TNPSC Thervupettagam

விளையாட்டில் வெல்வோம்

October 5 , 2021 1152 days 625 0
  • அண்மையில் டோக்கியோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பங்களிப்பை பார்க்கும்போது, ஓடி விளையாடு பாப்பா என்ற பாரதியின் வரிகளை தேசம் மறந்து விட்டதோ என நினைக்கத் தோன்றுகிறது.
  • டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களையே இந்தியா பெற்றிருக்கிறது. இந்த ஒலிம்பிக்கில் மொத்தம் 205 நாடுகள் பங்கேற்றுள்ள நிலையில், பதக்க எண்ணிக்கை அடிப்படையில் 48 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.
  • 1896 முதல் 2020 வரையில் மொத்தம் 29 போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்தியா 25 போட்டிகளில் பங்கேற்று, ஹாக்கியில் 12, துப்பாக்கிச் சுடுதலில் 4, தடகளத்தில் 3, மல்யுத்தத்தில் 7, பாட்மின்டனில் 3, பளு தூக்குதலில் 2, குத்துச்சண்டையில் 3, டென்னிஸில் 1 என மொத்தம் 35 பதக்கங்களைப் பெற்றிருக்கிறது.
  • பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. அந்நாடு பெற்ற பதக்கங்கள் 2,693. அடுத்ததாக ரஷியா 1,204 , பிரிட்டன் 948, ஜெர்மனி 892, சீனா 696 (தங்கம் மட்டுமே 258), பிரான்ஸ் 874 (தங்கம் 257) என பட்டியல் நீள்கிறது. இதில் மிகவும் பின்னால் இந்தியா இருப்பது தான் நெருடலான விஷயமாக இருக்கிறது.
  • அரசியல் நிலைத்தன்மை, விண்வெளி ஆய்வு, பொருளாதாரம், ராணுவம், ஆயுத பலம், உலக நாடுகளுடன் நட்புறவு, மென்பொருள் உற்பத்தி போன்றவற்றில் சக்திவாய்ந்த 25 நாடுகள் பட்டியலை ஒவ்வோர் ஆண்டும் "சிஇஓ வேல்டு' என்ற இதழ் வெளியிடுகிறது.
  • இதில், வளர்ச்சி அடைந்த நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷியாவுக்கு அடுத்ததாக நான்காவது இடம் பெற்றுள்ளது நம் தேசம். அதாவது ஐ.நா. பாதுகாப்பு சபை நிரந்தர உறுப்பினர்களான பிரான்ஸும் பிரிட்டனும் கூட இந்தியாவுக்கு அடுத்ததாகவே இடம் பெற்றிருக்கின்றன என்பதை கவனிக்க வேண்டும்.
  • மற்ற விஷயங்களில் வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கு நிகராக நாம் இருக்கும்போது விளையாட்டிலும் அந்த வல்லமை இருக்க வேண்டாமா? அது ஏன் இல்லை என்ற கேள்விக்கு விடை காண்பது மிகவும் அவசியம்.
  • 2016-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் ஒரு வெள்ளிப்பதக்கமும் ஒரு வெண்கலப்பதக்கமும் மட்டுமே பெற்றபோது, அரசு விழித்துக்கொண்டு நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து இருப்பதால்தான் தற்போது நம்மால் ஏழு பதக்கங்களைப் பெறமுடிந்தது என்பதை மறுப்பதற்கில்லை.
  • ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பங்களிப்பு ஆரம்பத்தில் இருந்தே வலுவானதாக இல்லை என்பது தான் உண்மை. இந்தியாவின் ஒற்றை இலக்க ஒலிம்பிக் பதக்கங்கள் குறித்து நாம் பேசாமல் இருக்கலாம்.
  • ஆனால் வெளிநாட்டு பத்திரிகைகள் இந்திய மக்கள்தொகையை மிகச்சிறிய நாடுகளுடன் ஒப்பிட்டு நமது பலவீனத்தை பறைசாற்றிக்கொள்ளத் தவறுவதில்லை.

நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

  • இந்த பின்னடைவுக்கு பல்வேறு காரணங்களையும் கண்டறிந்து அவை வெளியிடுகின்றன. அவற்றில் விளையாட்டுத்துறைக்கு இந்தியா செலவிடும் தொகை யோசிக்க வைப்பதாக உள்ளது.
  • 2010-21-இல் விளையாட்டுத்துறைக்கு இந்தியா ஒதுக்கீடு செய்த தொகை ரூ.2,500 கோடி. இது மொத்த பட்ஜெட்டில் 0.07சதவீதம். ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) ஆண்டு வருவாய் (2018-ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி) சுமார் ரூ. 4, 017 கோடி என கூறப்படுகிறது.
  • கிரிக்கெட்டின் இத்தகைய வளர்ச்சிக்கும் மற்ற விளையாட்டுகளின், குறிப்பாக, ஹாக்கியின் வீழ்ச்சிக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருப்பதாகவே தோன்றுகிறது.
  • இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்பதையே மறந்துவிடும் அளவுக்கு கிரிக்கெட் விளையாட்டு இந்தியாவில் கோலோச்சுகிறது.
  • சிங்கப்பூர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ரோனோ ஜாய் சென் எழுதிய "ஹிஸ்டரி ஆப் ஸ்போர்ட்ஸ் இன் இந்தியா' என்ற புத்தகத்தில், "இந்தியாவில் விளையாட்டில் ஆர்வமிக்கவர்களை அவர்களது குடும்பத்தினரும் சமூகத்தினரும் ஊக்குவிப்பதில்லை. அவர்கள் அவநம்பிக்கை ஏற்படுத்துகின்றனர்.
  • பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாகச் சேர்ந்து விளையாடுவதில்லை. மக்கள்தொகையில் பெரும்பான்மையாக உள்ள ஜாதியினருக்கு கல்வி, சத்தான உணவு, சுகாதார வசதிகள் கிடைப்பதில்லை. விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும் அவர்களால் இயலவில்லை' என குறிப்பிட்டுள்ளார்.
  • "விளையாட்டுத் துறைக்கு அரசு முன்னுரிமை அளிக்கவில்லை. இளம் வயது வீரர்களைத் தேர்வு செய்யவும் அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கவும் சரியான வழிமுறை இங்கு இல்லை' என குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட இந்திய வீரர் ஒருவர் குறை கூறியபோது, அப்போதைய ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் கூறியது கவனிக்க வேண்டிய விஷயம்.
  • "இந்தியக் குடும்பங்களில் உள்ளவர்கள் விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. கல்விதான் அவர்களது பிரதான நோக்கமாக உள்ளது.
  • படிப்பை முடித்து மருத்துவராகவோ கணக்காளராகவோ வருவதில்தான் அக்கறை கொள்கின்றனர். ஒலிம்பிக் வீரராக வரவேண்டும் என நினைப்பதில்லை.
  • விளையாட்டுப் போட்டியால் குடும்பம் நடத்தத் தேவையான அளவில் பணம் சம்பாதிக்க முடியாது என்பதே அவர்களது அடிப்படை எண்ணமாக உள்ளது' என்று கூறினார்.
  • "விளையாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த அரசு முயன்று வருகிறது. இதில் வெற்றி காண நீண்ட காலம் ஆகும்' என பளு தூக்கும் பயிற்சியாளர் விஜய் சர்மா கூறியிருப்பதும், "விளையாட்டு சூழல் மாறியிருக்கிறது.
  • புதிய அத்தியாயம் ஆரம்பமாகியுள்ளது' என ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கிய அபினவ் பிந்த்ரா கூறியிருப்பதும் நமக்கு ஆறுதலளிப்பவையாக உள்ளன.
  • வளர்ச்சி அடைந்த நாடுகளைப் போன்று நம் நாடும் விளையாட்டிலும் வலிமை பெற வேண்டியது அவசியம்.
  • எனவே ஒலிம்பிக் போட்டிகளில் நம்மால் வெற்றி பெற முடியாமல் போவதற்கு அடிப்படையில் என்ன பிரச்னை என்பதை அரசு ஒரு குழு அமைத்து ஆராய்ந்து அதனடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நன்றி: தினமணி  (05 - 10 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories