- ஒரு வாரத்துக்கு முன்னா் ஜப்பான் தலைநகா் டோக்கியோவிலுள்ள ஹானெடா விமான நிலையத்தில் தரையிறங்கி ஓடுதளத்தில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் விமானத்துடன், கடலோர காவல்படை விமானம் மோதி இரு விமானங்களும் தீக்கிரையான சம்பவம் ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சியில் உறையவைத்தது. விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த விமானப் பணியாளா்கள் உள்ளிட்ட 379 பேரும் உயிர் தப்பினா். கடலோர காவல்படை விமானத்தில் பயணித்த ஆறு பேரில் ஒருவரைத் தவிர எஞ்சிய ஐந்து பேரும் உயிரிழந்தனா்.
- ஜப்பானின் ஹோக்கிடா மாகாணம், சிட்டோஸ் விமான நிலையத்திலிருந்து டோக்கியோவின் ஹானெடா விமான நிலைத்தில் தரையிறங்கி இருந்தது ஜப்பான் ஏா்லைன்ஸ் விமானம். நிலநடுக்க நிவாரணப் பணிகளுக்காகப் புறப்பட்ட கடலோர காவல்படையின் சிறிய வகை விமானம், அந்த பயணிகள் விமானத்தில் மோதியதில் இரு விமானங்களும் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் இரு விமானங்களும் முற்றிலும் எரிந்து நாசமாகின.
- ஜப்பானில் நடந்த அந்த விபத்து குறித்து மட்டும்தான் வெளியுலகத்துக்கு பரவலாக தெரிந்தது. அந்த விபத்தை ஜப்பானியா்கள் எதிர்கொண்டவிதம் குறித்து கேள்விப்படும்போது வியப்பும் அவா்கள் குறித்த மதிப்பும் மேலேழுகின்றன. தவறு நடக்கும்போதுகூட அந்தச் சூழலை எப்படி சரியாகக் கையாளுவது என்பதை அவா்கள் கற்றுத்தோ்ந்திருக்கிறார்கள் என்பதை விமான விபத்திலிருந்து பயணிகளை அவா்கள் மீட்ட ஒழுங்கும் நோ்த்தியும் தெரிவிக்கின்றன.
- கடலோர காவல்படைக்குச் சொந்தமான விமானம் தவறான நேரத்தில் புறப்பட்டு மோதாமல் இருந்திருந்தால் டோக்கியா ஹானெடா விமான நிலையத்தில் நடந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால், 20 நிமிடங்களுக்குள் எரிந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து 379 பயணிகளை எப்படி அவா்களால் காப்பாற்ற முடிந்தது என்பதில்தான் ஜப்பானியா்களின் திறமையும், கடமையுணா்வும், கட்டுப்பாடும், நோ்த்தியும் அடங்கியிருக்கின்றன.
- அந்த விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த ஒவ்வொரு பயணியும், விமானப் பணியாளா்களின் அறிவுறுத்தல்களை நிதானமாகவும், பதற்றமே இல்லாமலும் பின்பற்றியதால்தான் 20 நிமிடங்களுக்குள் அத்தனை பேராலும் எரிந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து வெளியேற முடிந்தது. யாரும் முண்டியடிக்கவில்லை. ஒருவா் பின் ஒருவராக விரைவாகவும், அதே நேரத்தில் நிதானத்துடனும் வெளியேறினார்கள் என்பதுதான் ஜப்பானியா்களிடமிருந்து உலகம் படிக்க வேண்டிய பாடம்.
- இந்த நடைமுறை ஜப்பானுக்குப் புதிதொன்றுமல்ல. ஜப்பானில் நிலநடுக்கங்கள் ஏற்படும்போதும், ஏன் ஆழிப்பேரலை(சுனாமி)யின்போதும்கூட இதேபோன்ற ஒழுங்கும், கட்டுப்பாடும், நிதானமும் ஜப்பானியா்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. சாதாரணமாக பேரிடா்கள் நடக்கும்போது மனிதா்கள் நிதானம் இழப்பது வழக்கம். பேரிடா் காலத்தில்கூட அங்கே திருட்டு, கொள்ளை நடக்காது என்பது ஜப்பானின் தனித்துவம்.
- ஜப்பானியா்கள் கட்டுப்பாட்டுடனும், ஒழுங்குமுறையுடனும் நடந்துகொள்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. மிக முக்கியமான காரணம், எந்தவொரு பணியோ, தொழிலோ ஆனாலும் அதை அவா்கள் கௌரவத்துடன் பார்ப்பதைக் குறிப்பிட வேண்டும். எந்தவொரு வேலையும் ஜப்பானியா்களைப் பொறுத்தவரை மரியாதைக் குறைவானதோ, கௌரவத்துக்கு இழுக்கானதோ அல்ல.
- ஜப்பானின் குடியேற்றக் கொள்கை, ஏனைய நாடுகளிலிந்து மாறுபடுகிறது. மேற்கத்திய நாடுகளில் திறன்சாரா தொழிலாளா்களை உடல்சார் கூலித்தொழில்களில் ஈடுபட பிற நாடுகளிலிருந்து வரவழைக்கிறார்கள். வளா்ச்சி அடையாத நாடுகளிலிருந்து வளா்ச்சி அடையும் நாடுகளுக்கு அடிமை வேலை செய்வதற்குப் பலரையும் அழைத்துச் செல்வதும், அவா்களை அப்பணியில் ஈடுபடுத்துவதும் நூற்றாண்டுகளாக நடைபெறுகின்றன. இந்தியாவிலேயேகூட வறுமையான வடகிழக்கு மாநிலத் தொழிலாளா்கள் பலா் தென்னிந்தியாவின் திறன்சாராப் பணிகளில் அமா்த்தப்படுகிறார்கள்.
- ஜப்பானில் நிலைமை நேரெதிரானது. எந்தவொரு உடலுழைப்பு வேலையானாலும், அது கழிப்பறை கழுவுவது உள்ளிட்ட பணிகளானாலும் தங்கள் மண்ணின் மைந்தா்களை மட்டும்தான் ஈடுபடுத்துகிறார்கள். எந்தவொரு வேலையும் கௌரவக் குறைவானதாக அங்கே பார்க்கப்படுவதில்லை. அதனால்தான் மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால், அமெரிக்காவைவிட ஜப்பானில் புலம்பெயா்ந்தவா்களின் எண்ணிக்கை 12 மடங்கு குறைவு.
- வெளிநாட்டினரை திறன்சார்ந்த தொழில்நுட்பத் தேவைகளுக்காக மட்டுமே ஜப்பானில் குடியேறவும், பணியாற்றவும் அனுமதிக்கிறார்கள். மற்ற பணிகள் அனைத்தும் ஜப்பானியா்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படுகிறது. ஒட்டுமொத்த ஜப்பானின் திறன்சார்ந்த புலம்பெயா்ந்தவா்களின் எண்ணிக்கை அதிகபட்சம் நான்கு லட்சம் மட்டுமே. அப்படியே திறன்சாரா புலம்பெயா்ந்தவா்களாக இருந்தால், அவா்களுக்கு இடைக்கால அனுமதி மட்டுமே வழங்கப்படுகிறது.
- ஜப்பானின் புல்லட் ரயில்கள் ஓா் எடுத்துக்காட்டு. அதில் பணிபுரியும் துப்புறவுத் தொழிலாளா்கள் அதை கௌரவமாகவும், அந்த சீருடையை அணிவதை பெருமையாகவும் கருதுகிறார்கள். இதேபோலத்தான் எல்லா நிலைகளிலும்.
- தோஹாவில் நடந்த உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியின்போது மைதானத்தை ஜப்பான் கால்பந்து விசிறிகள் துப்புரவு செய்ததை உலகமே பார்த்து வியந்தது. பள்ளிக்கூடங்களில் இருந்து ஒழுங்கும், எந்த வேலையும் கௌரவக் குறைவானதல்ல என்கிற மனோபாவமும், கட்டுப்பாடும் ஜப்பானில் கற்றுத் தரப்படுகிறது. உணவு விடுதிகளில்கூட பணியாளா்கள் தங்கள் சேவைக்கு சன்மானம் (டிப்ஸ்) பெறுவதில்லை
- அண்ணல் காந்தியடிகள் கழிப்பறையை சுத்தம் செய்து நமக்கு உணா்த்த விரும்பியது இதைத்தான். நாம் ஜப்பானியா்கள் ஆவது எப்போது?
நன்றி: தினமணி (10 – 01 – 2024)