TNPSC Thervupettagam

விளக்கு வைக்கும் நேரத்திலே...

March 13 , 2025 5 hrs 0 min 16 0

விளக்கு வைக்கும் நேரத்திலே...

  • விளக்கு வைப்பது என்பது ஒரு நாளின் இன்றியமையாத ஒன்றாக இருந்தது. ஏனென்றால் சூரியன் அடையும் நேரம் வீடுகளில் விளக்கு வெளிச்சம் இல்லை என்றால், வீட்டினுள் பாம்பு போன்ற உயிரினங்கள் வரலாம். அதனால் மாலை ஐந்தரை மணிக்கே விளக்கேற்று வதற்கான ஆயத்தம் செய்யத் தொடங்கி விடுவார்கள்.
  • விளக்கில் எண்ணெய் இருக்கிறதா, திரி சரியான அளவில் இருக்கிறதா என்பதை எல்லாம் பரிசோதித்துச் சரி செய்வார்கள். சிம்னியைத் துடைத்து வைப்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் சுவரில் விளக்குக் குழி அல்லது விளக்கு மாடம் கட்டி வைத்து இருப்பார்கள். அதில்தான் அந்த விளக்கு இருக்கும்.
  • விளக்கை அணை எனக்கூடச் சொல்ல மாட்டார்கள். அமை என்றுதான் சொல்வார்கள். எண்ணெய் இல்லாமல் விளக்கு அணைவதை அனுமதிக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு விளக்குச் சிறப்பான ஒன்றாகப் பார்க்கப்பட்டது. பல வீடுகளில் திண்ணையிலும் விளக்கு வைப்பார்கள். இரவில் வெளியில் படுப்பவர்களுக்கு இது உதவும். இருட்டுவதற்கு முன்னே சமையல் செய்து, சாப்பிட்டு முடித்து விடுவார் கள். ஏதாவது தேவை என்றால், இந்த விளக்குகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு தான் போவார்கள்.
  • காடுகரை செல்பவர்கள் அரிக்கேன் விளக்கு வைத்திருப்பார்கள். காற்றில் அது அணையாது என்பதால், அதைத்தான் வெளியில் செல்பவர்கள் பயன்படுத்துவார்கள். இரவில் பயணத்தின்போதும் மாட்டு வண்டியில் அரிக்கேன் விளக்கு கட்டியிருப்பார்கள். பலர் இணைந்து செல்லும் போது தீவட்டி வைத்துக்கொண்டு செல்வதும் உண்டு. 70களில் தேர்த் திருவிழாவின்போது இரவில் தீவட்டிப் பிடிப்பார்கள்.
  • ஊரின் முதன்மையான இடங்களில் விளக்குத் தூண்கள் இருந்தன. அவற்றில் விளக்குப் பொருத்தி வைப்பார்கள். துறைமுகங்களில் இருக்கும் அதன் பெரிய வடிவம்தான் இன்றும் பயன்பாட்டில் உள்ள கலங்கரை விளக்கம். குடும்ப விழாக்கள் இரவில் நடக்கிறது என்றால், பெட்ரோமாக்ஸ் விளக்கு கொண்டு செல்வார்கள். அது காற்றில் அணையாது. எண்ணெய் கூடுதலாகச் செலவாகும். அந்தக் காலக்கட்ட விலை வாசிக்கு விலையும் கூடுதல். அதனால் அவற்றை வாடகைக்கு எடுப்பார்கள்.
  • மின்சாரம் அறிமுகமானது. எங்கள் ஊரில் எங்கள் இளமைக் காலத்தில் மின்சாரம் அறிமுகமாகிவிட்டது என்றா லும், அது எல்லா வீடுகளிலும் எல்லாத் தெருக்களிலும் அறிமுகமாக வில்லை. தெருவில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இணைப்பு பெறுபவர்கள் இருந்தால் மட்டுமே மின்சார வாரியம் மின்கம்பம் நடும். அவ்வாறு இல்லாத சில தெருக் களில் சில வசதியானவர்கள், அந்த மின் கம்பத்துக்கான பணத்தைச் செலவழித்து, இணைப்பு பெற்றதும் உண்டு.
  • எல்லா மின்கம்பங்களிலும் விளக்கு இருக்காது. பலரும் தெருவிளக்கில் படித்ததாகச் சொல்வார்கள். அப்படித் தெருவிளக்கில் அமர்ந்து படிக்க வேண்டுமென்றாலும் அது பணக்காரர்கள் வாழும் பகுதியாக இருக்க வேண்டும் என்பதுதான் அன்றைய நிலை. தெருவிளக்கு வேண்டும் என மனு கொடுப்பது, வாக்கு சேகரிக்க வரும் அரசியல்வாதிகளிடம் கோரிக்கை வைப்பது எனப் பல இடங்களில் தெரு விளக்கிற்கே போராட வேண்டியிருந்தது.
  • மின் இணைப்பு இருந்த சில வீடுகளில் கூட மிகவும் சிக்கனமாகத்தான் அவற்றைப் பயன்படுத்துவார்கள். தெருவிளக்கு இருக்கும் தெருக்களில் நடமாட்டம் நன்றாகவே இருக்கும். விளக்கின் அருகில் அமர்ந்து சிலர் படிப்பார்கள். கொஞ்சம் தள்ளி அமர்ந்து சிலர் பீடி சுற்றுவார்கள். இன்னமும் கொஞ்சம் தள்ளி சிலர் விளையாடுவார்கள். அதனருகில் இருக்கும் திண்ணைகளில் பெரியவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். இப்போது இரவிலும் பகல்போல் வெளிச்சம் இருக்கிறது. ஆனால், நடமாடத்தான் மனிதர்களைக் காணோம்!

நன்றி: இந்து தமிழ் திசை (13 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories