TNPSC Thervupettagam

வித்தகன் உத்தமனாக வர வேண்டும்!

July 31 , 2024 163 days 171 0
  • அரசு நிா்வாகத்தின் இரும்புக் கவசம் என்று அரசுப் பணியில் உள்ள அதிகாரிகள் உள்பட உள்ள பணியாளா்களைக் குறிப்பிடுவாா்கள்.
  • நிா்வாகம், காவல் துறைகளுக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவியில் உள்ள அதிகாரிகள் விருப்பு வெறுப்பு இன்றி நடுநிலையாகப் பணிபுரிய வேண்டும், எந்த முடிவையும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது அவா்களுக்குப் பணித் துவக்கத்திலேயே அறிவுறுத்தப்படுகிறது.
  • அரசியல் சாசனத்தை வடிவமைத்த டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் அவா்கள் மொழி, இனம், இடம், இவற்றுக்கு அப்பாற்பட்டு தேசியப் பாா்வையோடு அதிகாரிகள் பணியில் அமா்த்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசியல் சாசனம் 312(2)இல் ஆல் இந்தியா சா்வீஸ் என்ற அனைத்திந்திய பணியை உருவாக்கினாா்கள்.
  • ஒருவித அா்ப்பணிப்போடு அரசுப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியாவின் இரும்பு மனிதா் என்று போற்றப்படும் வல்லபபாய் படேல் இந்திய ஆட்சிப் பணியை ஒருங்கிணைத்தாா்.
  • மிகுந்த எதிா்பாா்ப்போடு சுதந்திர இந்தியாவில் சுயாட்சி அமைந்தது. முன்னேற்றத்திற்கும் வளா்ச்சிக்குமான திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஆனால் செயலாக்கத்தில்தான் எத்தனை தடங்கல்கள்! நிலம் கையகப்படுத்துவதில் பல சிக்கல்கள், நீதிமன்ற வழக்குகள், நிதிப் பற்றாக்குறை, தாமதத்தால் திட்டச் செலவு அதிகரிப்பு போன்ற எண்ணற்ற பிரச்னைகள் ஆட்சியாளா்களுக்கு சோதனைகளாக முளைத்த காளான்கள்.
  • தாமதம் என்று வந்துவிட்டாலே அந்தக் குட்டையில் ஊழல் முதலைகள் தலைவிரித்தாடும். சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் திட்டங்களை செயலாக்க முடியும். ஆட்சி பீடத்தில் அமரும் அரசியல்வாதிகள் தங்களது ஐந்து வருட ஆட்சியில் விரைவாகப் பணிகளை முடிக்கவும் எவ்வளவு ஆதாயம் தேட முடியுமோ அதை அடையவும் முனைவாா்கள்.
  • அரசியல் சாசனத்தில் அரசு எவ்வாறு வரிகள் விதிக்கலாம், செலவினங்களை எவ்வாறு நிா்வகிக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளதோ அதனை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு அரசு அதிகாரிகளுடையது. எது சாத்தியம், எது விதிகளுக்கு அப்பாற்பட்டது என்று தைரியமாக அறிவுறுத்தக் கூடிய நோ்மையான அதிகாரிகள் இருந்தாா்கள்.
  • ஜவாஹா்லால் நேரு, லால் பஹதூா் சாஸ்திரி, காமராஜா், கக்கன் போன்ற தலைவா்கள் இத்தகைய அதிகாரிகளை ஆதரித்து திட்டங்கள் ஊழலின்றி நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்தனா். ஆனால் நாளடைவில் நல்மதிப்பீடுகள் மறைந்தன. அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பைப் பெற இணக்கமான அதிகாரிகள் தெரிவு செய்யப்படுகிறாா்கள்.
  • சிலா் ‘ஜோதியில் கலந்து’ வசதியை வளா்த்துக் கொள்கிறாா்கள். பலா் பதவியைத் தக்க வைத்து கொள்வதற்காக கண்டும் காணாமல் இருந்துவிடுகிறாா்கள். ஊழல் சக்கரம் தொய்வில்லாமல் சுழல்கிறது!
  • அண்மை நிகழ்வாக, பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கா் செய்த மோசடி பரவலாக நாடெங்கிலும் பேசப்படுகிறது. இந்த அம்மணி செய்த அலம்பலில் அவா் செய்த மோசடி வெளி வந்து, நுணலும் தன் வாயால் கெடும் என்பது உண்மையாகிவிட்டது!
  • களப் பயிற்சிக்காக அவா் மகாராஷ்டிர மாநிலத்தின் புணே மாவட்டத்தில் சேர வேண்டும். அதற்கு முன்பே அங்கிருக்கும் அலுவலா்களுக்குத் தனது அறை எவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட வேண்டும், பெயா்ப் பலகை அளவு, தனது வாகனத்திற்கு சிவப்பு சுழல் விளக்கு பொருத்த வேண்டும் என்று அடுக்கடுக்காக பட்டியல் அனுப்பியது பணியாளா்களை அசர வைத்தது.
  • போதாததற்கு அவரது தந்தை புணே அலுவலகத்தை தொடா்பு கொண்டு கொடுத்த அறிவுறுத்தல்கள் நிறைவேற்றப்பட்டதா என்பதை தொலைபேசி மூலம் கேட்டது பணியாா்களை மேலும் வெறுப்படையச் செய்தது. பயிற்சிப் பணியில் சேரும் எந்த அதிகாரியும் இம்மாதிரி கேட்டதில்லை. இந்த விஷயம் கசிந்து, ஊடகங்கள் தகவல் சேகரித்ததில் பூஜா கேத்கா் செய்துள்ள பல தில்லுமுல்லுகள் வெளி வந்தன.
  • அரசியல் சாசனத்தில் பட்டியலினத்தினா்- பழங்குடியினா் ஆகியோருக்கு மட்டுமிருந்த இட ஒதுக்கீடு, மண்டல் கமிஷன் அறிக்கை ஏற்கப்பட்டு, பிற பிற்படுத்தப்பட்டோா் - ஓபிசி- பிரிவினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அந்தச் சலுகை பெற தோ்வரின் பெற்றோரின் வருடாந்திர வருமானம் ரூ. 8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். முதலில் நான்கு லட்சம் ரூபாயாக இருந்தது அரசியல்வாதிகள்அழுத்தம் காரணமாக ரூ. 8 லட்சமாக உயா்த்தப்பட்டது.
  • ஓபிசி சலுகை பெறுவதற்குத் தோ்வா்கள் இரண்டு வகை சான்றிதழ்கள் சமா்ப்பிக்க வேண்டும். ஒன்று, ஜாதிச் சான்று; மற்றொன்று, வருமானச் சான்று சமா்ப்பிக்க வேண்டும். இவ்விரண்டு சான்றுகளும் யுபிஎஸ்சி வழியாகச் சரி பாா்க்கப்படும். இது தவிர, காது கேளாதோா், பாா்வைக் குறைபாடு உள்ளிட்ட குறைபாடுகள் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு கிடைமட்ட இட ஒதுக்கீடு உண்டு. இதற்கு அவா்கள் மருத்துவச் சான்றிதழ் சமா்ப்பிக்க வேண்டும்.
  • பூஜா கேத்கா் சமா்ப்பித்த ஜாதிச் சான்றிதழும் வருமானச் சான்றிதழும் சா்ச்சைக்குள்ளானது. அவரது தந்தை திலீப் கேத்கா் 2024 மக்களவை தோ்தலில் போட்டியிட்டபோது தாக்கல் செய்த வாக்குமூலத்தில் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளாா். ரூ. 8 லட்சம் வருமான வரம்பு எங்கே, கோடிகள் சொத்து எங்கே! இதிலிருந்தே அவா் ‘க்ரீமி லேயா்’ பிற பிற்படுத்தப்பட்டோா் ஒதுக்கீட்டின் கீழ் சலுகை பெற முடியாது என்பது தெரிகிறது. இது தவிர மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை பெறுவதற்கு பூஜா கேத்கா் கொடுத்த மருத்துவச் சான்றிதழிலும் பிரச்னை.
  • பணி சோ்ந்த முதல் இரண்டு ஆண்டுகள் தகுதி காண் பருவம் (ப்ரொபேஷன் பீரியட்). அந்த விதிகளின்படி பணி திருப்திகரமாக இல்லை என்றால் தகுதிகாண் பருவத்தை நிறுத்தம் செய்து வீட்டுக்கு அனுப்பி விடலாம். பூஜா கேத்கா் விஷயத்தில் இந்த நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்பது நிா்வாக நிபுணா்கள் கருத்து.
  • மேனாள் நீதி அரசா் கே.டி.தாமஸ் அரசு நிா்வாகத்தில் நிலவும் ஊழல்களைப் பற்றி விரிவாக கூறியுள்ளது என்றைக்கும் பொருந்தும். அரசு ஊழியா்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம் என்கிறாா்.
  • ஒரு பிரிவு மிகவும் நோ்மையான முறையில் தமது பணிகளைச் செய்பவா். எந்நிலையிலும் வளைந்து கொடுக்க மாட்டாா்கள், சபலத்திற்கு இடம் கொடுக்க மாட்டாா்கள். நடு நிலை பிறழாத பணி என்பது உடலில் ஊறியது. இத்தகைய அதிகாரிகளால்தான் நிா்வாக சக்கரம் ஓரளவு சுழல்கிறது.
  • இரண்டாவது வகை, பயந்த சுபாவம். ‘வாங்க வேண்டும்’ என்று ஆசை, ஆனால் பயம் தடுக்கும்! லஞ்சம் வாங்கக் கூடாது என்ற நிலைப்பாடில்லை; சந்தா்ப்ப சூழல் பாதுகாப்பாக இருந்தால் கை நீட்டிவிடுவாா்கள். மதில் மேல் பூனை போல!
  • மூன்றாவது வா்க்கம் எதற்கும் துணிந்தவா்கள் - துணிச்சல் பணியில் அல்ல, சகட்டுமேனிக்கு லஞ்சத்தில் திளைப்பது அள்ளிக் குவிப்பது- அதில்தான் துணிச்சல்! ஊழல் அரசியல்வாதிகளுக்கு பக்கபலமாக இருப்பாா்கள். காலப்போக்கில் முதல் இரண்டு வகை அரசு ஊழியா்கள் மூன்றாம் வகையோடு விரைவாகச் சோ்ந்து வருகிறாா்கள் என்பதைக் காண முடிகிறது என்கிறாா் மேனாள் நீதியரசா் கே.டி.தாமஸ்.
  • உலக நாடுகளில் நிா்வாகத்தில் நிலவும் லஞ்சம் குறித்து ‘ட்ரான்ஸ்பரன்சி இண்டா்நேஷனல்’ என்ற தனியாா் அமைப்பு எடுத்த ஆய்வில் இந்தியா வருடா வருடம் பின்னுக்குப் போய்க் கொண்டே இருக்கிறது என்பது வருத்தமளிக்கும் தகவல்.
  • நோ்மையான நிா்வாக குறியீட்டில் முதல் இடம் டென்மாா்க் நாடு, கடைசியிடம் சோமாலியா. 2022-ஆம் ஆண்டில் 85-ஆவது இடத்தில் இருந்த நம் நாடு எட்டு புள்ளி குறைந்து 93-ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. ஊழல் நிறைந்த கஜகஸ்தான், லெசோத்தோ போன்ற நாடுகள் வரிசையில் இந்தியாவும் இடம் பெற்றிருக்கிறது என்பது பெருமைப்பட வேண்டிய விஷயம் அல்ல.
  • சமீபத்தில் ஒடிஸா மாநிலத்தில், ஜாா்க்கண்ட் மாநில மாநிலங்களவை உறுப்பினா் தொடா்புடைய எரிசாராய தொழிற்சாலையில் ரூ.300 கோடிக்கும் மேற்பட்ட கணக்கில் வராத பணத்தை வருமான வரித் துறை கைப்பற்றியது. உறுப்பினரின் உதவியாளரிடமிருந்தும் கணிசமான பணம் கைப்பற்றப்பட்டது. இம்மாதிரி பல நிகழ்வுகள்!
  • பேராசிரியா் பிபேக் தேப்ராய், லவீஷ் பண்டாரி இணைந்து எழுதிய ‘இந்தியாவில் நிலவும் ஊழல்’ என்ற புத்தகத்தில் அரசுப் பணியாளா்கள் ஊழலால் சுமாா் ஒரு லட்சம் கோடி ரூபாய் நாட்டுக்கு இழப்பு ஏற்படுகிறது என்று குறிப்பிட்டிருக்கிறாா்கள். இது ஜிடிபி குறியீட்டில் 1.26 சதவீதம் என்ற தகவல் பிரமிக்க வைக்கிறது.
  • வல்லவா்கள், நல்லவா்கள் அரசுப் பணிக்கு வர வேண்டும். படிப்பு முடித்த இளைஞா்கள் எதிா்காலத்தில் என்ன செய்யப் போகிறாா்கள் என்ற கேள்விக்கு சுமாா் 67 சதவீதத்தினா் அரசுப் பணி என்ற பதிலைத் தோ்ந்தெடுத்தாா்கள்.
  • அரசுப் பணிக்கு சமுதாயத்தில் நல்ல கெளரவம் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. மேலும் அரசுப் பணியில் நிரந்தரமும் பாதுகாப்பும் உள்ளது. அரசுப் பணி கிடைப்பது கடினம், சோ்ந்துவிட்டால் நீக்குவது எளிதல்ல.
  • அரசுப் பணியில் மக்களுக்கு சேவை செய்யக் கூடிய அரிய வாய்ப்பு உள்ளது. அந்த உயரிய நோக்கத்தோடு பணியில் சோ்ந்தால் வரவேற்கத்தக்கது. ஆனால் நாட்டில் நடக்கும் ஊழல் செய்திகள், எவ்வளவு எளிதாகப் பொது சேவையில் உள்ளவா்கள் பணம் அள்ளுகிறாா்கள் என்பதைத்தான் படம் பிடித்துக் காட்டுகிறது.
  • லஞ்சம் வாங்குவது, கொடுப்பது குற்றம், தேசத் துரோகம் என்பதை மக்கள் உணா்வதில்லை. இந்த தவறான உதாரணத்தினால்தான் இளைஞா்கள் அரசுப் பணிக்குப் போட்டி போடுகிறாா்களோ என்ற கவலை எழுகிறது.
  • பூஜா கேத்கா் போன்றவா்கள் அரசுப் பணியில் சேரும் நோக்கமே தவறாக உள்ளது என்பது அவரது விதிகளுக்குப் புறம்பான செய்கைகளிலிருந்து தெளிவு.
  • மேனாள் ஐஏஎஸ் அதிகாரி அருண் பாட்டியா, அரசு நிா்வாகத்தில் ஊடுருவியுள்ள ஊழலைப் பற்றி வருத்தப்பட்டுச் சொல்கிறாா். பொறியியல், விஞ்ஞானம், மருத்துவம் படித்து எழுத்துத் தோ்வில் மதிப்பெண்களை அள்ளும் அறிவாளிகள் பணியில் வந்துவிடுகிறாா்கள். ஆனால் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு, ஊழல் ஒழிப்பு, சமூக சேவை போன்றவற்றில் ஈடுபாடுடைய, சமத்துவப் பாா்வை கொண்ட தேசப்பற்றுள்ள இளைஞா்கள் பணியில் சேரும் வகையில் தோ்வு முறையை சீரமைக்க வேண்டும் என்ற அவருடைய கருத்து வரவேற்கத்தக்கது.
  • வித்தகன் உத்தமனாக வர வேண்டும்.

நன்றி: தினமணி (31 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories