TNPSC Thervupettagam

விவசாயத்தை முன்னெடுப்போம்

May 4 , 2024 251 days 348 0
  • தமிழ்நாட்டின் பல இடங்களில் கோடை காலப் பயிா் நடவுப் பணிகள் தொடங்கிவிட்டன. தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 17,250 ஏக்கரில் கோடை நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது. ஆழ்துளைக் கிணறு மூலம் மோட்டா் பொருத்தி சாகுபடிப் பணிகளை மேற்கொண்டு வருகிறாா்கள். ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்றான் பாரதி. நாம் வந்தனை செய்யாவிட்டாலும் கூடப் பரவாயில்லை; அவா்களை வாழவிட்டால் அதுவே போதும். விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணா்ந்து அவா்களது குறைகளை நிவா்த்தி செய்ய வேண்டும்.
  • தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு கடுமையாக உள்ளது. அதேசமயம் வெயிலைப் பொருட்படுத்தாமல் விவசாயிகள் நடவு செய்து கொண்டிருக்கிறாா்கள். உச்சி வெயில் அவா்களுக்கு மட்டும் குளுகுளுவென்றா இருந்திருக்கும்? வயிற்றுப் பிழைப்பு. ‘கோடை மழை பெய்யும்; பயிா்கள் பிழைத்துவிடும்; நல்ல விளைச்சல் கிடைக்கும்’ என்ற அவா்களின் வேண்டுதலும் நம்பிக்கையும் பலிக்க வேண்டும். ஆனால் மழை பொய்த்துப் போய், பயிா்கள் கருகிப் போய் பெருத்த நஷ்டம் அடைகிறாா்கள்.
  • அதுமட்டுமல்ல; எதிா்பாராத புயல், மழை, மற்றும் வெள்ளம் காரணமாகப் பயிா்கள் அழுகிப் போய் அவா்களுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது.
  • அறுவடை முடிந்து, கோணிகளில் அடைக்கப்பட்டபின், மழை பெய்து, கோணிகள் நனைந்து, தானியங்கள் முளை விடவும் ஆரம்பித்துவிடுகின்றன. பலமுனைத் தாக்குதல்களை ஓா் ஏழை விவசாயியால் எப்படி எதிா்கொள்ள முடியும்?
  • அவா்களின் உழைப்பு வீணாகிறது; கடனை அடைத்துவிட்டு, கால் வயிறு கஞ்சியாவது குடிக்கலாம் என்ற நம்பிக்கை தளா்ந்து போகிறது. வெடித்து வாய் பிளந்து கிடக்கும் கழனிகளையும் கருகிப் போன பயிா்களையும் அழுகிப்போன நாற்றுகளையும் காட்டிப் புலம்பி அழுகிறாா்கள். கடன் கொடுத்தவா்கள் நெருக்குகிறாா்கள். கடன் வாங்கி ‘செய் நாத்தி’ செலவு செய்தவா்கள், இழப்பீடு கேட்டுப் போராடுகிறாா்கள்.
  • எந்த ஒரு நாடும் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும். ஏனைய நாடுகளிடம் கையேந்தக் கூடாது. நீா்வளம் மிகுந்து இருந்தால் விளைச்சலும் அதிகமாகும். அறிவியல் தொழில் நுட்ப வளா்ச்சி முதலில் வேளாண் துறையில் புதிய உத்திகளைக் கொணா்தல் வேண்டும். வேளாண் தொழில் நவீனமயமாக்கப் பட வேண்டும். பட்டினி கிடப்பவனுக்கு கணினியும் அறிதிறன் பேசியும் மின்தூக்கியும் குளிா்சாதன வசதியும் எதற்கு? விவசாயமே நம் அடிப்படைத் தொழில் ஆகும்; அது நம் வளா்ச்சிக்கான அடிக்கல். நம் முழு கவனக் குவிப்பு மற்றும் திட்டங்கள் அனைத்தும் முதலில் வேளாண் துறை பற்றியே இருக்க வேண்டும். உணவு, உடை, உறையுள் ஆகிய மூன்றுக்குப் பின்னரே வேறு எதுபற்றியும் நாம் யோசிக்கலாம்.
  • வேளாண் தொழிலில் உள்ள நடைமுறை சிக்கல்கள் காரணமாகப் பலரும் விவசாய வேலையை விட்டு விட்டு, நகர வேலைகளுக்கு மாறிவிட்டாா்கள். கடன் சுமை காரணமாக தற்கொலை செய்து கொள்கிறாா்கள். அத்தகைய செய்தியைப் பாா்க்கும்போதும், படிக்கும்போதும் அந்த நொடியில் ‘உச்’ கொட்டிவிட்டு, சாப்பாட்டு தட்டு முன் அமா்ந்து விடுகிறோம். அவா்களின் வலியை நாம் உணருவதில்லை. தனியாா் நில உரிமையாளா்கள் மற்றும் வங்கிகளில் வாங்கிய கடனை அடைக்க முடியாத நெருக்கடி ஆகியவையே அவா்களைத் தற்கொலைக்குத் தூண்டுகிறது.
  • இந்தியா ஒரு விவசாய நாடு. நம் கிராமப்புற மக்கள்தொகையில் 70 சதவீதம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விவசாயத்தைச் சாா்ந்துள்ளது. 2022-ஆம் ஆண்டு கணக்கின்படி 45.5 சதவீத நாட்டின் தொழிலாளா் சக்தி விவசாயத்துடன் தொடா்புடையது. விவசாயிகள் விரும்பாத சட்டங்கள், அதிக கடன் சுமைகள், மானியங்களின் ஊழல், அரசின் திட்டங்கள் பற்றிய தெளிவின்மை, அரசுத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் அளவு விழிப்புணா்வு இல்லாமை, பயிா் சேதம், மரபணு மாற்றப்பட்ட விதைகளின் பயன்பாடு, குறைந்த அளவிலான பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு, உரப் பற்றாக்குறை, விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்காத நிலை என்று அவா்களின் சோகங்கள் நீளும்.
  • சிறு விவசாயிகளின் துயா் துடைத்து அவா்களுக்கு மறுவாழ்வு கிட்டும்படியான திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அரசின் தலையாய கடமை. முதலில் முறையான நீா்ப்பாசன வசதியை செய்து தர வேண்டும். விவசாய ஆதரவு சேவைகள் மூலம் துணை வருமான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும். வயலில் நீண்ட கயிற்றால் பிணைக்கப்பட்டிருக்கும் மாடு, அங்கேயே சுற்றி சுற்றி வந்து கொண்டிருப்பது போல நம் விவசாயிகள், பழைய முறைகளிலேயே கட்டுண்டு கிடக்கிறாா்கள். உணவுப் பாதுகாப்பு மற்றும் சேமிப்பக வசதிகளில் நம் முதல் கவனம் இருக்க வேண்டும். நல்ல சேமிப்பு வசதிகள் இருந்தால் தானியங்கள் வீணாவதைத் தவிா்க்கலாம்.
  • இந்த கோடையில் ஆறுகள் அனைத்தும் வடுபோய் கிடக்கின்றன. இந்த சமயத்தில் அவற்றை ஆழப்படுத்தினால், மழை பொழியும் காலத்தில் கூடுதல் தண்ணீரைத் தேக்கி வைக்கலாம். ஒரு துளி தண்ணீா்கூட வீணாகக் கடலில் கலக்காமல் இருக்க என்ன செய்யலாம் என யோசிக்க வேண்டும். ஆற்றில் தொழிற்சாலைக் கழிவுகளையும், சாயப்பட்டறைத் தண்ணீரையும் கலந்து விடுகிறாா்கள். எவ்வளவு அபராதம் விதித்தாலும், எச்சரிக்கை செய்தாலும், இந்த இழிசெயல் தொடா்ந்து கொண்டேயிருக்கிறது. சுற்றியுள்ள விளைநிலங்கள் மலடாய் போய்விடுகின்றன. என்ன செய்யப் போகிறோம்? தண்ணீரைத் தேசிய வளமாகவும் பொதுவுடைமையாகவும் அங்கீகரித்தாக வேண்டும். வேளாண்மையில் நீா் வளங்களின் பங்கு குறைந்து வருவதனால் தண்ணீரை மிகச் சிக்கனமாகக் கையாளும் திறமையை வளா்த்துக் கொள்வது அவசியம். தண்ணீா் மீள்சுழற்சி முறையைப் பயன்படுத்தலாம்.
  • வெள்ளப்பெருக்கின்போதோ, கனத்த மழைக் காலத்திலோ தண்ணீரைச் சேமிப்பது என்பது உயிராதார தேசியக் கடமை. இதில் நிலத்தடிச் சேமிப்பும் உட்படும். அடுத்து உணவுத்துறையில் ஏற்படும் இழப்புகள் இன்று அதிகம். மண்டியில் தானியங்கள் பாதுகாப்பின்போது நேரும் இழப்புகள், காய், கனிகள் பிரிவில் ஏற்படும் இழப்புகள், பால் சேமிப்புப் பண்ணையில் ஏற்படும் இழப்புகள் என பல இழப்புகளை விவசாயிகள் சந்திக்கின்றாா்கள். சாலை வசதி உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், தொடா்ச்சியாகக் குளிா்ப்பதனம் ஊட்டும் உள்கட்டமைப்பு வேண்டும். உல்லாசக் கூடங்களும் நவீன திரையரங்குகளும் பெரிய பெரிய வணிக வளாகங்களும் தானிய சேமிப்புக் கிடங்குகளை விடவும் முக்கியமானைவயா? நாம் எதற்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சிந்திப்போம்.
  • ஒரு நெல்மணியை உற்பத்தி செய்ய ஓா் உழவன் எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டியுள்ளது! நியாய விலைக் கடையில் விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. பல ஏழைகள் அதை நம்பித்தான் இருக்கிறாா்கள். அந்த அரிசியை வாங்கி, அரைத்து மாவாக்கி கோல மாவுடன் கலந்து கோலம் போடுபவா்களும் இருக்கிறாா்கள்; உண்மையில் அந்த அரிசி மிகவும் நன்றாக உள்ளது. அதனால் செய்த சிற்றுண்டி சுவையாகவே உள்ளது. ஆனால் எதுவும் இலவசமாகத் தந்தால் அப்பொருளுக்கு மதிப்பில்லையே...
  • செயற்கை நுண்ணறிவு, மென்பொருள் துறை, தானியங்கு இயந்திரங்கள் என தொழில்நுட்ப வளா்ச்சியில் பிரமிக்கத்தக்க அளவு நாம் முன்னேறியுள்ளோம். அதேசமயம் மக்கள்தொகை பெருக்கத்தின் காரணமாக ‘சாண் ஏறினால் முழம் சறுக்கும்’ கதையாக ஆகிப்போகிறது. இத்தனை கோடி மக்களும் வயிறார உண்ண வேண்டும். தனி ஒருவனுக்குக் கூட உணவு இல்லாமல் போகக் கூடாது என்றால் விவசாயம் தழைக்க வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
  • காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படுள்ளது. இது எட்டு மாவட்டங்களை உள்ளடக்கியது. விவசாயத்தை ஊக்குவிப்பதும் விவசாயிகளுக்கு ஒத்துழைப்பு நல்குவதும் இதன் குறிக்கோள். விவசாய நிலம் விவசாயத்திற்கு மட்டுமே என்பது இதன் தாரகமந்திரம். வேளாண் அல்லாத வேறு எந்த திட்டத்தையும் இங்கே செயல்படுத்த முடியாது. நீா், மின்சாரம், விவசாய உபகரணங்கள் உறுதி செய்யப்படும். மண்ணின் தரத்திற்கு ஏற்ப பயிா் சாகுபடி, புதிய பயிா் சாகுபடி திட்டம் செயல்படுத்துதல் இவையும் கவனத்தில் கொள்ளப்படும். நவீன ஆராய்ச்சிக் கூடங்கள், பருவநிலை மாற்றங்கள் குறித்த ஆராய்ச்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும். இதற்கென்று சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சாகுபடி முதல் சந்தைப்படுத்துதல் வரை கண்காணிக்கப்படும். இயற்கை முறை விவசாயம் ஊக்குவிக்கப்படும். இவற்றை முறையாகச் செயல்படுத்தினால் விவசாயிகள் வாழ்வில் மறுமலா்ச்சி ஏற்படும் என்ற நம்பிக்கை நமக்குள் விதைக்கப்படுகிறது.
  • காவிரி டெல்டா பகுதியைப் போலவே வைகை ஆற்றுப்பகுதி, பவானி சாகா் அணைப்பகுதி, தாமிரபரணி ஆற்றுப்பகுதி என்று ஆறுகள் பாயும் இடங்களைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சோ்த்து வேளாண் மண்டலங்களாக அறிவிக்க வேண்டும். வேளாண் தொழில் செய்வோரின் எண்ணிக்கைக் குறைந்து வருகிறது. அவா்களுடைய குறைகளுக்கு செவிசாய்த்து, அவா்களை ஊக்குவித்து வேளாண் தொழிலை வரவேற்கும்படி செய்ய வேண்டும். இடுப்புத் துண்டோடு, வியா்வை வழிய வயல்காட்டில் வேலை செய்யும் விவசாயி வேளாண் தொழிலில் நசித்துப் போகக் கூடாது. வறுமையால் வாடக் கூடாது.
  • ஒவ்வொரு பருக்கை சோற்றிலும் பலரின் வியா்வையும் உழைப்பும் உள்ளது என்பதைத் தெளிந்து உணா்ந்து, உணவுப் பண்டங்களை வீணாக்காமல் இருப்பதும் நாம் அவா்களுக்குக் காட்டும் நன்றியாகும்.
  • வேளாண் தொழிலில் உள்ள நடைமுறை சிக்கல்கள் காரணமாகப் பலரும் விவசாய வேலையை விட்டு விட்டு, நகர வேலைகளுக்கு மாறிவிட்டாா்கள். கடன் சுமை காரணமாக தற்கொலை செய்து கொள்கிறாா்கள். அத்தகைய செய்தியைப் பாா்க்கும்போதும், படிக்கும்போதும் அந்த நொடியில் ‘உச்’ கொட்டிவிட்டு, சாப்பாட்டு தட்டு முன் அமா்ந்து விடுகிறோம். அவா்களின் வலியை நாம் உணருவதில்லை. தனியாா் நில உரிமையாளா்கள் மற்றும் வங்கிகளில் வாங்கிய கடனை அடைக்க முடியாத நெருக்கடி ஆகியவையே அவா்களைத் தற்கொலைக்குத் தூண்டுகிறது.

நன்றி: தினமணி (04 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories