- பிரிட்டன், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று நாடுகளுக்கான முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் பயணத்தில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகி இருக்கின்றன. சுமார் ரூ.8,835 கோடி அளவிலான முதலீடு தமிழகத்திற்கு வருவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
- இதற்கு முன்னால் 2015-லும், இந்த ஆண்டின் தொடக்கத்திலும் நடத்தப்பட்ட அந்நிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையொப்பமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் செயல்வடிவம் பெறாத நிலையில், புதிதாகப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்வதால் என்ன பயன் ஏற்பட்டுவிடப் போகிறது என்கிற எதிர்க்கட்சிகளின் கேள்விகளில் அர்த்தமில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எல்லாமே உடனுக்குடன் செயல்வடிவம் பெறுவதில்லை.
- பல ஒப்பந்தங்கள் நிறைவேறாமலே தடைபடுவதும் உண்டு. அதனால், அதைப்பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
- கடந்த 40 ஆண்டுகளில் இந்தியாவின் ஏனைய மாநில முதல்வர்கள் பலரும் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, 1991-இல் இந்தியா உலகமயக் கொள்கையை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் குஜராத், மகாராஷ்டிரம், ஆந்திரம், பஞ்சாப், ஹரியாணா, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் முனைப்புக் காட்டுகின்றன.
அந்நிய முதலீடுகள்
- அந்நிய முதலீடுகள் என்று கூறும்போது, அவை பன்னாட்டு நிறுவனங்களாகவோ, வெளிநாட்டு முதலீட்டாளர்களாகவோ இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
- இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலத்தவர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் குடியேறியிருக்கிறார்கள். வெளிநாடுவாழ் இந்தியர்களின் முதலீட்டைப் பெறுவதுகூட மிக மிக முக்கியம்.
- குஜராத், பஞ்சாப் மாநிலங்களின் வளர்ச்சிக்கு அயல்நாட்டில் வாழும் அந்த மாநில மக்களின் முதலீடுகள்தான் பெரிய அளவில் உதவியிருக்கின்றன.
- வெளிநாடுவாழ் தமிழர்கள், அவர்கள் வாழும் நாடுகளில் செல்வாக்குடன் திகழ்கிறார்கள், பெரிய பதவிகளை வகிக்கிறார்கள், தொழில் நிறுவனங்கள் நடத்துகிறார்கள். அவர்கள் மத்தியில் தாங்கள் தாயகத் தமிழர்களால் மதிக்கப்படுவதில்லை என்கிற மிகப் பெரிய ஆதங்கம் காணப்படுகிறது.
- பழனி ஜி. பெரியசாமி, டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி போன்ற சிலர் அமெரிக்காவில் தாங்கள் ஈட்டிய செல்வத்தை இந்தியா திரும்பி தமிழகத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள்.
- அழைக்காமலே வந்தவர்கள் இவர்களைப் போன்ற சிலர். ஆனால், அழைப்புக்காகப் பல்வேறு வெளிநாடுகளில் காத்திருப்பவர்கள், இவர்களைப்போல பலர்.
- மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட ஏனைய மாநில முதல்வர்கள் அயல்நாடுகளுக்குச் சென்று அங்கே வாழும் அவர்களது மாநிலத்தவரின் உதவியைக் கோரும்போது, தமிழகம் மட்டும் பாராமுகமாக இருந்த குறையை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அகற்றியிருக்கிறார்.
- தாய்த் தமிழகத்திலிருந்து முதல்வரும், அமைச்சர்களும், அதிகாரிகளும் தங்களத் தேடி வந்திருக்கிறார்கள் எனும்போது அவர்கள் அடையும் உற்சாகமும், பெருமிதமும் வார்த்தையால் விவரிக்க முடியாதவை.
வெளிநாட்டுப் பயணம்
- கிணற்றுத் தவளையாக இல்லாமல், அமைச்சர்களும், அதிகாரிகளும் வெளிநாடுகளுக்குப் பயணிக்கும்போதுதான், அங்கே ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களையும் மாற்றங்களையும் நேரில் கண்டறிந்து அந்த அனுபவத்தை இங்கே செயல்படுத்த முடியும்.
- அமைச்சர்களும், அதிகாரிகளும் வெளிநாடுகள் செல்வது வரி வருமான விரயம் அல்ல. தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடு என்றுதான் கொள்ள வேண்டும்.
- அடுத்தபடியாக, நீர் மேலாண்மை குறித்து நேரில் கண்டறிய இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக முதல்வர் தெரிவித்திருக்கிறார்.
- அவர் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட கீழை நாடுகளுக்கும், நமது தொப்புள் கொடி உறவினர்களான ஈழத் தமிழர்கள் வாழும் இலங்கையின் பகுதிகளுக்கும் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள வேண்டும்.
- வெளிநாடுவாழ் தமிழர்கள் தாய்த் தமிழகத்தில் முதலீடு செய்யவும், தொழில் தொடங்கவும் தங்களது அனுபவத்தையும் தொழில்நுட்பத்தையும் வழங்கவும் வழிகோலினாலே போதும், தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக நம்மால் மாற்றிவிட முடியும்!
நன்றி: தினமணி (12-09-2019)