TNPSC Thervupettagam

விவசாய உற்பத்தியை இரட்டிப்பாக்குமா இயற்கை வேளாண்மை?

August 6 , 2019 1793 days 961 0
  • நிதிநிலை அறிக்கையில் பணம் தேவைப்படாத இயற்கைசார் வேளாண்மைக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் மிகவும் வரவேற்கத்தக்கது.
  • இயற்கை வேளாண்மையை மத்திய அரசு பொருட்படுத்தியிருப்பதென்பது புத்தொளியூட்டுவதாக இருக்கிறது. அதேவேளையில், பணம் தேவைப்படாத இயற்கைசார் வேளாண்மையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான நிதிநிலை அறிக்கையின் குறிப்புகள் தெளிவில்லாமல் இருக்கின்றன.
  • அரசுத் தரப்பில் செய்யப்போகும் உதவிகள் என்னென்ன என்பதும் அறிக்கையில் விளக்கப்படவில்லை.
  • பணம் தேவைப்படாத இயற்கை சார் வேளாண்மையில் ஜீவாம்ருதம், பீஜாம்ருதம் என்ற இரு உத்திகளை முன்வைக்கிறார் மகாராஷ்டிர விவசாயியும் பத்மஸ்ரீ விருதாளருமான பாலேகர்.
  • ஜீவாம்ருதம் என்பது நாட்டு மாடுகளின் சாணம், கோமியம், வெல்லம், பருப்புகளை அரைத்த மாவு, சுத்தமான மண் ஆகியவற்றைக் குறிப்பிட்ட கலவையில் கலந்து தயாரிப்பது; பீஜாம்ருதம் என்பது விதைகள் - நாற்றுகள் மீது சுண்ணாம்புக் கரைசலைப் பூசுவது, வேர்களில் கூளம் ஏற்றிப் பாதுகாப்பது, நிலத்தில் காற்றோட்டம் இருக்கும் வகையில் உழுவது.
  • ஆக, இந்த முறைகளைப் பின்பற்றும்போது உரம், பூச்சிக்கொல்லிகள் வாங்கத் தேவையில்லை என்றாலும் கலவைகளைத் தயாரித்துக்கொள்ள நிச்சயம் செலவாகும்.
  • வேறு எது இல்லாவிட்டாலும் விவசாயிகளின் உழைப்பு அவசியம். அதுமட்டுமின்றி, விவசாயியிடம் நாட்டுப் பசு மாடுகளும், நிறையத் தண்ணீரும் இருந்தால்தான் இதை முயன்றுபார்க்க முடியும்.
  • இந்நிலையில், இயற்கைசார் வேளாண்மை, பாரம்பரிய விவசாய முன்னேற்றத் திட்டம், மண்வளப் பரிசோதனை அட்டை திட்டம் ஆகிய மூன்றுக்கும் சேர்த்தே ரூ.650 கோடி மட்டும்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது நிச்சயம் போதாது.
  • ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடும், வீரிய விதைகள் என்று நம்பி வாங்கும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களும்தான் விவசாயிகளின் கடன் சுமைக்கும் மன உளைச்சலுக்கும் முக்கியக் காரணம்.
  • வேளாண் பொருட்களுக்கான கொள்முதல் விலை உயராத நிலையில், இடுபொருள் விலைகள் கணிசமாக உயர்ந்துவருகின்றன.
  • ஆக, பணம் தேவைப்படாத இயற்கைசார் வேளாண் முறைகளை விவசாயிகள் கையாண்டால், அவர்களது வருவாய் இரட்டிப்பாகும் என்பதையும், அது நிலையானதாக இருக்கும் என்ற நம்பிக்கையையும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
  • உரம், பூச்சிக்கொல்லி செலவுகளைக் குறைக்க அரசு தீவிரம் காட்டும் அதேசமயம், விளைச்சல் குறையாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். நிரந்தரமாகப் பலன்தரக்கூடிய, தொடர் வளர்ச்சி சாகுபடி முறைகளுக்கு விவசாயிகளை மாற்றுவதற்குச் சற்று கால அவகாசம் தேவை.
  • இதை அறிவியல்பூர்வமாக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, அரசு பரிந்துரைக்கும் வேளாண் முறைக்கு மாற்றாகத் தத்தமது பகுதிக்கு உகந்த இயற்கைசார் வேளாண் முறையை விவசாயிகள் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
  • மாறாக, இதைத்தான் பின்பற்ற வேண்டும் என எல்லாவற்றையும் வகுத்துக்கொடுப்பது எவ்வகையிலும் உதவாது.

நன்றி: இந்து தமிழ்திசை (06-08-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories