வீடற்ற மக்களுக்கும் வேண்டும் சமூகநீதி!
- “பொதுவாகவே ‘வீடு’ என்பது மனிதர்கள் தங்கும் இடத்தை / இருப்பிடத்தை மட்டும் குறிக்கும் சொல் அல்ல. அது மனிதர்களின் சமூக உள் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளும் இடமாகவும் இருக்கிறது” என்கிறார்கள் சமூகவியலாளர்களான டிப்பில், ஸ்பீக் இருவரும். இந்தியச் சமூகத்தில், அடிப்படைச் சமூக நிறுவனங்களான குடும்பங்களின் வாழ்விடங்களாகவும் வீடுகள் இருக்கின்றன.
- அப்படிப்பட்ட வீடு இல்லாத மனிதர்களின் வாழ்க்கையை நாம் அறிந்துகொள்வது அவசியம். அவர்களின் வாழ்க்கைச் சூழல் சிக்கலானதாக அமைய இந்த ‘வீடற்ற நிலை’ ஒரு காரணமாக இருக்கிறது. இது முக்கியமான சமூகப் பிரச்சினை. சென்னை சமூகப் பணிக் கல்லூரியின், நகர்ப்புற ஏழைகளுக்கான மையத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ‘சென்னை மாநகரத்தில் வீடற்றவர்களின் நிலை’ என்கிற ஆய்வு, சென்னை போன்ற பெருநகரங்களில் வீடற்றவர்களின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
யாரெல்லாம் வீடற்றவர்கள்:
- இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, ‘வீடு இல்லாத குடும்பங்கள்’ எனப் பொதுவாக ஒரு வரையறைக்குள்ளாகத்தான் ‘வீடற்றவர்கள்’ கணக்கில் கொள்ளப்பட்டனர். கட்டிடங்கள் அல்லது வீடுகளில் வசிக்காமல், சாலையோரங்களில், நடைபாதைகளில் திறந்தவெளியில் வாழ்பவர்கள், பெரிய குழாய்கள், மேம்பாலம், வழிபாட்டுத் தலங்கள், ரயில்வே நடைபாதைகள் போன்ற இடங்களில் தற்காலிகமாகவும் நீண்ட காலமாகவும் வசிக்கும் மக்கள் ‘வீடற்றவர்கள்’ என்று கருதப்படுகிறார்கள்.
- மேற்கூரை இல்லாமல் ஒரு தார்ப்பாயைக் கொண்டோ, தகரத்தைக் கொண்டோ தற்காலிகத் தங்கும் இடங்களைக் கொண்டிருக்கும் குடும்பங்கள், தனிநபர்களையும் இந்த வரையறைக்குள் அடக்கலாம் என உச்ச நீதிமன்றமும் சமூகவியல் ஆய்வாளர்களும் வழிகாட்டியுள்ளனர்.
- 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியா முழுவதும் தோராயமாக 17 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடற்றவர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை தற்போது இன்னும் அதிகரித்திருக்கும். டெல்லியில் 88,410 பேர், மும்பையில் 37,059 பேர், கொல்கத்தாவில் 39,431 பேர், பெங்களூருவில் 16,345 பேர் வீடற்றவர்களாக இருக்கிறார்கள் என அரசு சாரா நிறுவனங்கள் நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- இந்நிலையில், சென்னை மாநகரத்தின் அனைத்து மண்டலங்களிலும் வீடற்றவர்களாக எத்தனை பேர் இருக்கிறார்கள், அவர்களின் சமூகப் பொருளாதார நிலை எவ்வாறு இருக்கிறது என 2022இல், ‘சென்னை மாநகரத்தில் வீடற்றவர்களின் நிலை’ என்கிற ஆய்வில் கணக்கெடுக்கப்பட்டது. ஆய்வின்படி, சென்னையில் மொத்தம் 10,672 வீடற்றவர்கள் இருக்கிறார்கள்.
- அவர்களில் ஆண்கள் 4,137, பெண்கள் 2,420, குழந்தைகள் 1,142, முதியோர் 2,637, மாற்றுப்பாலினத்தவர் 60, மாற்றுத்திறனாளிகள் 178, உளவியல் மாற்றுத்திறனாளிகள் 98 பேர். 5,909 பேர் தனியாகவும், மீதம் இருப்பவர்கள் குடும்பமாகவும் (1,298 குடும்பங்கள்) வசித்து வருகிறார்கள்.
அரசின் திட்டங்கள்:
- அரசு சாரா நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் விளைவாகவும் மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகளாலும், வீடற்ற நிலைக்குத் தீர்வு காணப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்திய அரசின் வீட்டுவசதி அமைச்சகம், தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின்கீழ் (NULM), நகர்ப்புற வீடற்றவர்களுக்கான தங்குமிடம் மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் திட்டத்தைச் செயல்படுத்த அனைத்து மாநிலங்கள், மத்திய ஆட்சிப் பகுதிகளுக்குப் பரிந்துரைத்துள்ளது. இந்தத் திட்டமானது அத்தியாவசியச் சேவைகளுடன் கூடிய நிரந்தரத் தங்குமிடத்தை நகர்ப்புற ஏழைகளுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இதேபோல, அரசு சாரா நிறுவனங்களும் நகர்ப்புற வீடற்ற மக்களின் நலன்களுக்காகப் பல்வேறு விதமான பங்களிப்புகளைச் செய்து வருகின்றன. விரிவான குழந்தைப் பராமரிப்பு, தரமான கல்வி, ஊட்டச்சத்து, சுகாதாரம், தங்குமிடம், திறன் பயிற்சிகள், பொழுதுபோக்கு, பாதுகாப்பு போன்ற பல்வேறு சேவைகளைச் செய்யும் தொண்டு நிறுவனங்களும், வீடற்ற மக்களுக்கு உணவு, மருத்துவ சேவை போன்ற பல்வேறு சேவைகளைச் செய்யும் தொண்டு நிறுவனங்களும் சென்னையில் இயங்குகின்றன.
கவனத்தில் கொள்ள வேண்டிய ஆய்வு முடிவுகள்:
- கணக்கெடுக்கப்பட்ட 5,909 தனிநபர்களில் 361 பேரிடமும், 1,298 குடும்பங்களில் 296 குடும்பங்களிடமும் சமூகப் பொருளாதார மாதிரி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, சென்னையில், வீடற்றவர்களில் பெரும்பாலானோர் பட்டியல் சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பது தெரியவந்திருக்கிறது. இவர்களில் கணிசமான குடும்பங்கள் மூன்று தலைமுறைகளாக வீடற்ற நிலையில் இருக்கின்றனர்.
- சுமார் 30% பெண்கள் கணவரை இழந்தவர்கள். உணவு சமைப்பது, உணவுப் பொருள்களைச் சேமித்து வைப்பது போன்றவை வீடற்றவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள். பொது விநியோகத் திட்டத்தில் உணவுப்பொருள்களைப் பெறுவதும் சிரமமாக இருக்கிறது. பலர் இருப்பிட முகவரி இல்லாத காரணத்தால் குடும்ப அட்டை அற்றவர்களாக இருக்கிறார்கள்.
- மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு போன்ற சேவைகளிலிருந்து விடுபட்டவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால், இடஒதுக்கீடு உள்ளிட்டவற்றைப் பெற இயலாதவர்களாக இருக்கிறார்கள். கழிப்பறை வசதி இல்லாததால், இரவு நேரத்தில் பெண்கள் பெரிதும் சிரமப்பட வேண்டியுள்ளது. பல பெண்கள் இதன் காரணமாக இரவு நேரம் உணவு உட்கொள்ளாமல் தவிர்த்துவருவது வேதனைக்குரிய விஷயம்.
- பொதுவாக வீடற்றவர்கள் என்றால், அவர்கள் பிச்சை எடுப்பவர்களாகவும், குப்பை பொறுக்குபவர்களாகவும் இருப்பார்கள் என்கிற பொதுப்புத்தி இருக்கிறது. இதை நிராகரிக்கும் வகையில் இந்த ஆய்வின் முடிவு அமைந்துள்ளது. வீடற்றவர்களில் பெரும்பாலானோர் முறைசாராத் தொழில்களில் இருப்பதும், மாதம் முழுவதும் வேலை கிடைக்காமல் சிரமப்படுவதும் தெரியவந்துள்ளது. இவர்கள் பொதுவாக, ஏதேனும் ஒரு அன்றாட வேலை செய்து தங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்கிறார்கள்.
சமூகநீதிக்கான தேவை:
- எந்தவொரு நாகரிகச் சமூகத்திலும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள வாழ்வுரிமை என்பது உணவு, தண்ணீர், கண்ணியமான சூழல், கல்வி, மருத்துவம், தங்குமிடம் ஆகியவற்றுக்கான உரிமைகளைக் குறிக்கிறது. தங்குமிட உரிமை என்பது இந்திய அரசமைப்புச் சட்டக்கூறு 21 இன் பிரிவு 19(1)(இ) கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஓர் அடிப்படை உரிமையாகும். மேலும், ஒரு மனிதனுக்குத் ‘தங்குமிடம்’ என்பது ஒருவரது உயிருக்கும் உடைமைக்கும் மட்டுமான பாதுகாப்பு வழங்குவது என்பதல்ல.
- அவர் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், அறிவுரீதியாகவும் வளர வாய்ப்புகள் உள்ள இடம்தான் வீடு. தங்குமிட உரிமையில் வாழ்க்கை நடத்தப் போதுமான இடம், பாதுகாப்பான - ஒழுங்கமைவான கட்டமைப்பு, சுத்தமான சூழல், போதுமான வெளிச்சம், தூய காற்று, நீர், மின்சாரம், சுகாதாரம், இன்ன பிற குடிமை வசதிகள் ஆகியவையும் அடங்கும்.
- ‘தங்குவது (அ) இருப்பது’ மற்றும் ‘வாழ்வது’ குறித்தான கருத்தாக்கத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு மனிதர் ஓர் இடத்தில் தங்குவதைக் காட்டிலும் கண்ணியத்துடன் வாழ்வது என்பது சமூகநீதியில் தவிர்க்க இயலாத அங்கமாகிறது. சமீபத்தில் மெட்ராஸ் ரேஸ் கிளப்பின் 148 ஏக்கர் நிலத்தைத் தமிழக அரசு கையகப்படுத்திப் பசுமைப் பூங்கா பகுதியாக அறிவித்து அரசாணை வெளியிட்டது.
- அந்தப் பகுதியில் வசிக்கும் வீடற்ற மக்களுக்குப் பூங்கா பராமரிப்பு, மேம்பாட்டுப் பணிகளை வழங்கும்போது தமிழக அரசு அனைவரையும் உள்ளடக்கிய சமூகநீதியை உறுதிப்படுத்த முடியும். அனைவருக்கும் அனைத்தும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்கிற சமூகநீதிப் பார்வையில் வீடற்றவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (11 – 10 – 2024)