TNPSC Thervupettagam

விபரீத விளையாட்டுகள்

August 9 , 2023 349 days 242 0
  • சென்னை அருகே நடைபெற்ற இருசக்கர வாகனப் பந்தயத்தின் போது நிகழ்ந்த விபத்தில், 13 வயதுச் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. ஆபத்து நிறைந்த போட்டிகளில் சிறார் ஈடுபடுத்தப்படுவதை அனுமதிப்பது சரியா என்னும் கேள்வியையும் இந்தச் சம்பவம் எழுப்பியிருக்கிறது.
  • காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இருங்காட்டுக்கோட்டையில், சென்னை மோட்டார் விளையாட்டு கிளப் சார்பில் 12 முதல் 17 வயதுக்கு உள்பட்டவர்களுக்கான இருசக்கர வாகனப் போட்டிகள் நடைபெற்றன. ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்ட ஷ்ரேயாஸ் ஹரீஷ் (13), முதல் சுற்றின்போது இருசக்கர வாகனம் சறுக்கியதால் விழுந்தார்.
  • தலைக்கவசமும் கழன்று விழுந்த நிலையில், அவருக்குப் பின்னால் வேகமாக வந்த வாகனங்கள் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே மரணமடைந்துவிட்டார்.
  • ஷ்ரேயாஸ் ஹரீஷ், இந்திய பைக் பந்தய உலகில் மிக மிக முக்கியமான வீரர் எனப் புகழ்பெற்றவர். பெங்களூருவில் உள்ள கென்ஸ்ரி பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தவர். மே மாதம் ஸ்பெயினில் நடந்த எஃப்.ஐ.எம். மினி ஜிபி (FIM MiniGP) உலகக் கோப்பை இறுதிப்போட்டியை எட்டிய முதல் இந்திய வீரர் எனும் பெருமைக்குரியவர். எதிர்காலத்தில் சர்வதேச இருசக்கர வாகனப் பந்தயங்களில் வெற்றிகளைப் பெற இந்தப் போட்டி சிறார்களை ஊக்குவிக்கும் எனச் சொல்லப்படுகிறது.
  • இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக இயல்பாக எல்லோருக்கும் எழும் கேள்வி, சிறுவர்களுக்கென இருசக்கர வாகனப் பந்தயம் எப்படி அனுமதிக்கப்படுகிறது என்பதுதான். பொதுவாக, 18 வயது நிரம்பியவருக்குத்தான் இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் வழங்கப்படுகிறது. ஆனால், இதுபோன்ற பந்தயங்களில் கலந்துகொள்ளும் சிறாருக்கு, இந்திய மோட்டார் வாகனப் பந்தய விளையாட்டு கிளப்களின் கூட்டமைப்பான எஃப்.எம்.எஸ்.சி.ஐ. உரிமம் வழங்குகிறது.
  • எந்த வகையில் பார்த்தாலும், இருசக்கர வாகனப் பந்தயங்கள் நிச்சயம் சிறாருக்குப் பொருத்தமானவை அல்ல. எவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தாலும் விபத்து அபாயம் மிக்க இந்தப் போட்டிகள், உடல் பாகங்களில் காயம் ஏற்படுத்துவது முதல் உயிரிழப்பு வரை பல விபரீதங்களுக்கு வழிவகுப்பவை.
  • சாலை விதிகள் குறித்த கவலை இல்லாமல் இளம் வயதிலேயே வாகனங்களை இயக்கும் சிறாரைப் பல இடங்களில் காண முடிகிறது. தங்கள் பிள்ளைகள் மீதான பாசத்தில், அதிவேக ஆற்றல் கொண்ட இருசக்கர வாகனங்களை வாங்கித்தரும் பெற்றோருக்கும் இதில் பங்கு உண்டு. இது தவிர பள்ளி, கல்லூரி மாணவர்கள் சட்டவிரோதமாக சாலைகளில் இருசக்கர வாகனப் பந்தயத்தில் ஈடுபடுகிறார்கள். இதனால் பல விபத்துகளும் நேர்ந்திருக்கின்றன.
  • உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த வழிகாட்டு நெறிமுறைகளின் படி, வாகனங்களை இயக்கி சிறார்கள் பிடிபட்டால் சம்பந்தப்பட்ட பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி அபராதமும் தண்டனையும் மேலும் கடுமையாக்கப் பட்டிருக்கின்றன. இப்படியான சூழலில், சிறாருக்கெனப் பிரத்யேகமாக இருசக்கர வாகனப் பந்தயங்கள் நடத்தப்படுவது முறையற்றது. இப்படிப்பட்ட ஆபத்தான பந்தயங்களை தடைசெய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (09– 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories