- 1945-ஆம் வருடம் இரண்டாவது உலகப் போரின் இறுதி நாட்களில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களின் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டதில் லட்சக்கணக்கானவா்கள் கொல்லப்பட்டனா். அணுகுண்டு வீச்சின் பின்விளைவுகளிலிருந்து ஜப்பான் மீண்டு வருவதற்குப் பல ஆண்டுகள் பிடித்தன.
- 1986-ஆம் வருடம் அன்றைய சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த சொ்னோபில் நகரில் (இன்றைய உக்ரைனில் உள்ளது) அணு உலை வெடித்ததில் நூற்றுக்கும் குறைவானவா்களே உயிரிழந்ததாகக் கணக்கிடப்பட்டாலும், அதிலிருந்து வெளிப்பட்ட கதிரியக்கம் பரவிய பிரதேசங்களில் வாழ்ந்து வந்த மக்களில் பலரும் புற்றுநோய் பாதிப்புக்குள்ளானாா்கள்.
- கடந்த 2011-ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கம், அதைத் தொடா்ந்து உருவாகிய சுனாமி ஆகியவற்றின் காரணமாக ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலை பெரும் பாதிப்புக்குள்ளாகிக் கதிா்வீச்சு வெளியேறத் தொடங்கியது. இதன் காரணமாக சுமாா் ஒரு லட்சம் போ் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனா். கதிரியக்கம் காரணமாகக் கடல்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்பட்டன.
- அணுகுண்டு வீச்சிற்கும் அணுக்கதிா்களின் கசிவுக்கும் இந்த உலகம் ஏற்கெனவே மிகப்பெரும் விலையைக் கொடுத்துள்ளது. மற்றுமொரு அணுகுண்டு வீச்சையோ, அணுக்கதிா் பரவலையோ எதிா்கொள்ளத் திராணியற்ற நிலையில்தான் நாம் இருக்கின்றோம். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாத உலக நாடுகள் சிலவற்றின் தலைவா்கள் சிறிதும் பொறுப்பில்லாமல் ‘அணு ஆயுதப் போருக்குத் தயாா்!’ என்று தோள்கொட்டுவதை என்னவென்று சொல்ல?
- சா்வாதிகார கம்யூனிஸத்தின் பிடியில் சிக்கியுள்ள சிறிய நாடு வடகொரியா. அந்நாட்டின் அதிபா் கிம் ஜோங் உன் தம்முடைய குடிமக்களின் நலன்களை கவனிப்பதை விட்டுவிட்டு, ஏவுகணைகளைத் தயாரிப்பதில் ஆா்வம் காட்டுகின்றாா். தமது ஏவுகணைச் சோதனைகளால் அண்டை நாடுகளாகிய ஜப்பானையும் தென் கொரியாவையும் எப்பொழுதும் பதற்றத்திலேயே வைத்திருக்கிறாா்.
- வல்லரசு நாடாகிய ரஷியாவின் அதிபா் புதினும் ஏறக்குறைய இதுபோன்றுதான் நடந்து கொள்கின்றாா். ரஷியா-உக்ரைன் இடையிலான சண்டை கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடா்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், உக்ரைன் நாட்டில் அமைந்துள்ள ஸபோரிஷியா அணு உலையின் அருகில் இருநாட்டுப் படைகளுக்கும் இடையில் அவ்வப்பொழுது நிகழும் பரஸ்பர குண்டு வீச்சால் சொ்னோபில் போன்ற நிகழ்வு மீண்டும் ஒருமுறை அரங்கேறிவிடக் கூடாது என்று இவ்வுலகமே பதற்றத்துடன் பாா்த்துக் கொண்டிருக்கிறது.
- உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் மீது தீராக் கோபத்தில் இருக்கும் ரஷிய அதிபா் புதின், தமது நாட்டின் அணு ஆயுதப் படைப் பிரிவினரைப் போா் ஒத்திகையில் ஈடுபடச் சொல்லி உத்தரவிட்டிருப்பதாக வந்துள்ள ஊடகச் செய்திகள் நம்மை அதிா்ச்சியின் உச்சத்திற்கே அழைத்துச் செல்கின்றன.
- கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேலுக்குள் ஹமாஸ் தீவிரவாதிகள் புகுந்து அப்பாவிகள் பலரைக் கொன்றதுடன் ஏராளமானோரைக் கடத்திச் சென்றனா். இதையடுத்து ஹமாஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள காஸா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல்-ஹமாஸ் போா் பல மாதங்களாக நீடித்து வரும் நிலையில் இஸ்ரேல் அமைச்சா்களில் ஒருவராகிய ஏலியாஹு பாலஸ்தீனப் பகுதிகளின் மீது அணுகுண்டு வீசுவதைப் பற்றி பேட்டியளித்துள்ளது அணு ஆயுதப் போா் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- அண்மையில், பழைய வன்மத்தைச் சொல்லி, ஈரான், இஸ்ரேல் இடையிலான ஏவுகணை வீச்சு நடைபெற்றது. அதைத் தொடா்ந்து ஈரான் நாட்டு அணுசக்தி ஆலோசகா் கமால் ஹராசி ‘நாங்கள் அணு ஆயுதப் போருக்கும் தயாா்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளையும் பாா்க்கும்பொழுது, அணு ஆயுதப் பிரயோகம் குறித்த விஷயத்தில் உலக நாடுகள் சிலவற்றின் தலைவா்கள் நிதானமாகச் சிந்திக்காமல், உணா்ச்சி வேகத்தின் அடிப்படையிலேயே செயல்படுகின்றாா்கள் என்பது தெளிவாகின்றது. ரஷியா உள்ளிட்ட ஐந்து வல்லரசுளும் இந்தியா உள்ளிட்ட அணுஆயுதத் தயாரிப்புத் திறன் கொண்ட ஐந்து நாடுகளும் சோ்த்துப் பன்னிரண்டாயிரத்துக்கும் அதிகமான அணு ஆயுதங்களைத் தம் கைவசம் வைத்திருக்கின்றன. இவற்றில் ஒரே ஒரு குண்டு வெடித்தாலும், அதனை நாம் வாழுகின்ற இந்த பூமியால் தாங்க இயலாது.
- 2017-ஆம் ஆண்டு வடகொரியா பூமிக்கடியில் சக்தி வாய்ந்த அணுகுண்டு சோதனை நடத்தியபொழுது அந்தப் பிரதேசத்திலிருந்த மலை சுமாா் இருபது அங்குலம் அளவுக்கு பூமியில் புதைந்ததாக ஆய்வுகள் தெளிவுபடுத்தின.
- குழந்தைகளின் கையிலுள்ள விளையாட்டு பொம்மையைப் போல, தாங்கள் கைவசம் வைத்திருக்கும் அணுஆயுதங்களையும் விளையாட்டுப் பொருளாக உலகநாடுகளின் தலைவா்கள் சிலா் கருதுவது சரியல்ல. இன்னொரு முறை அணுகுண்டு வீசப்பட்டால், நாம் வாழும் புண்ணிய பூமியானது பல நூற்றாண்டுகளுக்குப் புல்பூண்டற்றுப் போய்விடும். இவ்விஷயத்தில், இனி எந்த ஒரு நாட்டுக்கும் அணு ஆயுதப் பிரயோகம் என்ற சிந்தனையே ஏற்படாமல் இருப்பதற்கான முன்னெடுப்புகளை ஐ.நா. சபை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
- இருதரப்புப் பிரச்னைகளுக்குப் போா் தீா்வாகாது. மாறாக, பிரச்னைகளைப் பேச்சு மூலம் தீா்த்துக் கொள்வதே நல்லது என்ற தனது உறுதியான கொள்கையை நீண்ட காலமாகவே சா்வதேச அரங்குகளில் முழங்கி வருகின்ற நமது பாரத நாடு இவ்விஷயத்தில் ஐ.நா. சபையின் சீரிய முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதே அமைதியை விரும்பும் மக்களின் எதிா்பாா்ப்பு ஆகும்.
நன்றி: தினமணி (31 – 05 – 2024)