TNPSC Thervupettagam

விளிம்புநிலையில் உழலும் நரிக்குறவர் சமூகம் விடுபடுவது எப்போது?

November 1 , 2021 1000 days 454 0
  • மாமல்லை தலசயனப் பெருமாள் கோயில் அன்னதானத்தில் நரிக்குறவர் சமூகத்தினரை அருகமர்த்தி, அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உணவருந்தும் காட்சி பெருங்கவனத்தை ஈர்த்துள்ளது.
  • கோயில்களில் தினசரி அளிக்கப்பட்டுவரும் அன்னதானத்தில் அவமதிக்கப்படுவதாக நரிக்குறவச் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி, சமூக வலைதளத்தில் குற்றம்சாட்டியதை அடுத்து அமைச்சர் எடுத்திருக்கும் இந்த உடனடி நடவடிக்கை, சமூகத்தின் விளிம்புநிலையில் இருக்கும் மக்களின் உரிமைக் குரலுக்கு அரசு உடனடியாகச் செவிசாய்க்கிறது என்பதற்கான உதாரணமாய் அமைந்துள்ளது.
  • இனத்தின் பெயராலோ சாதியின் பெயராலோ எவர் ஒருவரும் பாரபட்சத்துடன் நடத்தப்படக் கூடாது என்பதை இந்திய அரசமைப்பின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகவே வரித்துக்கொண்டிருந்தாலும், இன்னும் அது முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என்பதையே மாமல்லை கோயில் அன்னதானத்தில் நரிக்குறவர்கள் அவமதிக்கப்பட்ட நிகழ்வு நமக்குச் சொல்கிறது.
  • கோயில் வளாகத்தில் நடந்த அவமதிப்பு குறித்து ஒரு குற்றச்சாட்டு எழுந்த உடனே, அறநிலையத் துறை அமைச்சர் உடனடியாக அவரே களத்தில் இறங்கி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
  • இனி வரும் காலங்களில், மற்ற ஊர்களின் கோயில்களில் நரிக்குறவ சமூகத்தவர்கள் அவமதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை அமைச்சரின் நடவடிக்கை இல்லாமலாக்கியிருக்கிறது.
  • அதே நேரத்தில், நரிக்குறவர் சமூகத்தவர்கள் விடுக்கும் மற்ற சில கோரிக்கைகளும்கூடத் தவிர்க்கவியலாத முக்கியத்துவம் கொண்டவைதான் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது.
  • கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்திலிருந்து அரை கிமீ தொலைவிலுள்ள நரிக்குறவர் குடியிருப்பில் கழிப்பறை வசதிகள் இல்லை என்பதைக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு செய்தி ஏடுகள் கவனப்படுத்தின. கழிப்பறை வசதிகள் இல்லாத நிலை, பெண்களும் குழந்தைகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதற்கும் காரணமாக அமைந்துள்ளது. கும்மிடிப்பூண்டி போன்ற துயர நிலைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் தொடர்புடைய அமைச்சர்களும் அதிகாரிகளும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
  • கோயில்கள் சமூகத்தின் மையங்கள். கோயில்களில் நடக்கும் எந்தவொரு சுபநிகழ்வும் அங்கு வாழும் அனைத்து சமூகத்தவர்களையும் உள்ளடக்கியதாகத்தான் நடந்துவருகின்றன. நரிக்குறவ சமூகத்தவர்கள் ஓரிடத்தில் நிலையாகத் தங்காமல் நாடோடி வாழ்க்கை முறையைக் கொண்டவர்கள் என்பதால், கோயில் விழாக்களில் அவர்களின் பங்களிப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால், பெருந்திருவிழாக்கள் அனைத்திலும் அவர்கள்தான் பெண்களுக்கு வளையல்களை விற்கிறார்கள்; குழந்தைகளுக்குப் பொம்மைகள், பலூன்கள் விற்கிறார்கள்.
  • அதிலிருந்து கிடைக்கும் சிறு லாபமே அவர்களது வாழ்வாதாரம். திருவிழாக்களின் ஒரு பகுதியாக இருக்கும் அவர்களை அன்னதானக் கூடத்தில் அனுமதிப்பதற்கு மட்டும் தயங்குகிறோம். அந்த அணுகுமுறை தவறானது என்பதை அறநிலையத் துறை அமைச்சர் உணர்த்தியிருக்கிறார்.
  • கோயில்களின் அன்னதானக் கூடங்களில் நரிக்குறவ சமூகத்தவர்கள் அனுமதிக்கப்பட்டிருப்பது ஒரு தொடக்கமாக இருக்கட்டும். திரையரங்குகள், அங்காடி வளாகங்கள், உணவகங்கள் என அவர்களை இன்னும் உள்ளே நுழைய அனுமதிக்காத இடங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அங்கேயும் மனமாற்றங்கள் உருவாகட்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (01 - 11 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories