- இந்திய கிராமப்புற குடும்பத்தின் வருமானத்தில் நான்கில் மூன்று பங்கு விவசாயத்திலிருந்து வந்தது. இது 1970-இல். ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு 2020- ஆம் ஆண்டில் இது மூன்றில் ஒரு பங்கிற்கும் கீழே குறைந்துள்ளது.
- தற்போது பெரும்பாலான விவசாயக் குடும்பங்கள் விவசாயத்தினைக் கைவிட்டு வேறு தொழில்கள் மூலம் சம்பாதிக்கின்றன. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரம், ஒவ்வொரு நாளும் 2,000 விவசாயிகள் விவசாயத்தைக் கைவிடுகின்றனா் என்று கூறுகிறது.
- காலநிலை மாற்றம் விவசாயத்தினை கடுமையாக பாதிக்கிறது. காலநிலை மாற்ற பாதிப்புகளால் விவசாயிகளின் வருமானம் 25 சதவீதம் வரை குறையும் என்கிறது அரசாங்க தரவு.
- காலநிலை மாற்றம், விவசாயம் அதிகம் நடைபெறும் இந்தியாவின் நூறு ஏழை மாவட்டங்களில் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்துகிறது.
- இதுபோன்ற காலநிலை மாற்ற பாதிப்புகள் ஆண்டுக்கு 700 கோடி ரூபாய் வரை இழப்பை ஏற்படுத்துகின்றன.
- உலகின் அதிக மக்களை பாதிக்கும் இரண்டாவது மிக மோசமான பாதிப்பான வறட்சி, 30 கோடி இந்திய மானாவாரி விவசாயிகளைக் கடுமையாக பாதிக்கிறது
தன்னிறைவு வேண்டும்
- 1950-இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 51 சதவீதமாக இருந்த விவசாயத்தின் பங்களிப்பு, தற்போது 16 சதவீதமாக குறைந்துள்ளது.
- அதேவேளையில், 1951-ஆம் ஆண்டில் ஏழு கோடி குடும்பங்கள் விவசாயத்தை நம்பியிருந்த நிலையில், தற்போது அது 12 கோடி குடும்பங்களாக உயா்ந்துள்ளது.
- உலகின் மிக வேகமாக வளா்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியப் பொருளாதாரமும் ஒன்று என்ற தரவு விவசாயிக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தவில்லை. ஏனெனில் நமது நாட்டின் ஒவ்வொரு இரண்டாவது விவசாயியும் கடன் வாங்குகிறார்.
- இந்திய விவசாயி சராசரியாக மாதம் 6,426 ரூபாய் சம்பாதித்து 6,223 ரூபாயை செலவிடுகிறார்.
- 15% இந்திய விவசாயிகள் மட்டுமே வருமானத்தில் 91%-ஐ சம்பாதிக்கின்றனா். இது வருமான சமத்துவமின்மைக்கு காரணமாக அமைகிறது.
- ஒரு ஹெக்டோ் நிலத்தில் பயிரிடப்படும் கோதுமையிலிருந்து 7,639 ரூபாய் மட்டுமே ஒரு விவசாயி சம்பாதிக்கிறார்.
- கோதுமைக்கான உற்பத்திச் செலவு 32,644 ரூபாய். ஒரு ஹெக்டேருக்கான நஷ்டம் 25,005 ரூபாய். இது பெரும் இழப்பு என்கிறது ஒரு ஆய்வு.
- விவசாயக் குடும்பங்கள், கிராமப்புறங்களில் விவசாய நிலம் வைத்திருப்பவா்களின் 2019-ஆம் ஆண்டுக்கான நிலை மதிப்பீட்டு அறிக்கை செப்டம்பா் 10, 2021 அன்று வெளியிடப்பட்டது.
- பாதிக்கும் மேற்பட்ட இந்திய விவசாய குடும்பங்கள் கடனில் உள்ளதாகவும், சராசரியாக அவா்களின் கடன்தொகை 74,121 ரூபாய் என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.
- 2013-ஆம் ஆண்டிற்கான நிலை மதிப்பீட்டுக் கணக்கீட்டுடன் ஒப்பிடும்போது 2019-ஆம் ஆண்டில் கடனில் தவிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை 51.9%-லிருந்து 50.2%-ஆக சற்று குறைந்துள்ளது.
- இருப்பினும் கடன்பெற்ற குடும்பங்களின் கடன்தொகை 47,000 ரூபாயிலிருந்து 74,121 ரூபாயாக அதிகரித்துள்ளது.
- 69.6% விவசாயிகள் வங்கிகள், கூட்டுறவுச் சங்கங்கள், அரசு சார்ந்த நிறுவனங்களிலிருந்தும் 20.5% விவசாயிகள் தனியார் நிதி நிறுவனங்களில் இருந்தும் கடன் பெற்றதாக தேசிய புள்ளியியல் அலுவலகத் தரவு கூறுகிறது.
- விவசாயிகள் வாங்கிய மொத்தக் கடனில் 57.5 சதவீதம் மட்டுமே விவசாய நோக்கங்களுக்காக வாங்கப்பட்டது என்கிறது இத்தரவு.
- 28 இந்திய மாநிலங்களில் அதிக கடன் பெற்றுள்ள விவசாயக் குடும்பங்கள் கொண்ட ஆந்திர மாநிலத்தில் 93.2 சதவீத விவசாயக் குடும்பங்கள் கடனில் உள்ளன என்றும், அவற்றின் சராசரி கடன் தொகை 2.45 லட்சம் என்றும் 2019-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு கூறுகிறது.
- இதற்கு அடுத்தபடியாக விவசாய கடன் பெற்ற 91.7% குடும்பங்களைக் கொண்ட தெலங்கானா மாநிலத்தின் சராசரி கடன் தொகை 1.52 லட்சமாகவும் 69.9% குடும்பங்களைக் கொண்ட கேரள மாநிலத்தின் சராசரி கடன் தொகை 2.42 லட்சமாகவும் இருப்பதாக இக்கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
- ஹரியாணா, பஞ்சாப், கா்நாடகம், ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் கடன் பெற்ற விவசாயக் குடும்பங்கள் சராசரியாக ஒவ்வொன்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்றுள்ளது.
- மொத்தத்தில் 11 மாநிலங்களில் இந்தத் கடன் தொகை தேசிய சராசரியான 74,121 ரூபாயை விட அதிகமாக உள்ளது.
- ஒரு விவசாயக் குடும்பம் பயிர் சாகுபடி, விளைபொருட்கள் வணிகம் மட்டுமல்லாது விவசாயக் கூலி, கால்நடைகள் வளா்த்தல், உரம் - பூச்சிமருந்துகள் போன்ற விவசாயம் தொடா்பான பொருட்களின் வணிகம் ஆகியவற்றின் மூலமாக வருமானம் ஈட்டலாம்.
- 2013-ஆம் ஆண்டில் 6,426 ரூபாயாக இருந்த விவசாயக் குடும்பங்களின் சராசரி வருமானம் 2019-ஆம் ஆண்டில் 10,218 ரூபாயாக அதாவது 57% அதிகரித்துள்ளது என்றும் ஆண்டு வளா்ச்சி விகிதம் 7.8% என்றும் தரவு கூறுகிறது.
- இந்த வருமான அதிகரிப்பு, விவசாயத் தொழிலுக்கான ஊதியத்தாலும் கால்நடை வளா்ப்பாலும் உருவானது.
- 2018-19 ஆண்டில் விவசாய கூலி, பயிர் சாகுபடி, கால்நடை வளா்ப்பு, விவசாய சம்பந்தப்பட்ட பொருட்கள், வணிகம் வேளாண்துறை மொத்த வருமானத்தில் முறையே 40%, 38%, 16%, 6% பங்குகளைக் கொண்டிருந்தன. இதுவே 2012-13 ஆண்டில் முறையே 32%, 48%, 12%, 8% என இருந்தது.
- இத்தரவுகள் விவசாயக் குடும்பங்கள் தங்கள் வருமானத்தின் பெரும்பகுதியை விவசாய சாகுபடி மூலமாக சம்பாதிக்கவில்லை என்பதைத் தெளிவாக்குகின்றன. மொத்த சராசரி வருமானத்தில் அதிக பங்கு (ரூ. 4,063) ஊதியத்திற்கான வருமானம்.
- வேளாண் துறையில் ஒரு தொழிலாக சுருங்கி வரும் விவசாயம் விவசாயிகளின் பெரும் வருமான ஆதாரமாக இல்லை என்பது உண்மையில் வருத்தம் தரும் செய்தி.
- கரோனா தீநுண்மியின் தாக்கம் உச்சம் பெற்ற காலத்தில் விவசாயிகளின் உழைப்பு காரணமாக இந்தியாவில் வேளாண் துறை மட்டுமே வளா்ச்சிபெற்றது.
- தன்னிறைவு உணவு உற்பத்தி கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. அதற்குக் காரணமான விவசாயி தன்னிறைவு கொள்ள வேண்டுமானால் அவன் கடனின்றி வாழ வேண்டும். அதற்கு ஆவன செய்யட்டும் அரசு.
நன்றி: தினமணி (07 - 10 - 2021)