TNPSC Thervupettagam

விஷச் சுழலை உடையுங்கள்

July 14 , 2024 186 days 358 0
  • முதலாளித்துவத்தின் இயல்பான போக்கே சிறு விவசாயம், சிறு வியாபாரம் போன்றவற்றை நசுக்கிவிட்டு அந்த இடங்களையும் ஆக்கிரமிப்பதுதான்; வேளாண் துறையின் பெருவணிகம், சிறு விவசாயிகளை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடும்; பெருவணிக வளாகங்கள் சின்னஞ்சிறு கடைக்காரர்களை வியாபாரத்திலிருந்தே வெளியேற்றும்; அமேசான் வந்த பிறகு, குடியிருப்புகளுக்கு அருகில் ஆங்காங்கே காலங்காலமாக விற்றுக்கொண்டிருந்த சிறிய பலசரக்குக் கடைகள் வியாபாரம் இழந்துவிட்டன.
  • பெருந்தொழில் நிறுவனங்கள் - சின்னஞ்சிறு தச்சு – கொல்லர்களை (கைவினைஞர்கள்) வேலையையும் வருமானத்தையும் இழக்க வைக்கின்றன. இந்தச் செயல்கள் அனைத்துமே சிறிய அளவில் உற்பத்தி, சேவையில் ஈடுபட்டவர்களை வறுமைக்குள் தள்ளுபவைதான். மொத்த உற்பத்தியில் 50%க்கும் மேலும், மொத்த வேலைவாய்ப்பில் 85%க்கு அதிகமாகவும் அளிக்கும் - அமைப்புரீதியாக திரட்டப்படாத - துறையை இப்படிப் பெருமுதலாளியம் கபளீகரம் செய்வது, வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை உள்ள ஜனநாயக நாட்டில் தடைகளின்றித் தொடர முடியாது.

கடிவாளமிட்ட முதலாளித்துவம்

  • இதனால்தான் இந்தியாவில் நீண்ட காலமாக ‘கடிவாளமிட்ட முதலாளித்துவம்’ அமலில் இருந்தது. சிறு உற்பத்தியாளர்களை முதலாளித்துவம் விழுங்கிவிடாமல் அந்தக் கட்டுப்பாடுகள் காப்பாற்றின. உள்நாட்டு – வெளிநாட்டு பெருநிறுவனங்களிடமிருந்து விவசாயிகள் காக்கப்பட்டார்கள், விவசாய விளைபொருள்களின் விலை கடுமையான ஏற்ற – இறக்கத்தைச் சந்திக்கும்போதெல்லாம் சிறு விவசாயிகளைக் காக்கவும் குறைந்தபட்சமாகவாவது ஒரு விலை கிடைக்கவும் அரசு ஆதரவு நடவடிக்கையாக நேரடிக் கொள்முதலை மேற்கொண்டது.
  • பெரிய ஆலைகளின் துணி தயாரிப்புகளுக்கு நடுவிலும் கைத்தறி, விசைத்தறித் துறைகளைக் காப்பாற்ற அவற்றுக்கென்று தனி ரகங்கள் ஒதுக்கப்பட்டு, உற்பத்தி அளவும் நிர்ணயிக்கப்பட்டது. பனாரஸ் (காசி) பட்டு உற்பத்தியாளர்கள் போன்ற உள்நாட்டு நெசவாளர்கள் தயாரிக்கும் விலை உயர்ந்த புடவைகள் வரி விலக்கு பெற்றன. கட்டுப்பாடற்ற முதலாளித்துவத்தை ஆதரித்த சுதந்திரா கட்சி போன்ற அரசியல் கட்சிகள் மக்களிடம் ஆதரவு இல்லாமல் தோல்வியுற்று செல்வாக்கிழந்தன.
  • பிரிட்டனில் உள்ள கன்சர்வேடிவ் (டோரி) கட்சி போலவோ, ஐரோப்பியக் கண்ட நாடுகளில் உள்ள கிறிஸ்தவ ஜனநாயக கட்சிகளைப் போலவோ வெளிப்படையாக ‘முதலாளித்துவ’ ஆதரவு அரசியல் கட்சிகள் இந்தியாவில் இல்லை. ஐரோப்பாவில் அந்தக் கட்சிகள் தொடர்ந்து செல்வாக்குடன் திகழ்வதற்குக் காரணம், சிறு விவசாயிகள், உற்பத்தியாளர்கள், வணிகர்கள் ஆகியோரை அவரவர் தொழிலிலிருந்து முதலாளித்துவம் வெளியேற்றியபோதிலும், தங்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ற சூழல்கள் நிலவிய கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா நாடுகளுக்குக் குடியேறி அவர்களால் வாழ்க்கையைத் தொடர முடிந்தது.
  • அதற்குப் பிறகு தாய் நாடுகளில் மிஞ்சியவர்கள் சிறிய எண்ணிக்கையிலானவர்களே. கி.பி. 1815 முதல் கி.பி. 1914 வரையிலான காலத்தில் மட்டும், ஐரோப்பிய நாடுகளிலிருந்து 5 கோடிக்கும் மேற்பட்டவர்கள் முதலாளித்துவத்தால் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளில் குடியேறினர். அவர்கள் அன்றைய ஐரோப்பிய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர்.
  • ஆனால் அப்படிச் சென்றவர்கள், குடியேறிய நாடுகளில் வாழ்ந்த உள்நாட்டுக் குடிகளின் நிலங்களை அற்ப விலைக்கு வாங்கியும், அவர்களுடைய தொழில்களைச் செய்தும் ஆக்கிரமித்து, அவர்களையே ஓரங்கட்டிவிட்டனர். அப்படி ஒரு காலத்தில் பிழைப்பு தேடி ஓடியவர்கள் காலனியாக பிடிப்பதற்குப் பல நாடுகள் காத்துக்கிடந்ததைப் போல இன்றைக்கு எந்த நாட்டுக்கும் – இந்தியா உள்பட – வாய்ப்புகளே இல்லை.

மன்மோகன் காலம்

  • நவதாராளமயம் அல்லது புதிய தாராளமயக் கொள்கையானது முதலாளியத்தின் மீதான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் வரம்பில்லாமல் உடைத்து எறிகிறது. இவ்வாறு வரம்பற்ற முதலாளித்துவத்துக்கு வழியும் செய்துவிட்டு மக்கள் ஆதரவுடன் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கும் வரும் அரசியல் கட்சியை அல்லது கூட்டணியை எப்படி எதிர்கொள்வது? மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் காங்கிரஸ் அப்படித்தான் இருந்தது.
  • 2009இல் அதே மன்மோகன் சிங் மீண்டும் பிரதமரானதும் முதலாளித்துவத்தை மேலும் வளர்த்துவிடுவதற்குப் பதிலாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வெளியிலிருந்து ஆதரித்த இடதுசாரி கட்சிகள் தந்த அழுத்தத்தால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் என்ற ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 100 நாள் அரசு வேலை என்ற திட்டத்தை அமல்படுத்த வைத்தது. அதே சக்திகள், விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவும் வைத்தன.
  • புதிய பொருளாதாரக் கொள்கை அடிப்படையிலான, முதலாளிய ஆதரவுக் கட்சி அல்லது கூட்டணி மக்கள் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. தாராளமயத்தால் ஏற்படும் சில பயன்கள் மக்களில் ஒரு பகுதிக்கும் பயன் தரும்போது அந்த வாய்ப்பு ஏற்படுகிறது. ஆனால், அந்த முதலாளித்துவமும் வரம்பற்றுப் பெருகும்போது ஏற்படும் நெருக்கடியால், அதை ஆதரிக்கும் அரசியல் கட்சி அல்லது கூட்டணி மக்களுடைய ஆதரவைத் தானாகவே இழக்க நேர்கிறது. இந்த நூற்றாண்டின் இரண்டாவது பத்தாண்டுக் காலம் அதைத்தான் நமக்கு உணர்த்துகிறது.
  • எனவே ‘நவதாராளமயம்’ தொடர்வதற்கு, அதிதீவிர தேசிய (பாசிஸ) அரசியல் கூட்டு தேவைப்படுகிறது. அந்த அரசியல் கூட்டணியானது மக்களில் ஒரு பகுதியினரை – குறிப்பாக சிறுபான்மையினரை – வெறுப்பரசியல் மூலம் பிரித்துவைத்து தனது ஆதரவைப் பெருக்குகிறது. அல்லது தங்களுடைய எதிர்ப்பாளர்களைப் பிளவுபடுத்தி, பெருநிறுவனங்களின் உதவியுடனும் மதவாதக் கருத்துகளை முன்வைத்தும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்கிறது. இத்தகைய அரசியல் கூட்டணியால் மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை சிறிதும் உயர்த்திவிட முடியாது, பொருளாதார நெருக்கடிகளுக்கும் தீர்வு காண முடியாது.
  • அந்த அரசு ஏழ்மையைப் போக்கவும் வேலைவாய்ப்பைப் பெருக்கவும் பெரும் பணக்காரர்களுடைய வருமானம், சொத்துகள் மீது வரிவிதித்து அரசின் வரவு – செலவுக்குமான பற்றாக்குறையைக் குறைக்காது. மாறாக, அரசின் வருவாயைப் பெருக்க மறைமுக வரிகளைத்தான் உயர்த்தும். பணக்காரர்களுக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் வரிச் சலுகைகளை அளிக்கும்.
  • கட்டுப்பாடுகளற்ற முதலாளித்துவம் சிறு உற்பத்தியாளர்கள் மீது அவிழ்த்துவிடும் போட்டிகளைத் தடுக்கவும் மாற்றவும் ஏதும் செய்யாது. எனவே தீவிர தேசியவாதம் (நவ பாசிஸம்)கூட, நவ தாராளமயத்தை நீண்ட நாள்களுக்கு ஆதரித்துவிட முடியாது. சிறு உற்பத்தியாளர்கள் திரண்டு நவதாராளமயத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவதும் எதிர்ப்பை வலிமையாகத் தெரிவிப்பதும் தொடர்கிறது.

விவசாயிகள் எதிர்ப்பு

  • இந்த எதிர்ப்பை இப்போது நேரிலேயே பார்த்துக்கொண்டிருக்கிறோம். பாஜகவுக்கு மக்களவையில் ஏன் இடங்கள் குறைந்தன என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது விவசாயிகளின் எதிர்ப்பு. உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரம், ஹரியாணா போன்ற மாநில விவசாயிகள் தங்களுடைய விளைபொருள்களை அரசு நிச்சயம் வாங்கும் என்பதை உறுதிப்படுத்த குறைந்தபட்ச ஆதரவு விலை முறைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் தருமாறு வலியுறுத்தினர். அரசு அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. அதனால், விவசாயிகள் அரசுக்கு எதிராகத் திரும்பினர்.
  • மஹாராஷ்டிரத்தில் வெங்காய விலை, அதிக விளைச்சல் காரணமாக சரிந்தபோது அரசு கொள்முதல் செய்யவில்லை, அத்துடன் ஏற்றுமதிக்கும் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. உத்தர பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் வாழும் கைவினைஞர்கள் – தொழிலாளர்கள், வேலைகளையும் வருமானத்தையும் இழந்தனர்.
  • அரசு அவர்களுக்கு நிவாரணமும் அளிக்கவில்லை, மாற்று வேலைவாய்ப்புக்கும் வழிசெய்யவில்லை. அது போதாதென்று அயோத்தியைச் சுற்றியுள்ள நகரங்களில் சாலைகளை விரிவுபடுத்தவும் சுற்றுலா விடுதிகளை அமைக்கவும் வலுக்கட்டாயமாக வியாபாரிகளையும் சிறு உற்பத்தியாளர்களையும் அவர்களுடைய பாரம்பரிய இடங்களிலிருந்து வெளியேற்றிக் கடைகளையும் வீடுகளையும் இடித்துத் தள்ளியது. இந்தச் செயலும் அவர்களுடைய கோபத்துக்கும் எதிர்ப்புக்கும் காரணமானது.

முக்கிய பாடம்

  • இந்த நிகழ்வு அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு நல்லதொரு பாடம். நவதாராளமயக் கொள்கையை நவ பாசிஸம் மூலம் ஆதரித்துவிடலாம் என்று யாராவது நினைத்தால், மக்களுடைய வாக்குகளுக்கு அதிக மதிப்புள்ள நம் ஜனநாயக நாட்டில் அது நடக்காது. நவ பாசிஸக் கட்சிகளை ஆட்சியிலிருந்து அகற்றிய பிறகு ஆட்சிக்கு வரும், நவதாராளமயக் கொள்கை ஆதரவாளர்கள் வரம்பு மீறி நடந்தால் மீண்டும் நவ பாசிஸ்டுகளே ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என்பதே அந்தப் பாடம்.
  • விவசாயத்திலும் வேறு துறைகளிலும் சிறு உற்பத்தியாளர்களைக் காப்பதும் வளர்ப்பதும்தான் புதிதாக ஆட்சிக்கு வர நினைப்பவர்களுடைய முதல் கடமையாக இருக்க வேண்டும். விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச கொள்முதல் விலை அளிப்பதைத் தொடர்ந்து உறுதிசெய்ய, சட்டப்பூர்வ ஆதரவு வழங்கப்பட வேண்டும்.
  • வணிகப் பயிர்களுக்கும் அளித்துவந்த குறைந்தபட்ச ஆதரவு விலை நடவடிக்கைகளை அரசு படிப்படியாக விலக்கிக்கொண்டுவிட்டு, இப்போது கோதுமை - அரிசி, பருப்பு வகைகள், சிறுதானியங்கள், எண்ணெய் போன்ற முக்கிய உணவுப் பொருள்களுக்கு மட்டுமே வழங்குகிறது. இவை மாற வேண்டும். கிராமங்களில்கூட தரமான கல்வி, தேசிய சுகாதார சேவை கிடைக்க வேண்டும்.
  • அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி இலவசமாகக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். இதற்குத் தேவைப்படும் நிதியை, பெரும் பணக்காரர்கள் மீது செல்வ வரி - வாரிசுரிமை (சொத்துகள் கைமாறும்போது) வரி ஆகியவற்றை விதித்து திரட்ட வேண்டும்; நவதாராளமயக் கொள்கையால் அதிகபட்ச பலன் அடைவது பெரும் பணக்காரர்கள்தான். நவதாராளமயம் என்பது அதிதீவிர தேசியவாதத்தின் துணையில்லாமல் தாக்குப்பிடிக்க முடியாது என்பதால், அதிதீவிர தேசியவாதத்தைத் தோற்கடிக்க முயற்சிகள் அவசியம்.

நன்றி: அருஞ்சொல் (14 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories