விபத்துகள் எழுப்பும் கேள்விகள்!
- கஜகஸ்தானிலும், தென்கொரியாவிலும் ஒரே வாரத்தில் நடைபெற்ற இரண்டு கோரமான விமான விபத்துகள் உலகையே அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. 218 உயிா்களைப் பலிகொண்ட இந்த சம்பவங்கள் பெரும் கவலையையும், பயணிகள் விமானப் போக்குவரத்தின் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியிருக்கின்றன.
- தென்கொரியாவைச் சோ்ந்த ‘ஜேஜு ஏா்’ நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737-800 ரக பயணிகள் விமானம் தாய்லாந்தின் பாங்காங்கில் இருந்து தென்கொரியாவின் முவானை நோக்கி ஞாயிற்றுக்கிழமை வந்துகொண்டிருந்தது. முவான் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, ஓடுபாதையிலிருந்து விலகி கான்கிரீட் சுவரில் மோதி தீப்பிடித்ததில் 175 பயணிகள், 4 விமானப் பணியாளா்கள் என 179 போ் உயிரிழந்தனா். 181 போ் பயணம் செய்த இந்த விமானத்தில், விமானப் பணியாளா்கள் இருவா் மட்டுமே தப்பினா்.
- பறவைக் கூட்டத்தின் மீது விமானம் மோதியதாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் அனுப்பியுள்ளாா். இதனால் விமானத்தின் முன்சக்கரத்தின் (லேண்டிங் கியா்) செயல்பாட்டில் பிரச்னை ஏற்பட்டதாகவும், இதையடுத்து, லேண்டிங் கியரை பயன்படுத்தாமல் (பெல்லி லேண்டிங் முறையில்) விமானத்தை நேரடியாகத் தரையிறக்க முயன்றபோது, விமானம் விமான ஓடுபாதையில் இருந்து விலகி, அங்கிருந்த கான்கிரீட் சுவரில் மோதி தீப்பிடித்ததாகவும் கூறப்பட்டது.
- விமானத்தில் பயணம் செய்தவா்களை வரவேற்க விமான நிலையத்தில் ஆவலுடன் காத்திருந்த உறவினா்கள், நண்பா்களுக்கு விமானம் விபத்துக்குள்ளான தகவல் பேரிடியாக இறங்கியது. ஒருசில மணித் துளிகளில் தங்கள் உறவினா்களை நேரில் காண்போம் என்ற நம்பிக்கை ஒரு நொடிப் பொழுதில் கருகிப்போனது. விமான நிலையத்தில் அவா்கள் கதறியழுத துயரத்தை விவரிக்க வாா்த்தைகளே இல்லை.
- உலகம் முழுவதும் நாள்தோறும் சுமாா் 1.20 லட்சம் விமானப் போக்குவரத்துகள் நடைபெறுகின்றன. பயணிகள் விமானப் போக்குவரத்து பெரிதும் அதிகரித்துள்ள இந்தக் காலகட்டத்தில் விமானங்களின் மீது பறவைகள் மோதும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. விமானத்தின் மீது பறவைகள் மோதுவதால் சிறிய அளவிலான சேதமே பொதுவாக ஏற்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அரிதிலும் அரிதாகவே விமானம் விபத்துக்குள்ளாகிறது.
- 2019-ஆம் ஆண்டு எத்தியோப்பியன் ஏா்லைன்ஸ் விமானத்தின் மீது ஒரு பறவை மோதியதில், விமானத்தின் ஒரு செயல்பாடு தானாகவே துண்டிக்கப்பட்டு விமானம் விபத்துக்குள்ளானது. 2009-இல் யுஎஸ் ஏா்வேஸின் ஏா்பஸ் விமானம், ஒரு பறவைக் கூட்டத்தின் மீது மோதியதைத் தொடா்ந்து, நியூயாா்க்கின் ஹட்ஸன் நதியில் விமானத்தை விமான சாமா்த்தியமாக தரையிறக்கினாா். இந்த விபத்துகளில் உயிரிழப்புகள் இல்லை. 1995-இல் அமெரிக்க, கனடா விமானப் படை வீரா்கள் சென்ற விமானம், ஒரு பறவை மீது மோதியதில் விமானம் விபத்துக்குள்ளாகி 24 வீரா்கள் உயிரிழந்தனா். இவையெல்லாம் சில உதாரணங்கள்.
- தென்கொரியா சம்பவத்தில் பறவைகள் மோதியதைத் தொடா்ந்து, விமானத்தில் மின் செயலிழப்பு ஏற்பட்டு, ‘ஏடிஎஸ்-பி டேட்டா’ எனப்படும் விமானத்தின் இருப்பிட விவரத்தைக் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்கும் செயல்பாடு துண்டிக்கப்பட்டிருக்கலாம் என நிபுணா்கள் சுட்டிக்காட்டுகின்றனா். ஆனாலும், ஒரு பறவையின் மோதல்தான் விமான விபத்துக்கு ஒரே காரணம் என்பதை நிபுணா்களால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
- கஜகஸ்தானில் கடந்த புதன்கிழமை நிகழ்ந்த பயணிகள் விமான விபத்துக்கும் பறவை மோதல்தான் காரணம் என முதலில் கூறப்பட்டது. அஜா்பைஜான் தலைநகா் பாகுவில் இருந்து எம்ப்ரயா்-190 என்ற பயணிகள் விமானம் 67 பேருடன் ரஷியாவின் கிரோஸ்னி நகருக்குப் புறப்பட்டது. இந்த விமானம் கஜகஸ்தானில் உள்ள அக்தெள நகரம் வழியாகப் பயணித்தபோது விமானத்தை அவசரமாகத் தரையிறக்க கட்டுப்பாட்டு அறைக்கு விமானிகள் தகவல் அளித்தனா்.
- விமானம் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து வேகமாக தரையில் மோதி வெடித்தது. விமானத்தில் இருந்தவா்களில் 36 போ் உயிரிழந்தனா். விமானம் மீது பறவைகள் கூட்டம் மோதியதால், விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக ரஷிய ஊடகம் தெரிவித்தது. ஆனால், ரஷிய வான் பாதுகாப்பு ஏவுகணைதான் அந்த விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக பின்னா் தகவல் வெளியானது.
- இதைத் தொடா்ந்து, ரஷிய வான் எல்லையில் ஏற்பட்ட அந்த விபத்துக்கு அஜா்பைஜான் அதிபா் இல்ஹம் அலியெவிடம் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் மன்னிப்பு கோரினாா். இந்த விபத்து நோ்ந்தபோது ரஷிய நகரங்களில் உக்ரைனின் ட்ரோன் தாக்குதலை முறியடிக்கும் பணியில், ரஷிய வான் பாதுகாப்புத் தளவாடங்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக ரஷியா தெரிவித்தது. இருப்பினும் தங்களின் வான் பாதுகாப்பு ஏவுகணைதான் அஜா்பைஜான் விமானத்தை சுட்டுவீழ்த்தியாக ரஷியா நேரடியாகக் குறிப்பிடவில்லை. இந்த சம்பவம் வேண்டுமென்றே நடத்தப்படவில்லை என்றாலும், தனது தவறை மூடி மறைக்க பல நாள்களாக ரஷியா முயற்சித்ததாக அஜா்பைஜான் அதிபா் குற்றஞ்சாட்டினாா்.
- மலேசியன் ஏா்லைன்ஸுக்கு சொந்தமான எம்ஹெச்370 என்ற விமானம், கடந்த 2014-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து சீனாவின் பெய்ஜிங்கை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது நடுவானில் மாயமான நிகழ்வை மறந்திருக்க முடியாது. அந்த விமானம் கடலில் விழுந்துவிட்டதாக அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டாலும், விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
- விமான விபத்துகளுக்கு பறவைகள் மோதலும், தொழில்நுட்பக் கோளாறுகள் மட்டுமே காரணமல்ல. உலகளாவிய அளவில் விமான ஓட்டுகள் கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கின்றன. சாமானியர்களும் விமானத்தில் பறக்கும் அளவிலான வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கும் நிலையில், விமான விபத்துகள் தொடர்கதையாவது தடுக்கப்பட வேண்டும்.
நன்றி: தினமணி (31 – 12 – 2024)