- விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் வெடிவிபத்து ஏற்படும் செய்தி இப்போதெல்லாம் அதிர்ச்சியையோ, ஆச்சரியத்தையோ ஏற்படுத்துவதில்லை.
- அங்கே ஆண்டுதோறும் பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகள் அதிகரித்து வருகின்றனவே தவிர, குறைவதாகத் தெரியவில்லை. இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால், அவற்றுக்கான தீர்வுகள் காணப்படுவதில்லை.
- கடந்த வாரம் வெள்ளிக்கிழமை விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் பலர் காயமடைந்திருக்கிறார்கள். இந்த விபத்தும்கூட முந்தைய விபத்துகளில் இருந்து பெரிய அளவில் வித்தியாசப்படவில்லை.
- முறையான கண்காணிப்பு இருந்து விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தால் இந்த விபத்து நேர்ந்திருக்காது. வரும் முன்னும் காக்காமல், வந்த பின்னும் காக்காமல், வரட்டும் என்று காத்திருந்து எதிர்கொண்டதுபோல இருக்கிறது இப்போதைய விபத்து.
- சாத்தூர் அருகேயுள்ள அச்சங்குளம் பகுதியில் ஏழாயிரம் பண்ணையைச் சேர்ந்த சந்தனமாரியின் பட்டாசு ஆலை உள்ளது. 20-க்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட இந்த ஆலையில், சுமார் 50 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். பென்சில் பட்டாசுகளுக்கு வெள்ளிக்கிழமை முனைமருந்து செலுத்தும்போது ஏற்பட்ட உராய்வு மிகப் பெரிய வெடிவிபத்தில் முடிந்துவிட்டது.
- 2012-இல் முதலிப்பட்டியில் நடந்த ஓம்சக்தி பட்டாசு ஆலை விபத்துக்கு அடுத்தபடியாக பெரிய வெடிவிபத்து இதுதான். முந்தைய விபத்தில் 38 பேர் உயிரிழந்தனர், 55 பேர் காயமடைந்தனர். இப்போதைய விபத்தில் அந்த அளவு உயிரிழப்பு இல்லை என்கிற அளவில் வேண்டுமானால் ஆறுதல் அடையலாம்.
- 2019 மார்ச் 20-ஆம் தேதி சிப்பிப்பாறையில் நடந்த வெடிவிபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்ததுதான் இதற்கு முந்தைய சம்பவம். ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் கடந்தும்கூட பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்படவில்லை என்பதிலிருந்து இதை விபத்து என்று கூறுவதைவிட, வருந்தி வரவழைத்த நிகழ்வு என்று அழைப்பதுதான் சரியாக இருக்கும்.
- 2019-இல் பட்டாசு ஆலைகளில் 26 தீ விபத்துகள் நடந்தன என்றால், அதுவே 2020-இல் 17-ஆகக் குறைந்தது. பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டதுதான் அதற்குக் காரணமே தவிர, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அல்ல.
- சிவகாசி பகுதியின் பொருளாதாரமே பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகளையும், அச்சுத் தொழிலையும் நம்பியிருக்கிறது. சிவகாசி பகுதியில் மட்டும் ஏறத்தாழ 60 தீப்பெட்டி தொழிற்சாலைகள், 30-க்கும் மேற்பட்ட ரசாயனத் தொழிற்சாலைகள் இயங்குகின்றன.
- தேசிய அளவில் பட்டாசுத் தயாரிப்பின் கேந்திரமாகக் கருதப்படும் சிவகாசியில் 25,000-க்கும் அதிகமானோர் பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் தயாரிக்கப்படும் 70% பட்டாசுகளும், தீப்பெட்டிகளும் சிவகாசியில்தான் தயாரிக்கப்படுகின்றன.
- வெயில் அதிகமாக உள்ள சிவகாசியின் தட்பவெப்ப நிலை பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு உகந்ததாக அமைந்திருக்கிறது. ஆரம்பத்தில் சாத்தூர் பகுதியில் இருந்து மூலப்பொருள்கள் பயன்படுத்தப்பட்டது போய், இப்போது கேரளத்திலிருந்தும், அந்தமானிலிருந்தும் மூலப்பொருள்கள் தருவிக்கப்படுகின்றன.
- பட்டாசு தொழிற்சாலைக்கு சிவகாசியில் உரிமம் பெறுபவர், பட்டாசு, தீப்பெட்டி தயாரிப்புத் தொழிலில் தானே ஈடுபடுவதில்லை. தனது பட்டாசு ஆலையில் உள்ள பல்வேறு அறைகளை தனித்தனியாக சிறிய தயாரிப்பு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட்டுவிடுகிறார்கள்.
- குத்தகைக்கு எடுப்பவர்கள் தங்களது தயாரிப்புகளை அந்த ஆலையை நடத்துபவர்களுக்கோ அல்லது வெளியில் உள்ள பெரு முதலாளிகளுக்கோ விற்றுவிடுகிறார்கள். இதனால், தொழிலாளர்கள் அனைவருமே ஒப்பந்த அடிப்படையில் அல்லது தினக்கூலியில் வேலைக்கு அமர்த்தப்படுவதால் அவர்களுக்கு எந்தவிதமான பணிப் பாதுகாப்பும் வழங்க வேண்டிய கட்டாயம் சிறு முதலாளிகளுக்கு இல்லை.
- குத்தகைக்கு விடும் முறை சட்டப்படி குற்றம் என்று தெரிந்தாலும் எந்த அதிகாரியும் ஒப்பந்தக்காரர்கள் மீதோ, ஆலை முதலாளிகள் மீதோ நடவடிக்கை எடுப்பதில்லை. அச்சங்குளம் விபத்திலேயேகூட அந்த ஆலையின் உரிமையாளர் சந்தனமாரி என்பவர் சக்திவேல் என்பவருக்கு மூன்று ஆண்டுகள் குத்தகைக்கு ஆலையை விட்டிருக்கிறார். சக்திவேல் அந்த ஆலையிலுள்ள 13 அறைகளையும் நான்கு பேருக்கு மறு வாடகைக்கு விட்டிருக்கிறார். அதில் ஒருவருடைய அறையில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஒட்டுமொத்த ஆலையும் எரிந்து சாம்பலாகி இருப்பதுடன், 20 பேர் தங்கள் உயிரையும் இழந்திருக்கிறார்கள்.
- பாஸ்பரஸ் என்கிற ரசாயனம் பட்டாசு உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது சட்டென்று தீப்பற்றிக் கொள்ளும் தன்மையுடையது. அதனால், வெயில் சூடேறுவதற்கு முன்பு, எட்டு மணிக்குள் பாஸ்பரஸ் பயன்பாடு தொடர்பான வேலைகளை முடித்துவிட வேண்டும் என்கிறது விதிமுறை. அதை யாரும் பின்பற்றுவதில்லை.
- சிறிய சிறிய அறைகளில் ஒப்பந்தக்காரர்கள் தயாரிப்பில் ஈடுபடுவதால், தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருள்களையும், பாஸ்பரஸ் உள்ளிட்ட ஆபத்தான ரசாயனங்களையும் அந்த ஓர் அறைக்குள் பாதுகாக்க வேண்டிய நிலைமை காணப்படுகிறது. சிறு தீப்பொறியும்கூட பேராபத்தை விளைவிப்பதன் காரணம் அதுதான்.
- விதிமுறை மீறல்தான் விபத்துக்குக் காரணம் என்பது தெரிந்தும், வேடிக்கை பார்த்த அதிகாரிகளுக்கு தண்டனையே கிடையாதா?
நன்றி: தினமணி (17-02-2021)