TNPSC Thervupettagam

விவசாயிகளின் நெடுநாள் கனவை நனவாக்கிய தமிழ்நாடு அரசு!

August 27 , 2024 139 days 302 0

விவசாயிகளின் நெடுநாள் கனவை நனவாக்கிய தமிழ்நாடு அரசு!

  • திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளது 67 ஆண்டு காலக் கோரிக்கையான அத்திக்கடவு-அவிநாசிக் குடிநீர்த் திட்டத்தை, ஆகஸ்ட் 17 இல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார். விவசாயத்துக்கும் நிலத்தடி நீர் மேம்பாட்டுக்கும் உதவக்கூடிய இத்திட்டம் பல தடைகளை மீறி நிறைவேறியிருப்பது, மக்களைப் பெருமகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.
  • திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சுற்றிலும் உள்ள பகுதிகள் மேட்டு நிலத்தில் அமைந்திருப்பதால் வறட்சியை எதிர்கொள்பவை. காவிரியின் துணை ஆறான பவானி, நீலகிரியில் தோன்றி அத்திக்கடவு - பில்லூர் அணை - மேட்டுப்பாளையம் சிறுமுகை - பவானிசாகர் அணைக்கட்டு - கோபி செட்டிபாளையம் எனப் பயணித்து, இறுதியில் பவானி நகர்ப் பகுதியில் காவிரியில் கலக்கிறது.
  • அதன் உபரி நீரைத் திருப்பி அவிநாசி வட்டாரக் கால்வாய்களை நிரப்பினால், வறட்சி நீங்கும் என 1957இல் அன்றைய முதல்வர் காமராஜரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்தே பேசப்பட்டு வந்த இந்தத் திட்டத்தை அமல்படுத்த காமராஜரும் ஆர்வம் காட்டினார்.
  • தொடக்கத்தில் இது ‘மேல் பவானித் திட்டம்’ என அழைக்கப்பட்டது. 1972இல் அன்றைய முதல்வர் மு.கருணாநிதியும் இதன் தேவையை உணர்ந்து செயல்படுத்த முனைந்தார். ‘அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர்ச் செறிவூட்டல் - குடிநீர்த் திட்டம்’ என இதன் பெயர் மாற்றப்பட்டது.
  • 2009இல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, நீரியல் வல்லுநர் ஏ.மோகனசுந்தரம் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அப்பகுதியில் விரிவான ஆய்வு செய்தது. ஆட்சி மாற்றம், அரசியல் காரணங்கள், நிதிப் பிரச்சினை, மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைவு இன்மை, நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் போன்றவை தடை போட்டன.
  • பவானி ஆற்றுக்குக் கீழ்ப்பகுதியில் உள்ள காளிங்கராயன் அணையிலிருந்து உபரிநீர் பயன்படுத்தப்படும் என 2019இல் இத்திட்டத்தில் ஒரு முக்கியமான மாற்றம் செய்யப்பட்டது. 2019 பிப்ரவரியில் இத்திட்டத்துக்கு அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 80 சதவீத வேலைகள் முடிந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அடுத்து முதல்வரான மு.க.ஸ்டாலின் ஆட்சியில், வேலைகள் நிறைவடைந்து 2023 ஜனவரியில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
  • திருப்பு அணை மூலம் காளிங்கராயன் அணையின் உபரி நீர் ஒரு பெரிய கால்வாய்க்கும் அங்கிருந்து அடுத்தடுத்த ஊர்களில் உள்ள ஆறு நீரேற்று நிலையங்களுக்கும் கொண்டுசெல்லப்படுகிறது. நீரைக் கொண்டுசெல்லும் முதன்மைக் குழாய் 106 கி.மீ. தொலைவுக்கும் அதிலிருந்து பல்வேறு பகுதிகளுக்குப் பிரிந்து செல்லும் குழாய்கள் 960 கி.மீ. தொலைவுக்கும் அமைந்துள்ளன.
  • இதன் மூலம் ஆண்டுக்கு மொத்தம் 1.5 டிஎம்சி நீர், 1,045 குளங்களை நிரப்புகிறது. சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட சில மாதங்களிலேயே நிலத்தடி நீர் உயர்ந்துள்ளதாகவும் புதிதாக ஆழ்துளைக் குழாய்கள் இடுவது குறைந்துள்ளதாகவும் பெருந்துறைப் பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
  • ரூ.137 கோடி மதிப்பில் தொடங்கிய திட்டம், ரூ.1,758.88 கோடி செலவில் நிறைவடைந்துள்ளது. நீண்ட நாள் தாமதமானாலும், விவசாயிகளின் அடிப்படைத் தேவையான திட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருப்பது மனநிறைவை அளிக்கிறது.
  • திட்டத்துக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்த விவசாய அமைப்புகள், அக்கறை காட்டிய ஓய்வுபெற்ற பொறியாளர்கள், திமுக, அதிமுக அரசுகள் பாராட்டுக்குரியவர்கள். இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்கிற கோரிக்கையையும் அரசு பரிசீலிக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (27 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories