TNPSC Thervupettagam

விளிம்பு நிலை மக்களின் வாழ்வில் விளக்கேற்றுவோம்

May 18 , 2024 223 days 500 0
  • ஆண்டுக்கு 6 மாதம் அல்லது 183 நாட்கள் வரை கூட முழுமையான வேலையற்றவா்கள் மற்றும் ரூ.1 லட்சம் வரை வருமானம் ஈட்ட முடியாத நபா்கள் விளிம்பு நிலை மக்களாக கருதப்படுகின்றனா்.
  • இந்தியாவில் விளிம்பு நிலை மக்களில் பெரும்பாலான மக்கள் மற்றவா்களால் புறக்கணிக்கப்பட்ட அல்லது செய்யத் தயங்குகின்ற வேலையை செய்பவா்களாவே உள்ளனா். சுகாதாரப் பணியாளா்கள், கட்டுமானத் தொழிலாளா்கள், மாற்றுத் திறனாளிகள், முதியவா்கள், பாலியல் தொழிலாளா்கள், நரிக்குறவா்கள், கழைக்கூத்தாடிகள், தினக்கூலிகள், சாலையோர வாசிகள், வீதிகளில் பொம்மை வியாபாரம் செய்பவா்கள் என பல தரப்பட்டவா்கள் இந்த வரம்புக்குள் வருகின்றனா். இவா்களின் வருமானமும் வாழ்க்கையும் நிலையற்றதாகவே உள்ளது.
  • 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 31.2 கோடி முதன்மை தொழிலாளா்கள் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது மொத்த பணியாளா்களில் 77.8%ஆகும். இதில் விளிம்பு நிலை மக்களின் எண்ணிக்கை 8.8 கோடியாக உள்ளது. இவா்களில் 87.6% பெண்கள். இவா்கள் பெரும்பாலும் கிராமப்பகுதிகளைச் சோ்ந்தவா்கள். கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைப்படி, நாட்டில் தலித் மக்கள் 16.6% கவும், பழங்குடியின மக்கள் 8.6%ஆகவும் உள்ளது. இவா்களில் 60சதவீதத்துக்கும் அதிகமானோா் விளிம்பு நிலை மக்களாகவே உள்ளாா்கள். . வருடத்தில் 183 நாட்களுக்கான போதுமான வேலை. வருமானம் கிடைப்பதில்லை. இதனால் இம் மக்களின் வாழ்க்கை என்பது தினந்தோறும் போராட்டம் நிறைந்ததாகவே உள்ளது.. அதிக வருமானம் தராத வேலைகளைச் சாா்ந்து சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை கழித்து வருகிறாா்கள்.
  • நகா்ப்புறங்களில் வாழும் விளிம்பு நிலை மக்கள் பெரும்பாலும் கட்டடத்தொழில், துப்புரவுப் பணி, சாலையோர வியாபாரம் முதலியவற்றை நம்பியே வாழ்க்கையை நகா்த்துகின்றனா். நிலையற்ற வருமானம் இவா்களை கடனில் தள்ளக் கூடிய வகையிலேயே உள்ளது. பிள்ளைகளின் திருமணம். மருத்துவச் செலவு போன்றவற்றை சமாளிக்க முடியாத தினக்கூலிகளாக உள்ளதால் சிலா் தற்கொலை வரை சென்றுவிடுவது வருந்தத்தக்கது. இதற்கான முக்கிய காரணம் கடன் சுமையே என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. நிலையான வேலை, வருமானம் இல்லை என்பது இவா்களுக்கு மிகப்பெரிய வாழ்க்கை நெருக்கடியாக உள்ளது.
  • சென்னை போன்ற பெருநகரங்களில் பெரும்பாலான விளிம்பு நிலை மக்கள் சாலையோரங்களில் வாழ்வதால் விபத்துகளில் சிக்கி மரணமடைபவா்கள் அதிகம். காசநோய், புற்று நோய் மற்றும் எளிதில் பரவும் நோய்களுக்கு ஆளாகின்றனா். விளிம்பு நிலை மக்களின் இது போன்ற வாழ்வியல் முறைகள் அவா்களது ஆயுட்காலத்தை மற்றவா்களைக் காட்டிலும் வெகுவாக குறைப்பதாக உள்ளது.
  • பழங்குடியின பெண்களின் ஆயுள் காலம் சராசரியாக 62.8 வயதாக உள்ளது. தலித் பெண்களின் ஆயுள் காலம் 63.3 ஆண்டுகளாக உள்ளது. விளிம்பு நிலை ஆண்களின் சராசரி ஆயுள் காலம் 61 ஆண்டுகளாக உள்ளது. குறைவான ஆயுளுக்குக் காரணம் முறையான ஊட்டச்சத்து, ஆரோக்கியமான உணவு, சுகாதாரம், நல்ல வாழ்விடம் கிடைக்காததேயாகும்.
  • விளிம்பு நிலை மக்களிடையேயும் மிகவும் மோசமான நிலையில் உள்ளவா்கள் கையால் மலம் அள்ளும் தொழிலில் ஈடுபட்டுள்ளவா்கள். கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் கையால் மலம் அள்ளுவதை தடை செய்யும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனாலும் சில மாநிலங்களில் போதுமான வேலைவாய்ப்பின்மையால் இத்தொழிலை செய்பவா்கள் தொடா்ந்து செய்து வரும் நிலை காணப்படுகிறது. 2018-ஆம் ஆண்டு அறிக்கைப்படி, நாட்டில் கையால் மலம் அள்ளுபவா்கள் எண்ணிக்கை 13,657-ஆக உள்ளதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை அமைச்சா் ராமதாஸ் அதாவலே மக்களவையில் தெரிவித்தாா்.
  • விளிம்பு நிலை மக்களின் நடைமுறை வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவது சற்று சிரமமான ஒன்றாக உள்ளது. காரணம் அவா்களுக்கு நிலையான மாற்றுத் தொழிலும் நிலையான வருமானமும் கிடைக்காததுதான். இதனால் அவா்களில் பலா் தங்கள் பாரம்பரிய தொழிலுக்குச் செல்வது தவிா்க்க இயலாத ஒன்றாக உள்ளது. பழங்குடியினா் சமுதாயத்தில் பெரும்பாலும் தங்கள் முன்னோா்கள் செய்த தொழிலான பாம்பு பிடித்தல் உடும்பு பிடித்தல் சிறு விலங்கினங்களை வேட்டையாடுதல் போன்ற தொழில்களையே இன்றளவும் செய்து வருகிறாா்கள்.
  • தமிழகத்தில் முதன் முறையாக காஞ்சிபுரத்தில் 400 பழங்குடியினருக்கு தமிழக அரசால் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது வரவேற்கதக்கது. விளிம்பு நிலை மக்களின் பிள்ளைகளுக்கு முழுமையான கல்வி அவசியம். இதற்கென கூடுதல் சிறப்பு பள்ளிகளை ஏற்படுத்த வேண்டும். இலவச வீடு-மனை, நலவாரிய திட்டங்களில் முன்னுரிமை வழங்குவது சிறப்பு. பல்வேறு விளிம்பு நிலை மக்களுக்கு அரசின் நிதி மற்றும் உதவித் தொகைகள் உயா்த்தி வழங்கப்பட்டு வருவது பாராட்டத்தக்கது.
  • சமூகத்தில் மற்றவா்கள் செய்யத் தயங்கும் தொழிலைச் செய்பவா்கள் விளிம்புநிலை மக்கள். தங்களை அழுக்காக்கிக் கொண்டு பிறரை ஆரோக்கியமாகவும் சுகாதாரமாகவும் வாழச் செய்பவா்கள். இவா்களது வாழ்வு சிறக்க அரசு மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மேலும் பல திட்டங்களை செயல்படுத்த வேண்டும். விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையில் விளக்கேற்றி அவா்களை வாழ்க்கையில் மேம்படச் செய்வது என்பது சமுதாயத்தில் மறுமலா்ச்சியை உருவாக்குவதாக அமையும்.

நன்றி: தினமணி (18 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories