- கடந்த ஆண்டில் புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்கிறார். 2018க்கும் 2022க்கும் இடைப்பட்ட காலத்தில் விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்துவருவதாகத் தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக் கின்றன. கடந்த ஆண்டு 11,290 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை (2023) தெரிவிக்கிறது. 2021இல் இது 10,281ஆக இருந்தது கவனிக்கத்தக்கது. இந்த ஆண்டு இது 3.7 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேநேரம் 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 5.7 சதவீதம் அதிகமாகும். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் விவசாயம் மெச்சத்தக்க வகையில் இல்லை.
- 2022ஆம் ஆண்டில், பல மாநிலங்கள் வறட்சி, பருவம் தவறிய மழை, வெள்ளம் போன்ற பாதிப்புகளால் பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டு விவசாயம் பொய்த்தது. விவசாயிகள் சார்ந்திருக்கும் கால்நடை, கோழி போன்றவற்றின் தீவன விலையும் உயர்ந்தது. மேலும் தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் இந்த அறிக்கையின்படி விவசாயிகளைவிட விவசாயத் தொழிலாளர்கள்தாம் அதிகம் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். விவசாயத்தில் ஈடுபட்டுள்ள 11,290 பேரில், 6,083 பேர் விவசாயத் தொழிலாளர்கள் என்பது கவனம் கொள்ளத்தக்கது. இது 53 சதவீதமாகும்.
- ஒரு சராசரி விவசாயக் குடும்பம் அதன் வருமானத்திற்காக வேளாண்மையைக் காட்டிலும் விவசாயக் கூலித் தொழிலையே அதிகம் சார்ந்திருப்பதாக 77ஆவது மாதிரிக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஒரு விவசாயக் குடும்பத்தின் அதிகபட்ச வருமானம் ரூ. 4,063 என்றும், அது விவசாயத் தொழிலாளி வழி வந்தது என அந்தக் கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது. வேளாண்மை, கால்நடை ஆகியவற்றின் வழி கிடைத்த வருமானம் 2013இல் 48 சதவீதத்திலிருந்து 2019இல் 38 சதவீதமாகச் சரிவைக் கண்டுள்ளதாகவும் அந்த அறிக்கை சொல்கிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (16 – 12 – 2023)