம் என்பதைக் கற்றுக் கொள்கிறார். 
  • கோடீஸ்வரர்கள் சில ஆயிரம் கோடிகளை வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றி, மகிழ்ச்சியாக நாட்டைவிட்டு ஓடி, வெளிநாடுகளில் இன்பவாழ்வு வாழும்போது, சில ஆயிரம் ரூபாய்கள் மட்டுமே நிலுவை கட்டத் தவறிய விவசாயிகளின் வீடுகள், நிலங்களை சட்டப்பூர்வமாக நீதிமன்றப் பிணையின் கீழ் கொண்டுவர வங்கிகள் ஆவலாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. இதனால், சட்ட அமலாக்க முறைகளின் மீதே குடிமக்கள்  நம்பிக்கை இழக்கின்றனர்.
  • உள்ளூரில் அதிகாரம் மிக்க நபர்களைப் பிடித்து, அவர்களின் உதவியால் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளைக் குறுக்கு வழியில் தாண்ட முடியுமா என முயற்சி செய்யத் தொடங்கிவிடுகின்றனர்.
  • இப்படியாகத்தான்  லஞ்சம் என்பது ஓர் அமைப்பு முறையையே ஆக்கிரமிக்கிறது. எந்தச் சமூகத்தில் சட்ட அமலாக்கம் இழுபறியாகப் பாரபட்சமாக நடைமுறைப்படுத்தப்படுகிறதோ அத்தகைய சூழலில்தான் லஞ்ச முறைகேடுகளும் சாத்தியமாகின்றன. 
சமூக ஒழுங்கு முறை
  • சமூக மற்றும் நன்னடத்தை ஒழுங்கு முறையில் பின்விளைவுகளை விதிமீறல்கள் ஏற்படுத்தும்; இயற்கை சார்ந்த சூழலில்,  சட்டவிதிகளைப் புறக்கணிப்பது என்பது தலைமுறை பாதிப்புகளை உண்டாக்கி விடும்.
  • நுகர்வு கலாசார நிர்ப்பந்தங்களால் அழுத்தப்படும் இன்றைய தலைமுறை உடனடி லாபத்தை மட்டுமே எண்ணுகிறது. அடுத்த தலைமுறைகளைப் பாதிக்கவுள்ள கெடுதல்மிக்க பின்விளைவுகளைச் சற்றும் எண்ணிப் பாராது அவற்றை மகிழ்ச்சியாகப் புறக்கணிக்கத் துணிகிறது.
  • நுகர்வுக் கலாசார நோயால் பீடிக்கப்பட்டுள்ள இன்றைய தலைமுறை, பிறர்க்குதவும் நோக்கமற்றுப் போனதை தலைமுறை இடைவெளி என்றுதான் கூற வேண்டும். 
  • வளர்ச்சி பற்றிய விவாதங்கள்,  அதிகம்  உற்பத்தி செய்வது, தேவைக்கதிகமாகவே நுகர்வது, பொறுப்பற்று அதிகமாக வீணாக்குவது என்பனவற்றில் மையம் கொண்டுள்ளது. வளர்ச்சிக் கதாநாயகர்களுக்கு சுற்றுச்சூழலியல் பாதுகாப்புச் சட்டங்கள் என்பதே இதயத்தில் குத்திய முள்ளாக இருக்கிறது.
  • எனவேதான், சுற்றுச்சூழலியல் சட்ட அமலாக்கத்தில் பொறுப்புடைய அனைவர் மத்தியிலும் அதை மென்மையாகக் கையாளும் ஒரு சூழ்ச்சி நோக்கம் இருக்கிறது. பேராசை பிடித்த வளர்ச்சி நாயகர்கள் அனைவரின் பிரதான நோக்கம் தங்கள் லாபத்தைக் கொள்ளை லாபமாக அதிகரிப்பது என்பதே.
  • புழுத்துப்போன லஞ்சம், சரி செய்ய முடியாத பின்விளைவுகளான பருவநிலை மாற்றம், வெள்ளப் பெருக்கு, காலம் தவறிய மழை, நிலச்சரிவுகள், வறட்சி, துருவங்களின் பனிப்பாறைகள் உருகுதல் முதலானவற்றின் பிறப்பிடம் மேற்குறிப்பிட்ட சூழ்ச்சியால் மென்மையாகக் கையாளப்படும் சட்டத்தின் மெளனமே. 
  • இதன் காரணமாகத்தான் இளைய தலைமுறை சுற்றுச்சூழல் பிரச்னைகளில் அதிகம் அக்கறை காட்ட வேண்டிய தேவையும், சூழலியல் பாதுகாப்புச் சட்டங்களை ஊசலாட்டமில்லாது சமரசமற்று அமலாக்க வற்புறுத்தப் போராடுவதும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
  • ஸ்வீடன் இளம்பெண் கிரேட்டா துன்பர்க், நீங்கள் எங்கள் கனவுகளைத் திருடி விட்டீர்கள் என்று வருத்தத்தோடு அண்மையில் ஐ.நா. சபையில் பேசியபோது, அது உலகத்தின் மனசாட்சியை உலுக்கிவிட்டது.
  • உலகின் பெரும்பான்மை மக்களின் அடக்கப்பட்ட உணர்வுகளையே அவர் பின்வருமாறு பிரதிபலித்தார்:
பருவநிலை நெருக்கடி
  • பருவநிலை நெருக்கடி பிரச்னையைத் தீர்க்க எதையும் செய்யாது, போராடாது வெகு காலமாக, அரசியல் தலைவர்களும் அதிகாரத்தில் வீற்றிருப்போரும் காலத்தைப் போக்கித் தப்பித்து விட்டீர்கள். இனியும் இப்படி நீங்கள் காலத்தை நீடித்துத் தப்பிவிட நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை.
  • நாங்கள் கோபம் கொள்வதற்கான தேவை இருக்கிறது. அந்தச் சீற்றத்தை எல்லாம் திரட்டிச் செயலாக மாற்றுவோம். 
  • இங்கோ பரிதாபம்; சட்டங்கள் மீறப்படும்போது நாம் அது குறித்து அக்கறை கொள்வதில்லை; பிறகு, என்றைக்குக் கோபம் கொள்வது? எங்கெங்கு காணினும் சூழலியல் சட்டங்கள் மீறப்படுவதும், சட்ட அமலாக்கம் மனம்போன போக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பாரபட்சமாக அமலாக்கப்படுவதும் தொடர்கின்றன.
  • தேச வளர்ச்சியின் வரைபடத்தில் ஒரு பொற்காலம் இருந்தது, அப்போது சட்டங்கள் மதிக்கப்பட்டன, பணிந்து ஏற்கப்பட்டன என்பது மட்டுமல்ல, அப்படிச் செய்வது என்பது விவாதிக்க முடியாத கடப்பாடு என்றும் மக்கள் கருதினர்.
  • அத்தகைய காலம் வரும் வரை தேசப் பெருமை என்பதோ, புகழ் என்பதோ எல்லாம் வானில் பறக்கவிடப்படும் வண்ணமயமான வார்த்தை ஜாலப் பட்டங்களே. 

நன்றி: தினமணி (03-10-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories