TNPSC Thervupettagam

விவாதத்தை எழுப்பிய சுற்றுச்சூழல் நிகழ்வுகள்

December 30 , 2023 379 days 320 0
  • 2023 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் சார்ந்து பல்வேறு கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பி இருக்கிறது. அவற்றில் சில...

புதையுறுவது நகரம் மட்டுமா

  • பனியாறு உருகுதல், மேகவெடிப்பு, பெருவெள்ளம், நிலச்சரிவுகள் எனப் பல்வேறு பாதிப்புகளை உத்தராகண்ட் எதிர்கொண்டுவருகிறது. இமயமலைப் பகுதியில் 6,150 அடி உயரத்தில் அமைந்திருக்கும் உத்தராகண்ட்டின் ஜோஷிமட் நகரம், அங்கு நடைபெற்ற வளர்ச்சிப் பணிகளின் விளைவால் புதையுறத் தொடங்கியது. தேசிய அனல் மின் நிறுவனம் (என்டிபிசி) அமைத்துவரும் தபோவன்-விஷ்ணுகட் நீர் மின் உற்பத்தி நிலையத் திட்டம்தான் இந்தப் பேரழிவுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. அதேபோல், உத்தரகாசியின் சில்க்யாரா பகுதியில், ‘சார் தாம் நெடுஞ்சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தேசிய நெடுஞ்சாலை 134இல் 4.5 கிலோமீட்டர் நீளமுள்ள இருவழிச் சாலைக்காகச் சுரங்கம் தோண்டும் பணி நடந்துவந்தது.
  • நவம்பர் 12, தீபாவளி நாளன்று அங்கு ஏற்பட்ட விபத்தில், 41 தொழிலாளர்கள் சுரங்கத்தினுள் சிக்கிக்கொண்டனர். இரண்டு வார பெரும் போராட்டத்துக்குப் பின் அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். உலகின் இளமையான மலையான இமயமலையில் இன்னமும் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. வளர்ச்சியின் பெயரால் அதன் சுற்றுச்சூழல் சீரழிவது தடுக்கப் படுவது எப்போது?

புலிகள் இறப்பு

  • கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்தியாவில் 2023ஆம் ஆண்டு 202 புலிகள் உயிரிழந்துள்ளதாக இந்திய வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு தெரிவிக்கிறது. ஜனவரி 1 முதல் டிசம்பர் 24 வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மகாராஷ்டிரம் (52), மத்திய பிரதேசம் (47), உத்தராகண்ட் (26), தமிழ்நாடு (15) ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் புலிகள் இறந்திருக்கின்றன.
  • அகில இந்திய புலி மதிப்பீடு-2022இன்படி, நாட்டில் மொத்தம் 3,682 புலிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. புலிகளின் எண்ணிக்கையில் வளர்ச்சி இருந்தாலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் சமமான எண்ணிக்கையில் புலிகள் இறந்துள்ள தாகவும் இந்திய வனவிலங்குப் பாதுகாப்புச் சங்கம் தெரிவித்துள்ளது.

வட இந்திய வெள்ளம்

  • இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், ராஜஸ்தான், ஹரியாணா, பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஜம்மு-காஷ்மீரிலும் கனமழை முதல் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. இடைவிடாது பெய்த மழையின் காரணமாக, இம்மாநிலங்களின் உள்கட்டமைப்பில் மிகப் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. ராவி, பியாஸ், யமுனா, கங்கை, சட்லஜ், காகர் ஆகிய நதிகளில் ஏற்பட்ட வெள்ளம் உயிர்-பொருள் சேதத்தைக் கொண்டுவந்தது.

சிவிங்கிப் புலி

  • மத்திய பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவில், 2022 செப்டம்பரில் அறிமுகப் படுத்தப்பட்ட சிவிங்கிப்புலிகள் தொடர்ச்சியாகஇறந்துபோயின. ஆப்ரிக்கச் சிவிங்கிப் புலிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் சிவிங்கிப்புலி செயல்திட்டம்’, ரூ.39 கோடி மதிப்பீட்டில், 2021இல் செயல்பாட்டுக்கு வந்தது.
  • முதல் கட்டமாக நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப்புலிகளும் (5 பெண், 3 ஆண்); இரண்டாம் கட்டமாக (பிப்ரவரி 18, 2023) தென் ஆப்ரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப்புலிகளும் (7 ஆண், 5 பெண்) விமானத்தில் கொண்டு வரப்பட்டு, குனோ தேசியப் பூங்காவில் விடப்பட்டன. இந்நிலையில், சிறுநீரகக் கோளாறு காரணமாக, 2023 மார்ச் 27 அன்று ஷாஷா என்கிற சிவிங்கிப்புலி இறந்துபோனது.
  • மார்ச் 29 அன்று, ஜூவாலா என்கிற சிவிங்கிப்புலி ஈன்ற நான்கு குட்டிகளில், மூன்று குட்டிகள் இறந்துபோயின. இவற்றைத் தொடர்ந்து, உதய் (ஏப்ரல் 24), தக்ஷா (மே 9), தேஜஸ் (ஜூலை 11), சூரஜ் (ஜூலை 14) என சிவிங்கிப்புலிகள் தொடர்ச்சியாக இறந்தன. ஆகஸ்ட் 2 அன்று சிவிங்கிப்புலி ஒன்று இறந்ததை அடுத்து, எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்தது.
  • தேசியக் கானுயிர்ப் பாதுகாப்பு முன்னுரிமைகளை விடுத்து, நடைமுறைச் சாத்தியமில்லாத ஊதிப் பெருக்கப்பட்ட கானுயிர்ப் பாதுகாப்புக் கனவுகளை இத்திட்டம் முன்மொழிவதாகவும், முன்னுரிமை தரப்பட வேண்டிய கானுயிர்ப் பாதுகாப்புப் பிரச்சினைகள், வளங்களைப் பாதுகாக்கும் கவனத்திலிருந்து விலகச்செய்வதாகவும் சூழலியலாளர்கள் விமர்சித்தனர்.

டிசம்பரும் சென்னையும்

  • தென்மேற்கு வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளம், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைப் புரட்டிப் போட்டது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவு மழைப்பொழிவு பதிவானது. 2015 சென்னைப் பெருமழையைவிட 45% அதிகமாக மழைபொழிந்ததே வெள்ளப் பாதிப்புக்குக் காரணம்.

வடசென்னையின் பேரிடர்கள்

  • சென்னையில் இயற்கைப் பேரிடர்களைத் தொடர்ச்சியாக எதிர்கொண்டுவரும் வட சென்னைப் பகுதி, மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை-வெள்ள பாதிப்புகளில் இருந்தும் தப்பவில்லை. மணலியில் இருக்கும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (சிபிசிஎல்) வளாகத்திலிருந்து மழையின்போது ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு, எண்ணூர் கழிமுகத்தில் கொற்றலை ஆற்றிலும் வங்கக் கடலிலும் கலந்து, பெரும் சூழலியல் மாசுபாட்டை ஏற்படுத்தியது.
  • அதே பகுதியில் அமைந்துள்ள கோரமண்டல் இண்டர்நேஷனல் உரத் தயாரிப்புத் தொழிற்சாலையில், அமோனியா குழாய்களில் ஏற்பட்ட வாயுக் கசிவு, அப்பகுதி மக்களுக்குக் கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தியது; கடல்வளமும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

திகைத்த தென்மாவட்டங்கள்

  • மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய அதிர்வுகள் விலகியிருக்காத நிலையில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழை கொட்டித் தீர்த்தது. ஓர் ஆண்டின் சராசரி மழைப்பொழிவுக்குரிய அளவு, ஒரே நாளில் பதிவானது.
  • 39 இடங்களில் அதி கனமழைபதிவானது; காயல்பட்டினத்தில் 94.6 செ.மீ. மழையும் எட்டு இடங்களில் 50 செ.மீ மழையும் பதிவானது. முற்றிலும் எதிர்பாராத இந்த நிலை, மக்களை மட்டுமல்ல, அரசாங்கத்தையும் திகைக்கச் செய்தது.

பரந்தூர் போராட்டத்தின் 500 நாள்கள்

  • காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 13 கிராமப் பகுதிகளை உள்ளடக்கி, பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு மத்திய-மாநில அரசுகள் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த விமான நிலையத்துக்கு நெல்வாய், தண்டலம், மடப்புரம், நாகப்பட்டு, ஏகனாபுரம், மேலேறி ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளன.
  • இதனால் வாழ்விடமும் வாழ்வாதாரமான விளைநிலங்களும் பறிபோகும் எனக் கூறி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஏகனாபுரம் மக்கள் நடத்திவரும் போராட்டம், டிசம்பர் 7 அன்று 500 ஆவது நாளைத் தொட்டிருக்கிறது.

காலநிலை மாற்றம்

  • 2023ஆம் ஆண்டின் ஒவ்வொரு மாதமும் சராசரி வெப்பநிலை முந்தைய ஆண்டு களைவிட அதிகமாகவே இருந்த நிலையில், ஆண்டு சராசரியும் அதிகரித்து வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான ஆண்டாகப் பதிவாகியுள்ளது.
  • கோப்பர்னிக்கஸ் காலநிலை மாற்ற சேவை (C3S), அறிக்கையின்படி, 2023 ஜனவரி முதல் அக்டோபர் வரை பதிவான வெப்பநிலை, தொழிற்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தைவிட 1.43 டிகிரி செல்சியஸ் அதிகம். பசுமைக்குடில் வாயு உமிழ்வு சிறிதும் குறையாமல், புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது; கடல்மட்ட உயர்வும் புதிய உச்சத்தில் உள்ளது.

காப் 28

  • புவிவெப்பமாதலின் விளைவுகளுக்கு முடிவு கட்டும் நோக்குடன் புதைபடிம எரிபொருள்களி லிருந்து படிப்படியாக மாறுவதற்கு தீர்மானம், துபாயில் நடைபெற்ற காப் 28 காலநிலை மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. புதைபடிம எரிபொருள் என்கிற சொல் காலநிலைத் தீர்மானத்தில் இடம்பெறுவது இதுவே முதல்முறை.
  • காலநிலை தொடர்பான பேரழிவு களால் ஏற்படும் சேதங்களை வளர்ந்துவரும் நாடுகள் ஈடுசெய்ய வளர்ச்சியடைந்த நாடுகள் பங்களிப்பதற்கான இழப்பு, சேத நிதி ஒப்பந்தம்காப் 28 எட்டப்பட்டது. இழப்பு, சேத நிதிக்கு இதுவரை 79.2 கோடி டாலர் அளவுக்கு நிதி சேர்ந்துள்ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories