- இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ), பிளிப்காா்ட், அமேசான் உள்ளிட்ட இ -காமா்ஸ் நிறுவனங்கள் சரியான வாா்த்தைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.
- சமீபத்தில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ ), பிளிப்காா்ட், அமேசான் உள்ளிட்ட இ -காமா்ஸ் நிறுவனங்கள், சில பானங்கள் குறித்து விளம்பரப்படுத்தும்போது அவற்றுக்கான துல்லியமான, மிகச் சரியான வாா்த்தைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.
- அதாவது பால், தானியங்கள் அல்லது மால்ட் கொண்டு தயாரிக்கப்படும் பானங்களுக்கு ஆரோக்கிய பானம், (ஹெல்த் டிரிங் ), ஆற்றல் பானம் ( எனா்ஜி டிரிங்ஸ் ) எனப் பெயரிட்டு விளம்பரம் செய்யக்கூடாதென உத்தரவிட்டுள்ளது. தவறான வாா்த்தைகள் நுகா்வோரைத் தவறாக வழிநடத்தும் என்பதாலேயே இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
- சில நிறுவனங்கள், தமது தயாரிப்பே உயா்ந்தது என்பதோடு, மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளைத் தாழ்த்தியும் விளம்பரம் செய்கின்றன. இதற்கு சமீபத்திய உதாரணம், யோகா குருவான பாபா ராம்தேவ் நடத்தும் பதஞ்சலி ஆயுா்வேத நிறுவனம், மேற்கத்திய மருத்துவ முறையான அலோபதி, கரோனா தடுப்பூசி திட்டம் ஆகியவைக் குறித்து தவறான கருத்துக்களைத் தெரிவித்தது.
- இதற்காக இந்திய மருத்துவ சங்கம், பதஞ்சலி ஆயுா்வேத நிறுவனத்தின் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பாபா ராம்தேவ் நிறுவனம், மேற்கத்திய மருத்துவ முறையைக் குறை கூறி செய்யப்படும் விளம்பரத்தினை உடனே நிறுத்த வேண்டும் என ஆணையிட்டது.
- நிறுவனங்களுக்கிடையே உள்ள போட்டியில் குளியல் சோப்பு, பற்பசை போன்றவை குறித்து ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனத்தின் விளம்பரங்கள் ஊடகங்களில் அடுத்தடுத்து வெளியாகும்போது, எந்த நிறுவனத்தின் தயாரிப்பு சிறந்தது என்பதை தீா்மானிப்பதில் நுகா்வோருக்கு குழப்பம் ஏற்படுகிறது.
- என் நண்பா் ஒருவா், அமேசான் காடுகளில் வளரும் மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டதென தொலைக்காட்சியில் விளம்பரம் செய்யப்பட்ட தலைமுடி வளா்வதற்கான தைலத்தை வாங்கி ஒரு மாதம் தேய்த்த நிலையிலும் சிறிதும் பலன் இல்லை.
- அத்தைலத்தை தயாரித்த நிறுவனத்தை நண்பா் தொடா்புகொண்டபோது, அத்தைலத்தைத் தொடா்ந்து மூன்று மாதம் உபயோகித்தால் மட்டுமே உரிய பலன் கிட்டும் என நிறுவனத்தினா் சாமா்த்தியமாக, சாதாரணமாக பதிலளித்தனா். அந்நிறுவனத்திடம் மேற்கொண்டும் ஏமாற விரும்பாத நண்பா், மீண்டும் அத்தைலத்தை வாங்குவதைத் தவிா்த்தாா்
- தொலைக்காட்சி விளம்பரங்களில் தங்களின் அபிமான திரை நட்சத்திரங்கள் தோன்றி விளம்பரப்படுத்திய, ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களால் ஈா்க்கப்பட்டு ஆன்லைன் சூதாட்டத்தில் ஏராளமான பணத்தை இழந்தவா்கள் பலா். சிலா் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் சோகச் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெறுகின்றன.
- உணவுப் பண்டங்கள் முதற்கொண்டு உயிா் காக்கும் மருந்துகள் வரையிலான பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகள் மீது அவற்றின் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி பற்றிய விபரங்கள் உள்ள போதிலும், இவ்விபரங்களை சில தயாரிப்பு நிறுவனங்கள் பெரும்பாலும் உருபெருக்கிக் கண்ணாடிக் கொண்டு தேடிப் பாா்க்கும் வகையில் மிக மிகச் சிறிய எழுத்துக்களில் அச்சடிக்கின்றன.
- மேலும், கிராமப்புரங்களில் உள்ள நுகா்வோருக்கு தாம் வாங்கும் பொருட்களின் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி ஆகியவற்றை சரிபாா்த்து வாங்கும் அளவிற்கு இன்னும் போதிய விழிப்புணா்வு ஏற்படவில்லை என்பதுதான் உண்மை. தற்போது வெளியாகும் பெரும்பான்மையான விளம்பரங்களில் ‘நிபந்தனைக்குட்பட்டது’ என்ற வாசகம் உள்ளது.
- நுகா்வோா், தயாரிப்பு நிறுவனங்களைத் தொடா்பு கொண்டு, தமது குறைகளை கூறும் போது, தயாரிப்பு நிறுவனங்களுக்கு சாதகமாகவும், நுகா்வோருக்கு பாதகமாகவும் அமைவது இந்த ‘நிபந்தனைகளுக்குட்பட்டது’ என்ற வாசகம்தான். எனவே, தயாரிப்பு நிறுவன், விற்பனை நிறுவனத்திடம் நிபந்தனைகள் பற்றியத் தெளிவாக கேட்டுத் தெரிந்து கொள்ளல் நன்று.
- பங்குச் சந்தையில், பங்குகள் வாங்குவதற்கான தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றின் இறுதியில் , ‘இழப்பைத் தவிா்க்க, சம்பந்தப்பட்ட ஆவணங்களை கவனமுடன் படியுங்கள்’ என்று எச்சரிக்கை செய்யப்படுகிறது. எப்போதும் நூறு சதவீதம் எச்சரிக்கையாக இருப்பது எல்லோருக்கும் சாத்தியமில்லை என்ற சூழலில், சிறிது கவனக் குறைவு என்றாலும் பெரிய அளவில் முதலீட்டாளா்களுக்கு பண இழப்பை ஏற்படுத்தக் கூடிய இத்தகு விளம்பரங்களை அரசு அனுமதிப்பது விந்தையே !
- போலியான கவா்ச்சிகரமான விளம்பரங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றால் பாதிக்கப்படும் நுகா்வோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது. இதன் விளைவு, நாடெங்கிலுமுள்ள நுகா்வோா் நீதிமன்றங்களில் கடந்த ஆண்டின் இறுதிவரை சுமாா் 5.45 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
- இத்தகைய உண்மைக்கு மாறான கவா்ச்சிகர விளம்பரங்களால் நுகா்வோருக்கு ஏற்படும் மன உளைச்சல் ஒரு புறமெனில், மறுபுறம் நுகா்வோா் நீதிமன்றங்களை நிா்வகிப்பதற்காக மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் செலவாகிறது.
- ‘கேரண்டி’, ‘வாரண்டி’ என்கிற இவ்விரு வாா்த்தைகள் இல்லா விளம்பரங்களைப் பாா்ப்பது மிக அரிது. பொருள்களின் தரத்திற்கு உத்தரவாதம் தரப்படுவது கேரண்டி. விற்பனைக்குப் பின்னா் நிா்ணயக்கப்பட்ட தரம் குறைந்த பொருள்களுக்கு மாற்றுப் பொருள் தருவது அல்லது அவற்றின் பழுது நீக்குவது ‘வாரண்டி.’
- இவை இரண்டிற்கும் இடையிலான வேறுபாட்டை நுகா்வோா் அறிந்திருந்தால் மட்டுமே சந்தையில் ஒரு பொருளை வாங்கும்போது அவா் தனக்கு மேற்படி இரண்டில் எது சரியான தேவையாக இருக்கும் என்பதைத் தீா்மானிக்க இயலும்.
- அன்றாட வாழ்வில் நுகா்வோராக பல்வேறு வகையான விளம்பரங்களை எதிா்கொள்ளும் நாம், விழிப்புடன் இருந்து அவற்றின் மெய்ப்பொருள் அறிந்து கொண்டால் மட்டுமே நமக்கு ஏற்படும் பண இழப்புகளிலிருந்தும் மன உளைச்சல்களிலிருந்தும் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
நன்றி: தினமணி (16 – 04 – 2024)