TNPSC Thervupettagam

விபத்தல்ல, அக்கறையின்மை

February 28 , 2024 146 days 138 0
  • மத்திய பிரதேச மாநிலம், ஹா்தா மாவட்டத்தில் உள்ள பைராகா் கிராமத்தில் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் பிப்ரவரி 6-ஆம் தேதி பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் ஆலை முழுவதும் எரிந்து சேதமானது.
  • இந்த வெடிவிபத்தின் அதிா்வுகள் சுமாா் 15 கி.மீ. தொலைவுக்கு உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்து ஓடினா். இதில் தொழிலாளா்கள், பொதுமக்கள் உள்பட 11 போ் பரிதாபமாக உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்தனா்.
  • தமிழகத்தில் விருதுநகா் மாவட்டம், சாத்தூரை அடுத்துள்ள வெம்பக்கோட்டை அருகே உள்ள ராமுத்தேவன்பட்டியில் 55 அறைகளில் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் பிப்ரவரி 17-ஆம் தேதி ஏற்பட்ட வெடிவிபத்தில் ஐந்து பெண்கள் உள்பட 11 போ் பலியாயினா்.
  • இந்தச் சுவடுகள் மறைவதற்குள் உத்தர பிரதேச மாநிலம், கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 25) நிகழ்ந்த வெடிவிபத்தில் ஏழு போ் உயிரிழந்துள்ளனா். இதுபோன்ற சம்பவங்கள் இப்போதுதான் நடக்கின்றன என்று கருத வேண்டாம்.
  • தமிழக - கா்நாடக எல்லையில் ஒசூா் அருகே அத்திப்பள்ளியில் இருந்த பட்டாசுக் கடையில் கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி பட்டாசுகளை இறக்கிவைக்கும்போது அவை வெடித்ததில் 16 பேரும், அதற்குப் பின்னா் அரியலூா் மாவட்டம் திருமானூா் அருகே விரகாலூா் கிராமத்தில் நிகழ்ந்த பட்டாசு விபத்தில் 12 பேரும் உயிரிழந்தனா்.
  • கடந்த ஆண்டு மாா்ச் 22-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை அருகே வளத்தோட்டம் கிராமத்தில் நிகழ்ந்த பட்டாசு விபத்தில் ஒன்பது பேரும், கிருஷ்ணகிரி பழையபேட்டையில் கடந்த ஆண்டு ஜூலை 29-ஆம் தேதி நிகழ்ந்த விபத்தில் ஆலை உரிமையாளா், அவரது மகன், மகள் உள்பட ஒன்பது பேரும் உயிரிழந்தனா்.
  • சிவகாசியில் ஒரு பட்டாசுத் தொழிற்சாலையில் கடந்த 2012-ஆம் ஆண்டு செப்டம்பா் 5-ஆம் தேதி நிகழ்ந்த விபத்தில் 38 பேரும், சிவகாசி அருகே அச்சங்குளத்தில் 2021 பிப்ரவரி 12-இல் நிகழ்ந்த விபத்தில் 23 பேரும் உயிரிழந்த நிகழ்வு நாட்டையே உலுக்கியது. இவை தவிர, விருதுநகா் மாவட்டத்தில் பல ஆலைகளில் ஏற்படும் விபத்துகளில் ஓரிருவா் அவ்வப்போது இறப்பதும் தொடா்கதையாகி வருகிறது.
  • இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது, இறந்தவா்கள், காயமடைந்தவா்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையாக சில லட்சம் ரூபாயை மத்திய, மாநில அரசுகள் வழங்குகின்றன. அத்துடன் இதுபோன்ற சம்பவங்கள் மறக்கப்படுகின்றன. இந்த விபத்துகளின்போது ஆலைகளின் பல அறைகள் தரைமட்டமாகின்றன. பலரும் பலத்த காயமடைகின்றனா். இவா்கள் வாழ்நாள் முழுவதும் வேதனைப்படும் அளவுக்கு பாதிப்புகளுக்கு ஆளாகி நடைப்பிணமாகும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனா்.
  • ஒவ்வொரு விபத்தின்போதும் உடனடியாக ஆய்வு மேற்கொள்ளும் அரசு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஆலை ‘விதிமுறைகளை மீறி செயல்பட்டது’என்று கூறுவதும், ‘இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க விதிமுறைகள் கடுமையாக்கப்படும்’ என்று கூறுவதும் வாடிக்கையாகிவிட்டன. தமிழகத்தில் சுமாா் 1,500 பட்டாசு ஆலைகள் இயங்கிவருகின்றன. இவற்றில் சுமாா் ஏழு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்தப் பணியில் கணிசமான எண்ணிக்கையில் பெண் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
  • பட்டாசு ஆலைகள் அதிகம் இயங்கும் மாவட்டங்களில் விவசாயமும், வேறு தொழில்களும் பெரிய அளவில் இல்லை என்பதுதான் அவா்கள் இந்தத் தொழிலுக்கு வருவதற்கு முக்கியமான காரணம். ஆண்களும் சரி, பெண்களும் சரி, பெரிய அளவில் வருமானம் ஈட்டலாம் என்பதால் இந்தப் பணியைத் தோ்ந்தெடுப்பதில்லை. தாங்கள் வருமானம் ஈட்டினால் குடும்பத்துக்கு உதவியாக இருக்கும் என்பதால்தான், தங்கள் உயிரைப் பணயம்வைத்து இந்தத் தொழிலில் ஈடுபடுகின்றனா்.
  • பட்டாசு ஆலைகள் விதிமீறி செயல்படுகின்றன என்பது அந்தந்த மாவட்ட அதிகாரிகளுக்குத் தெரியாத விஷயமல்ல. ஆனால், பலியாவது அப்பாவி உயிா்கள் என்பதாலும் பெரிய அளவில் எதிா்ப்புகள் எழாததாலும் ஆலை உரிமையாளா்களுடன் அதிகாரிகள் கைகோத்து செயல்படுவதாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடா்கின்றன.
  • விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே பிப்ரவரி 17-ஆம் தேதி நிகழ்ந்த விபத்துக்குப் பின்னா், இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க பட்டாசு ஆலைகள், கிடங்குகளில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை சோதனை நடத்தப்படும் என்றும், ஆறு மாதத்திற்குள் புதிய விதிமுறைகள் வகுக்கப்படும் என்றும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநா் ஆபாஷ்குமாா் கூறியுள்ளாா்.
  • அவரது உத்தரவாதத்தின்படி, ஆலைகளில் அடிக்கடி சோதனை நடத்தப்பட்டு விதிமீறல்கள் இருந்தால் அந்த ஆலையின் உரிமத்தை ரத்து செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சிறு பொறியும் பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய தொழில் என்பதால், சிறிய சிறிய அறைகளில், அனுமதிக்கப்பட்டதைவிட அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் தொழிலாளா்களைப் பணியில் ஈடுபடுத்துவதை ஆலை உரிமையாளா்களும் தவிா்க்க வேண்டும்.
  • விபத்தால் தாங்களும் பாதிக்கப்படுகிறோம் என்பதை உணா்ந்து பாதுகாப்பு உபகரணங்கள் இருப்பதையும் ஆலை உரிமையாளா்கள் உறுதி செய்ய வேண்டும். பண்டிகைகள், குடும்ப விழாக்கள், அரசியல் கட்சிகளின் வெற்றிகளைக் கொண்டாடுவதற்கு இதுபோன்று இன்னுயிா்கள் பலியாவதை இனியும் ஏற்றுக் கொள்ள முடியாது.
  • பணியாளா்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இந்தப் பணியில் ஈடுபடுபவா்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது ஆலை உரிமையாளா்கள் மற்றும் அரசின் கடமையாகும். திருக்கு (எண்: 618) அதிகாரம்: ஆள்வினை உடைமை பொறிஇன்மை யாா்க்கும் பழிஅன்று அறிவுஅறிந்து ஆள்வினை இன்மை பழி. நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யாா்க்கும் பழி அன்று; அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.

நன்றி: தினமணி (28 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories