TNPSC Thervupettagam

விழித்திரையை விலகாமல் காப்போம்

December 16 , 2023 385 days 281 0
  • வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்த இளைஞர் ஒருவர் தன் நண்பரான கண் மருத்துவரைச் சந்திக்கச் சென்றார். நீண்ட நாள்களுக்குப் பிறகு சந்தித்த இருவரும் மகிழ்வுடன் பேசிக்கொண்டிருக்க, “நீ முன்பு தடிமனான கண்ணாடி அணிந்திருந்தாயே, இப்போது அணியவில்லையே... ஏதாவது அறுவை சிகிச்சை செய்துகொண்டாயா?” எனக் கண் மருத்துவர் கேட்டார்.
  • “ஆமாம் நண்பா! நான்கு வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் லேசிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். அதன் பிறகு கண் பார்வை தெளிவாக தெரிகிறது” என்று நண்பர் கூறினார்.
  • “அறுவை சிகிச்சைக்குப் பிறகு வருடம் ஒரு முறை கண் விழித்திரைப் பரிசோதனை செய்து கொண்டாயா?” எனக் கண் மருத்துவர் கேட்க, இல்லையென நண்பர் பதிலளித்தார்.
  • “சரி, இப்போது பரிசோதனை செய்து கொள்ளலாம்” எனக் கூறிய கண் மருத்துவர், அவர் நண்பருக்குக் கண் விழித்திரை பரிசோதனை செய்ய, கண்ணில் நரம்பு ஓரத்தில் விழித்திரை துளை (Retinal Hole) இருப்பதைக் கண்டறிந்தார்.
  • உடனடியாக அவருக்கு லேசர் மூலம் அந்தத் துளையைச் சரிசெய்ய சிகிச்சை அளிக்கப்பட்டது. மிகவும் பயந்து போன நண்பர் கண் மருத்துவரிடம், “நான் உங்களைச் சந்திக்காமல் இருந்திருந்தால் இந்தக் கண் விழித்திரை துளை சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இருந்திருந்தால் என்ன விளைவு ஏற்பட்டிருக்கும்” என்று கேட்டார். சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டதால் அவர் பெரும் பாதிப்பிலிருந்து மீண்டார்.

விழித்திரையைக் கவனியுங்கள்

  • நாம் அறியாமலே கண்ணின் விழித்திரையில் விலகல் ஏற்பட்டு, பார்வை பாதித்திருக்கும். அதற்குக் கண் விழித்திரை விலகல் சரிசெய்யும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். அப்படி அறுவை சிகிச்சை செய்தாலும் சில நேரம் பார்வையை முழுவதும் திரும்பிக் கொடுக்க இயலாமல் போகலாம். மேலே குறிப்பிட்ட மருத்துவரின் நண்பருக்குக் கண் விழித்திரை சிகிச்சை அளித்ததைப் போல் ஆரம்பத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் மிகப் பெரிய அறுவை சிகிச்சையிலிருந்து கண்களைக் காத்துக்கொள்ளலாம். இதைப் போல எதிர்காலத்தில் நாம் சந்திக்கப்போகும் மிகப் பெரிய சவால் ‘உயர் கிட்டப்பார்வை குறைபாடு’.
  • கரோனா தொற்றுக் காலத்திற்குப் பிறகு குழந்தைகள் இணைய வகுப்பிலும் இணைய விளையாட்டுகளிலும் மூழ்கிக் கிடப்பதால் உயர் கிட்டப்பார்வை குறைபாடு (High Myopia) அதாவது விழிக்கோளத்தின் குறுக்களவு ( Eye Axial Length) மிக அதிகமாகிக் காணப்படும் குறைபாடு தற்போது அதிகரிக்கச் சாத்தியம் இருப்பதாகக் கூறுகிறது அமெரிக்கக் கண் மருத்துவர்கள் சங்கம். குழந்தைகளுக்கும் கண் விழித்திரை ஓரம் மெலிதாகி விழித்திரை சிறு துளை ஏற்படக்கூடும். இதை லேசர் சிகிச்சை அளித்து கண் விழித்திரை விலகல் ஏற்படாமல் தடுக்க வேண்டும். இதனால்தான் கண்ணாடி அணிந்திருக்கும் எல்லாக் குழந்தைகளும் வருடம் ஒருமுறை கண் விழித்திரை பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கண் மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

கண் விழித்திரை என்றால் என்ன

  • கண்ணின் உள்பகுதியில் இருக்கும் நரம்புக் கற்றைகளுக்குப் பெயர்தான் விழித்திரை. இதை நாம் ரெட்டினா என்று அழைக்கிறோம். பல்லாயிரக்கணக்கான சிலந்தி வலைகள் ஒன்றோடு இன்னொன்றாக அடுக்கி வைக்கப்பட்டதைப் போல் கண் உள் பகுதியில் இந்த விழித்திரை காணப்படும்.
  • நரம்பு விலகல் அறிகுறிகள்
  • முதலில் கண்ணில் பூச்சி பறப்பதைப் போல் ஓர் உணர்வு இருக்கும்.
  • கண்ணில் ஒளி வட்டம் மின்னுவதைப் போல் தெரியும்.

  • திடீரெனப் பார்வையில் ஒரு பகுதியோ முழுவதுமோ பாதிக்கப்பட்டுப் பார்வை தெரியாமை ஏற்படும். சில நேரம் அறிகுறிகள் எதுவும் இல்லாமல்கூட விழித்திரை விலகல் ஏற்படலாம். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்கு இதுபோன்று நிகழ சாத்தியம் அதிகம்.

தற்காத்துக்கொள்வது எப்படி

  • வருடம் ஒரு முறை முழுக் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருத்துவர் அறிவுரைப்படி விழித்திரை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மேலும், இன்று இளம் வயதில் கண் கண்ணாடி அணிந்திருந்தவர்கள் லேசிக் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு தங்கள் கண்களைப் பரிசோதனை செய்துகொள்ள மறந்துவிடுகிறார்கள். கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அனைவரும் வருடம் ஒரு முறை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். வருடம் ஒரு முறை கண் பரிசோதனை செய்யும்போது கண்ணின் விழித்திரை ஓரப்பகுதியில் விழித்திரை துளை காணப்பட்டால் அதை லேசர் ஒளிக்கற்றைக் கொண்டு சரி செய்துவிடலாம். லேசர் சிகிச்சை செய்தால் விழித்திரை விலகலைத் தடுக்கலாம்.
  • சர்க்கரை நோயாளிகள் விழித்திரையில் ரத்தக் கசிவுக்கும் மற்ற பாதிப்புகளுக்கும் முறையாகச் சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் கண்ணுக்குள் ரத்தக் கசிவு எல்லாம் ஒன்றுசேர்ந்து ஒரு சவ்வு போன்று உருவாகி அது விழித்திரையை இழுக்கும். அதனால், விழித்திரை விலகல் ஏற்படும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் முறையான பரிசோதனை செய்து முன்கூட்டியே சர்க்கரை நோய் விழித்திரை பாதிப்பைக் கண்டறிந்து லேசர் சிகிச்சை எடுத்துக்கொண்டால், விழித்திரை விலகல் மட்டுமல்ல விழித்திரை தொடர்பான மற்ற பாதிப்புகளில் இருந்தும் காத்துக்கொள்ளலாம். முறையான வருடாந்திர விழித்திரைப் பரிசோதனை செய்து ஆரோக்கியமான பார்வைத் திறனோடு வாழ்வோம்.

கண் விழித்திரை விலகல் எப்படி ஏற்படும்

  • கண்ணின் விழித்திரையின் ஓரப்பகுதி சிலருக்கு மெலிதாகி விழித்திரை துளை உண்டாகும். இந்த விழித்திரை துளை சில நேரம் விலகல் ஏற்பட்டு விழித்திரை முழுவதும் விலகிக் கண் பார்வையைப் பாதித்துவிடும்.

நன்றி: இந்து தமிழ் திசை (16 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories