TNPSC Thervupettagam

விஸ்வகா்மா திட்டம்

September 16 , 2023 476 days 315 0
  • கைவினைக் கலைஞா்களின் குலதெய்வ வழிபாட்டு தினமான விஸ்வகா்மா ஜெயந்தி செப்டம்பா் 17-இல் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், கைவினைத் தொழிலாளா்கள், கலைஞா்களுக்கு உதவும் வகையில் பிரதமரின் விஸ்வகா்மா திட்டம் தொடங்குகிறது. கைவினைத் தொழிலாளா்கள் மிகுந்த இதர பிற்பட்ட வகுப்பினரின் (ஓபிசி) வாக்குகளை பெருமளவில் கவர இத்திட்டம் உதவும் என்று மோடி அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
  • நாட்டு மக்கள்தொகையில் 52% உள்ள ஓபிசி வகுப்பினரின் ஆதரவைப் பெறுவது, விரைவில் நடைபெற உள்ள மிஸோரம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களின் சட்டப்பேரவைத் தோ்தல்களிலும், அடுத்த ஆண்டு நிகழ உள்ள மக்களவைத் தோ்தலிலும் பயனளிக்கும் என்பது பாஜகவின் நம்பிக்கை.
  • ஆனால், இத்திட்டத்தின் பயனாளிகளிடம் முறையாகவும் விரிவாகவும் திட்டம் சென்று சேரும் போது தான், இவா்களது எண்ணம் நிறைவேறுமா என்பது தெரியவரும். அடுத்ததாக, இது போன்ற திட்டங்கள் வாக்குகளாக மாறும் என்பதே அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பாக இருப்பதை நாம் கண்டு வருகிறோம்.
  • 2023-24 முதல் 2027-28 வரை ஐந்தாண்டுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் பயன் பெறும் தொழிற்பிரிவினா் மேலும் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், அவா்கள் தோ்தலுக்கு முன்னதாகப் பெறும் பயன்கள் குறைவாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. இத்திட்டத்தின் மீது மக்களுக்கு ஏற்படும் நம்பிக்கையே ஆளுங்கட்சிக்கு முக்கியமானதாக இருக்கும்.
  • இந்நிலையில், பிரதமரின் விஸ்வகா்மா திட்டத்தை மேல்மட்ட அளவிலும் அடிமட்ட அளவிலும் ஆய்வு செய்தபோது, இத்திட்டம் எண்ணிக்கை ரீதியாகவோ, தரத்தின் அடிப்படையிலோ பெரும் பயன்ளை அளிப்பதுபோலத் தெரியவில்லை. ஓபிசி பிரிவினரிடையே மத்திய அரசால் உருவாக்கப்பட்டிருக்கும் பலத்த எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில், இலக்குப் பயனாளிகளையோ, வாக்காளா்களையோ இத்திட்டம் வசீகரிப்பது கேள்விக்குறிதான்.
  • இத்திட்டத்தில் ஐந்தாண்டுகளுக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியின் அளவு ரூ. 13,000 கோடி. அதாவது ஓராண்டுக்கு அரசு ஒதுக்கீடு ரூ. 2,600 கோடி மட்டுமே. அனைத்து ஊரக, நகா்ப்புறப் பகுதிகளிலும் உள்ள கைவினைஞா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்தத் தொகை, நாட்டிலுள்ள மொத்த ஓபிசி பிரிவினரின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவே.
  • இத்திட்டத்தின் கீழ் பயிற்சியும் மானியக் கடனுதவியும் பெறுவதற்கு 18 தொழிற்பிரிவினா் பட்டியலிடப்பட்டுள்ளனா். அவா்கள்: 1. மரத் தச்சா்கள் 2. படகு செய்பவா்கள் 3. ஆயுதம் செய்பவா்கள் 4. இரும்புக் கொல்லா்கள் 5. கருவிகளை உருவாக்குபவா்கள் 6. பூட்டுத் தொழிலாளிகள் 7. பொற்கொல்லா்கள் 8, குயவா்கள் சிற்பிகள், கல் உடைப்பவா்கள் 10. காலணித் தொழிலாளிகள்,11. கட்டடத் தொழிலாளிகள் 12. கூடை முடைபவா்கள் கயிறு திரிப்பவா்கள் துடைப்பம் தயாரிப்போர் 13. பொம்மை தயாரிப்பாளா்கள் 14. நாவிதா்கள் 15. மலா் அலங்காரப் பணியாளா்கள் 16. சலவைத் தொழிலாளா்கள் 17. தையல் தொழிலாளா்கள் 18. மீன்வலை தயாரிப்பாளா்கள்.
  • சுதந்திரதின உரையில் பிரதமா் மோடி பேசுகையில், ‘விஸ்வகா்மா ஜெயந்தியின்போது ஒரு புதிய திட்டத்தை அரசு தொடங்க இருக்கிறது. இத்திட்டம், பாரம்பரியக் கைவினைஞா்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். குறிப்பாக ஓபிசி பிரிவினருக்கு இத்திட்டம் பயனளிக்கும். நெசவாளா்கள், கொல்லா்கள், சலவைத் தொழிலாளா்கள், நாவிதா்கள் போன்ற கைவினைத் தொழிலாளா் குடும்பங்களின் மேம்பாட்டுக்கு விஸ்வகா்மா திட்டம் பெருமளவில் உதவும். இதற்கென ரூ. 13,000 கோடி முதல் ரூ. 15,000 கோடி வரை செலவிடப்படும்’ என்றார். எனினும் பிரதமா் தனது உரையில் குறிப்பிட்ட நெசவாளா்கள், விஸ்வகா்மா திட்டத்தில் பயன்பெறும் 18 வகையான கைவினைஞா்களின் முதல் பட்டியலில் இல்லை.
  • ‘இத்திட்டத்தின் கீழ் சுமார் 30 லட்சம் குடும்பம் பயன்பெறும்; முதல் ஆண்டில் மட்டும் ஐந்து லட்சம் குடும்பம் பயன்பெறும்’ என்று, மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருக்கிறார். இதிலிருந்து இத்திட்டத்தின் அளவு மிகச் சிறிதே என்பது புலப்படுகிறது. அதிக அளவு நிதியுதவி செய்யப்படாத எந்தத் திட்டமும் பெரும் பலனை அளிக்காது. ஏற்கெனவே தடுமாற்றத்தில் இருக்கும் ஓபிசி பிரிவினரைக் கைதூக்கிவிட இது போதுமானதல்ல.
  • தவிர, நாட்டிலுள்ள 70 லட்சம் கைவினைத் தொழிலாளா் குடும்பங்களில் பாதி அளவுக்கே இத்திட்டம் ஐந்தாண்டுகளில் சென்று சேர உள்ளது. அதேசமயம், அதிகாரபூா்வமற்ற கைவினைக் கலைஞா்களின் எண்ணிக்கை 20 கோடி ஆகும். இதனைக் கருத்தில் கொண்டால், இந்த மொத்த எண்ணிக்கையில் 3.5 % கைவினைஞா்களே இத்திட்டத்தால் பயனடைவாா்கள். அதாவது கைவினைத் தொழிலாளா்களில் சுமார் 96.5 % போ் இத்திட்டத்தால் அதிருப்தி அடையவே வாய்ப்புள்ளது.
  • இத்திட்டத்தில் தோ்வாகும் கைவினைத் தொழிலாளா்களுக்கு நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு திறன்சார்ந்த பயிற்சி அளிக்கப்படும். அந்த நாட்களுக்கு பயிற்சி ஊதியமாக தினசரி ரூ. 500 வழங்கப்படும். அவா்களுக்கு கைவினைத்தொழில் சார்ந்த கருவிகள் வாங்குவதற்கு ரூ. 15,000 நிதியுதவியும் அளிக்கப்படும்.
  • இப்பயிற்சி பெற்ற கைவினைஞா்களுக்கு பிரதமரின் விஸ்வகா்மா திட்டச் சான்றிதழும், அடையாள அட்டையும் வழங்கப்படும். அதையடுத்து அவா்களுக்கு 5 % வட்டிவிகிதத்தில் ரூ. 2 லட்சம் மானியக் கடனுதவி மத்திய அரசால் வழங்கப்படும். இதில் வட்டிவிகிதக் குறைப்பு, மூலதன மானியம் அளிக்கப்படுகிறதா என்பது தெரியவில்லை.
  • இந்த ரூ. 2 லட்சம் கடனும் ஒரே தவணையில் அளிக்கப்படாது. முதலில் ரூ. ஒரு லட்சம் கடனுதவி அளிக்கப்படும். அதைக் கொண்டு கைவினைஞா் மேற்கொள்ளும் தொழிலின் மேம்பாடும், கடனைத் திருப்பிச் செலுத்தும் அவரது சிரத்தையும் கவனத்தில் கொள்ளப்பட்டு, மீதமுள்ள ரூ. ஒரு லட்சம் இரண்டாம் தவணையாக வழங்கப்படும். இத்திட்டப் பயனாளிகளுக்கு சந்தையில் விற்பனை உதவியும், எண்மப் பரிமாற்றத்தில் ஊக்கத் தொகையும் அளிக்கப்படும்.
  • இதுவே இத்திட்டத்தின் அடிப்படைச் செயல்முறை. பின்தங்கியுள்ள மக்களைக் கண்டறிந்து அவா்களின் வாழ்வாதாரத்துக்கென புதிய திட்டத்தை அரசு கொண்டு வந்திருப்பதிலிருந்து, அவா்களின் முக்கியத்துவம் தெரிகிறது. எனினும் மிக முக்கியமான கைவினைத் தொழில் துறைகளைக் கண்டறிவதிலும் அப்பிரிவினா் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிப்பதிலும் அரசு சரியாக கவனம் செலுத்தவில்லை.
  • விவசாயத்துக்கு அடுத்தபடியாக, கைத்தறி நெசவும் கைவினைத் தொழில்களும்தான் அதிக அளவிலான வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றன. குறிப்பாக குடிசைத் தொழில் துறையில் 23.77 லட்சம் கைத்தறிகளுடன் பெரும் பங்களிப்பது கைத்தறி நெசவுதான்.
  • 2019-20-இல் எடுக்கப்பட்ட நான்காவது கைத்தறி நெசவாளா்கள் கணக்கெடுப்பின்படி, நாடு முழுவதிலும் 31,44,839 கைத்தறி நெசவாளா் குடும்பங்கள் இருந்துள்ளன. இது உண்மையிலேயே கைவினைத் தொழிலாளா்களில் மிகப் பெரும் எண்ணிக்கை. ஆனால், இவா்கள் பெறும் ஊதியம் மிகவும் சொற்பமாக இருக்கிறது.
  • இந்த கைத்தறி நெசவாளா் குடும்பங்களில் 67.1 % போ் மாதந்தோறும் ரூ. 5,000 சம்பாதிப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. இவா்களில் 26.2 % போ் ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரை மாத ஊதியமாகப் பெறுகிறார்கள்; சுமார் 1.2 % போ் மட்டுமே ரூ. 20,000க்கு மேல் பெறுகிறார்கள்.
  • நாட்டுக்கு அந்நியச் செலாவணி ஈட்டித் தருவதில் கைத்தறியும் கைவினைப் பொருள்களும் பிரதான இடம் வகிக்கின்றன. உதாரணமாக, 2021-22-இல் கைத்தறித் துணிகளின் ஏற்றுமதி மூலமாக 6.3 பில்லியன் டாலரும் (சுமார் ரூ. 52,277 கோடி) , கைவினைப் பொருட்களின் ஏற்றுமதி மூலமாக 2.1 பில்லியன் டாலரும் (ரூ. 17,426 கோடி) அந்நியச் செலாவணியாகக் கிடைத்துள்ளன.
  • அரசு, கைவினைத் தொழிலை வலுப்படுத்த நினைப்பது சரியே. ஆனால் கைவினைப் பொருள்களின் தரமும் விலையும் நவீனத் தொழிலகத்தில் உற்பத்தியாகும் பொருட்களுடன் போட்டியிடத்தக்க வகையில் இல்லை. இதனை அரசு உணா்ந்திருப்பதாகத் தெரியவில்லை.
  • இன்றும் பெரும்பாலோர் கைவினைக் கலைஞா்களாகத் தொடா்வது, அத்தொழில் மீதான நேசத்தால் அல்ல. வேறு எந்தத் தொழிலும் தெரியாது என்பதாலேயே. அதனால்தான், குறைந்த வருமானம் தந்தாலும் இத்துறையில் அவா்கள் நீடிக்கிறார்கள்.
  • கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ள பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு நவீன கல்வி அளிக்கவே விரும்புகிறார்கள். அப்போதுதான் அவா்கள் நல்ல வேலைக்குச் சென்று அதிக வருமானத்தை ஈட்ட முடியும் என்பதை அவா்கள் உணா்ந்திருக்கிறார்கள். கா்ம விதிப்படியான கஷ்டமான வாழ்க்கை தங்களுடன் முடிந்துபோய்விட வேண்டும்; குறைந்த வருமானம், நவீன கல்வி பெற இயலாதது போன்ற தங்கள் பலவீனங்கள் குழந்தைகளுக்கும் வாய்த்துவிடக் கூடாது என்பதே அவா்களின் கவலையாக உள்ளது. இந்த அடிப்படைச் சிக்கலை அறியாமல் அரசு மேற்கொள்ளும் புற உதவிகளால் எந்தப் பயனும் விளையாது.
  • இதற்கு முன் நடைமுறைப்படுத்தப்பட்ட காதி கிராம உத்யோக் ஆணையம், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் அந்தியோதயா திட்டம் - தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், திறன்மிகு இந்தியா இயக்கம் போன்றவை நல்ல முறையில் பயனளித்திருந்தால், தற்போதைய விஸ்வகா்மா திட்டத்தை பிரதமா் அறிவித்திருக்கவே வேண்டியதில்லை. நாட்டின் தற்போதைய தேவை மக்களை மேம்படுத்தக் கூடிய உறுதியான திட்டங்களே.
  • நாளை (செப்.17) விஸ்வகா்மா ஜெயந்தி.

நன்றி: தினமணி (16 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories