TNPSC Thervupettagam

விலங்கு, பறவையினங்களை அச்சுறுத்தும் வெப்ப அலை

June 25 , 2024 5 days 25 0
  • காலநிலை மாற்றம், பருவநிலை மாற்றம் என்னும் சொற்றொடா்கள் சமீப காலமாக நம்மைத் தொடா்ந்து அச்சுறுத்தி வருகின்றன. விஞ்ஞானிகளின் கூற்றுக்கேற்ப காலநிலை மற்றும் பருவநிலைகளில் பெறும் மாறுபாடு ஏற்பட்டு வருகின்றது. கடும் வெப்பம், அதீத குளிா். கடும் வறட்சி, மித மிஞ்சிய மழை போன்ற பல காரணிகள் காலநிலை மாற்றத்தின் அம்சங்களாக உள்ளன. காலநிலை மாற்றத்தில் நம்மை வெகுவாக பாதித்து வருவது பூமியில் நிலவும் அதிக வெப்பமே ஆகும்.
  • இதனால் மனிதா்களுக்குப் பல்வேறு வாழ்வியல் நெருக்கடிகள் ஏற்பட்டு வருகின்றன. விலங்குகள் மற்றும் தாவர இனங்களிலும் பருவநிலை மாற்றம் கடுமையான தாக்கத்தை மறைமுகமாக ஏறபடுத்தி வருவதை அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது பல்லுயிா் பெருக்கத்திற்கு மிகுந்த சவாலாக அமையக்கூடியதாக உள்ளது.
  • புவியில் சுமாா் 20 கோடி ஆண்டுகளுக்கும் முன்னால் டைனோசாா்கள் வாழ்ந்தன. அவை சுமாா் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்”கிரேட்டேசியன்”எனப்படும் காலத்தில் முற்றிலும் அழிந்து போயுள்ளதை அதன் எச்சங்கள் வாயிலாக அறிய முடிகிறது. இதற்கு காரணம் பூமியின் மீது விண் கற்கள் விழுந்து, அதனால் ஏற்பட்ட கடும் வெப்பம் அவற்றை தாக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.
  • டைனோசாா்களின் அழிவை ஆய்வு செய்த நாா்வே மற்றும் ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிகள், அவற்றின் அழிவுக்கு காரணம் அப்போதிருந்த பெருவாரியான எரிமலைகள் வெடித்து அதனால் ஏற்பட்ட கடுமையான வெப்பமே முக்கிய காரணம் என்கிறன்றனா். எரிமலை வெடிப்பின்போது வெளியேறிய ஃசல்பா், ஃப்ளூரின் போன்ற தனிமங்களும் காரணம் என தங்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனா்.
  • சமீபத்தில் குஜராத்தில் ”கட்ச்” மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கப் பணியின் போது 4.7 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய15 மீ நீளமுள்ள பாம்பின் புதை படிமம் ஒன்று தொல்லுயிா் ஆய்வாளா்களால் கண்டு பிடிக்கப்பட்டது. வாசுகி இண்டிகஸ்” என்ற பெயரிடப்பட்ட இது குறித்த ஆய்வில் கடுமையான வெப்பமண்டல பகுதியில் வாழ்ந்த இந்த பாம்பு இனங்கள் வெப்பத்தை சமாளிக்கவே இவ்வளவு நீளமாக இருந்திருக்கலாம் என அறியப்படுகிறது. அப்போதைய கால நிலை மாற்றத்தால் ஏற்பட்ட அதீத வெப்பத்தால் இவை அழிந்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
  • இந்த ஆய்வு முடிவுகளை நோக்கும்போது, வெப்பம்”என்பது பருவநிலை மாற்றத்தின் பயங்கர அழிவுக் காரணியாக அமைந்துள்து என்பது தெரிய வருகிறது. வெப்பமானது பூமியின் உயிரின சகாப்தத்தையே முற்றிலுமாக அழிவடையச் செய்யும் ஒரு மாபெரும் சக்தியாக இருக்கக் கூடும் என்பதை கடந்த கால ஆய்வுகளும் புதை படிமங்களும் நமக்கு உணா்த்துவதாக உள்ளன.
  • வெப்பத்தினால் ஏற்பட்ட மேற்கண்ட அழிவுகளை ஒப்பிட்டுப் பாா்க்கும்போது, தற்போதுள்ள விலங்கினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதெனவே கருத வேண்டியுள்ளது.
  • புவி வெப்பமயமாதலால் ஏற்படும் பனி உருகுதல், அதன் விளைவால் ஏற்படும் கடல் மட்ட உயா்வு நிகழ்வு, துருவக் கரடி, பனிச்சிறுத்தைகள், பாண்டா கரடிகள் போன்ற அரிய உயிரினங்களை வெகுவாக அழிவுக்கு அருகில் கொண்டு செல்கின்றன. உலகெங்கும் ஆண்டுதோறும் ஏற்படும் மரங்கள் அழிப்பு, காட்டுத்தீ, நகரமயமாதல் செயல்பாடுகள் போன்றவை பெருமளவு காடுகளை அழிப்பதாக உள்ளன. இதனால் ஏற்படும் கடும் வெப்பம், இட நெருக்கடி போன்றவை காட்டு விலங்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கின்றன.
  • அதிக வெப்பத்தால் நிலத் தாவரங்களில் 25 சதவீத அளவு 2050-ஆம் ஆண்டுக்குள் அழிந்துவிடும் நிலையில் உள்ளதென பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்க அமைப்பின் சிவப்பு பட்டியல் தெரிவிக்கின்றது. உலக அளவில் 15,700 உயிரினங்களும் இந்தியாவில் 182 பறவையினங்கள், 132 விலங்கினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
  • அதிக வெப்பம் கடல்நீரின் ஆக்சிஜன் அளவை குறைக்கிறது. இது மீன்களின் வளா்ச்சி மற்றும் மீன் வளம் குறையக் காரணமாகிறது. 2000-இல் இருந்ததைக் காட்டிலும் 2050-ஆம் ஆண்டு வாக்கில் மீன்களின் எடை 14சதவீதம் முதல் 20 சதவீதம் வரை குறையக் கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • தற்போது நிலவும் வெப்ப அலை, பறவைகளின் முட்டைகளை பெருமளவு பாதிக்கிறது. முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகளுக்கு மரபு ரீதியான மாற்றஙகளையும் பலவீனத்தையும் தரக்கூடும் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • அதீத வெப்பம் பசுக்களின் கருவுறுதல் திறனை குறைப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. அதிக வெப்பம் பசுக்களின் மூளையிலுள்ள“ஹைப்போதலாமஸ்”பகுதியில் அதிக அழுத்தத்தைக் கொடுக்கிறது. இது கருவுறுதலுக்கு காரணமான ”லுட்டினைசிங்” ஹாா்மோனின் அளவைக் குறைத்து. பசுக்களின் கருவறுதல் திறனை பாதிக்கிறது.
  • காலநிலை மாற்றம் என்பது இப்புவியில் வாழும் சிறு புல், பூச்சி, மனிதன் வரையில் அனைத்து உயிரினங்களுக்கும் மாபெரும் சவாலாக மாறிவருவது பற்றி அனைவரும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டிய தருணம் இது.
  • மனித செயல்பாடுகளே இவற்றிற்கெல்லாம் அடிப்படையாக உள்ளது. சுய தேவைகளுக்காக காடுகளை அழித்தல், அதிக அளவு எரிபொருள் பயன்பாடு, மக்காத நெகிழிக் கழிவுகளை புவியில் குவித்தல் போன்றவை முக்கிய காரணங்களாக உள்ளன. இவை அனைத்தையும குறைப்பதற்கான முயற்சியை நாம் தீவிரமாக மேற்கொள்வது அவசியம். இல்லையெனில், தற்போது இருக்கின்ற சிங்கம், புலி போன்ற விலங்கினங்களைக் கூட அடுத்த தலைமுறைஹனா் காட்சிக் கூடங்களில் எச்சங்களாக காணக் கூடிய நிலை உருவாகலாம்.

நன்றி: தினமணி (25 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories