TNPSC Thervupettagam

வீட்டு வாடகை, வட்டி வருமானத்துக்கு டிடிஎஸ் உச்சவரம்பு உயர்வு

February 3 , 2025 2 hrs 0 min 10 0

வீட்டு வாடகை, வட்டி வருமானத்துக்கு டிடிஎஸ் உச்சவரம்பு உயர்வு

  • வாடகை வருமானம் தற்போது நடப்பில் இருக்கிற வருமான வரி சட்டத்தின்படி, ஒன்றுக்கு மேற்பட்ட சொந்த வீடுகள் தன் பேரில் வைத்திருப்பவர், அவற்றில் ஒரு வீட்டை குடியிருக்கும் வீடாக காட்டலாம். அதற்கு வருமான வரி இல்லை. ஆனால், சொந்தப் புழக்கத்திற்காக வைத்திருந்தாலும், இரண்டாவது மற்றும் அதற்கு மேல் இருக்கும் வீடுகளுக்கு அப்படிப்பட்ட சலுகையை பெற முடியாது.
  • வாடகைக்கு விட்டிருந்தால் வாடகை வருமானத்தை கணக்கில் காட்டி வரி கட்ட வேண்டும். வாடகைக்கு விடாவிட்டாலும், சந்தை வாடகை அளவு வருமானம் வந்தது போல (Deemed rent) வருமான வரி கட்ட வேண்டும். வரும் 2025- 26 க்கான பட்ஜெட்டில் இதில் மாறுதல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 2025-26 முதல், வாடகைக்கு விடாத அவர் பெயரில் இருக்கும் இரண்டாவது வீட்டுக்கு வருமான வரி கட்டத் தேவையில்லை.

வாடகையில் டிடிஎஸ் பிடித்தம்:

  • வியாபாரம் செய்பவர்கள் டேக்ஸ் ஆடிட் செய்யப்பட வேண்டிய நிலையில் (TAN No.) இருப்பவர்கள் மட்டும் அவர்கள் வாடகையாக செலுத்தும் தொகை ஆண்டுக்கு, ரூ.2.4 லட்சத்துக்கும் அதிகமிருந்தால், வாடகைப் பணத்தில் 10% பணத்தை பிடித்தம் செய்து (TDS), அதை வாடகைக்கு விடுபவருடைய வருமான வரிக் கணக்கில் கட்ட வேண்டும். அவர் அதை கணக்குத் தாக்கல் செய்யும்போது திரும்ப பெற்றுக் கொள்வார். இந்த பட்ஜெட்டில், இதை ஆண்டுக்கு ரூ.6லட்சத்துக்கு மேல் வாடகை கொடுக்கும், டேக்ஸ் ஆடிட் செய்யப்படுபவர்கள் மட்டும் செய்தால் போதும் என்று மாற்றியிருக்கிறார்கள்.

மூத்த குடிமக்களுக்கு டிடிஎஸ் சலுகை:

  • இப்போதைய நிலவரப்படி, வங்கிகள் மற்றும் ஏனைய நிதிநிறுவனங்கள் மூத்த குடிமக்களுக்கு வட்டி கொடுக்கும்போது, ஆண்டுக்கு ரூ.50,000க்கு அதிகமான தொகைக்கு TDS பிடித்துக் கொண்டு கொடுக்க வேண்டும். வரும் நிதியாண்டு முதல் வட்டி வருவாய் ரூ.1 லட்சத்துக்கு மேல் இருந்தால் மட்டும் டிடிஎஸ் பிடித்தம் செய்ய வேண்டும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிவிடெண்டுகள் மீது டிடிஎஸ்:

  • அதேபோல நிறுவனங்கள், பங்கு முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் தொகை வழங்குகிறபோது ரூ.5 ஆயிரத்துக்கு மேல் இருந்தால் டிடிஎஸ் பிடித்துக் கொண்டு கொடுக்க வேண்டும் என்பதை 10 ஆயிரத்துக்கு மேல் என்று மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிறுவனமும் பத்தாயிரம் ரூபாய் வரை டிடிஎஸ் இல்லாமல் கொடுக்கலாம். ஒருவர் எத்தனை நிறுவனத்தில் இருந்து வேண்டுமானாலும் டிவிடெண்ட் பெறலாம்.

டிசிஎஸ்:

  • வெளி நாட்டுக்கு கல்வி சுற்றுலா போன்றவற்றுக்கு பணம் அனுப்பும்போது ரூ.7 லட்சத்துக்கு மேல் அனுப்பினால் அதற்கு TDS போலவே TCS (Tax Collected at Source) பிடித்தம் செய்ய வேண்டும் என்று இருப்பதை பத்து லட்சத்துக்கு மேல் மட்டும் என்று மாற்றப்பட்டுள்ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories