TNPSC Thervupettagam

வீழ்ச்சியில் இருந்து மீளுமா பங்குச்சந்தை?

February 17 , 2025 5 days 23 0

வீழ்ச்சியில் இருந்து மீளுமா பங்குச்சந்தை?

  • பொதுவாக மத்திய பட்ஜெட் என்றாலே, திருவிழா போல் பார்க்கப்பட்ட காலம் ஒன்று உண்டு. எந்த பொருட்களின் விலை உயரும், எதன் விலை குறையும், பொதுமக்களுக்கு சலுகைகள் வழங்கப்படுமா அல்லது சுமை அதிகரிக்குமா என்ற பல்வேறு கேள்விகளுடன் எதிர்நோக்கப்படும். ஆனால், தற்போது ஜிஎஸ்டி கவுன்சில் மூலம் வரி உயர்வு அல்லது குறைப்பு செய்யப்படுவதால் பட்ஜெட்டுக்கு அந்த வேலை இல்லாமல் போய்விட்டது.
  • பட்ஜெட் என்பது வரவு செலவு கணக்கு காட்டும் ஒரு நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. அரசு வருவாயின் முக்கிய ஆதாரமான மறைமுக வரிக்கு (ஜிஎஸ்டி) பட்ஜெட்டில் எந்த வேலையும் இல்லாத நிலையில், நேரடி வரி (வருமான வரி) பற்றிய எதிர்பார்ப்பு மையமாக இருக்கிறது. நேரடி வரிக்கு தனிமனித பொருளாதாரத்தோடு நேரடி தொடர்பு உள்ளது.
  • ஒரு தனி மனிதனின் பொருளாதார வளர்ச்சிதான், ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியை உயர்த்த உதவும். அதன் அடிப்படையில்தான் பங்குச்சந்தையும் நகரும். கால மாற்றத்தின் அடிப்படையில், பணவீக்கமானது, பணத்தின் மதிப்பை குறைத்துக் கொண்டே வருகிறது.
  • எனவே, வருமான வரியின் ஆரம்ப புள்ளியை அதற்கேற்றவாறு தொடர்ந்து உயர்த்த வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், ரூ.12 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருமான வரி சலுகையால் அரசுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
  • அதாவது, இந்தப் பணம் பொதுமக்கள் கையில் செலவு செய்வதற்கு கொடுக்கப்படுவதாக எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் பொதுமக்கள் தொடர்ந்து செலவழிக்கும்போது, நிறுவனங்களின் விற்பனை கூடி, பொருளாதார வளர்ச்சி ஊக்கப்படுத்தப்படலாம். கூடுதலாக கிடைக்கக்கூடிய இந்த நிதியை வைத்து மக்கள் செலவழிக்க ஆரம்பித்தால் எந்தெந்த துறைக்கு பலன் கிடைக்கலாம் என்பதையும் பார்க்கலாம்.

வாகன துறை:

  • முதலாவதாக, வாகனத் துறை பெரும் பலன் அடையலாம். வாகனத் துறையின் தற்போதைய PE Ratio சுமார் 22 என்ற அளவில் உள்ளது. இது அதன் உச்சத்தில் இருந்து கணக்கெடுத்தால் சுமார் 20% வீழ்ச்சி அடைந்துள்ளது. எனவே தற்போதைய மதிப்பீடு என்பது முதலீடு செய்ய தொடங்குவதற்கு சரியான மதிப்பீடாக இருக்கலாம்.

நுகர்பொருள் துறை:

  • பொதுவாக, மக்கள் கையில் பணப்புழக்கம் ஏற்பட்டால், அதிவிரைவு நுகரும் பொருட்கள் துறைதான் (FMCG) அதிக வளர்ச்சி அடையும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் இதை இரண்டு கோணத்தில் பார்க்க வேண்டி இருக்கிறது. ஒன்று உள்நாட்டு நுகர்வின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. இரண்டு இந்தத் துறையின் மதிப்பீடு, கடந்த ஐந்து வருடத்தின் சராசரி PE ரேஷியோ 41 ஆகவும், தற்போதைய PE ரேஷியோ 45 ஆகவும் உள்ளது. எனவே, இந்தத் துறை வரக்கூடிய காலத்தில் இன்னும் வலிமை குன்றவே வாய்ப்புள்ளது.

எம்எஸ்எம்இ துறை:

  • இந்த பட்ஜெட்டில், குறு, சிறு, நடுத்தர (எம்எஸ்எம்இ) நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வசதி ஏற்படுத்திக் கொடுக்க திட்டமிட்டு இருப்பதனால், இந்த வகை நிறுவனங்களுக்கு கடன் கொடுக்கும் வங்கிகளுக்கு சாதகமான சூழல் உள்ளது.

ஆபரணங்கள் துறை:

  • இந்த பட்ஜெட்டில், தங்க நகைகளுக்கான வரி 25%-லிருந்து 20% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. இது தங்க நகைகளை விற்கும் நிறுவனங்களுக்கு சாதகமானது. அதற்காக எல்லா நிறுவனங்களும் மேம்படும் என்று சொல்ல முடியாது. அடிப்படையில் வலிமையாக இருக்கும் நிறுவனங்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

தோல் காலணிகள்:

  • உயர்தர காலணிகளை தயாரிக்கும் தோல் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் நோக்கம் ஏற்றுமதியை அதிகரிப்பது, அதிக வேலைவாய்ப்பை உருவாக்குவது ஆகும்.

ரயில்வே, பாதுகாப்பு துறை:

  • இந்த பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால், ரயில்வே துறை சார்ந்த பங்குகள் எல்லாம் இறங்க ஆரம்பித்து உள்ளன. பாதுகாப்புத் துறைக்கு கடந்த ஆண்டைவிட கூடுதலாக 12.9% நிதி (ரூ.6.8 லட்சம் கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது சாதகமான அம்சமாகும். இந்த துறை சார்ந்த பங்குகள் ஒரு வருடம் நல்ல பலன் அளிக்கலாம்.

நிதிப் பற்றாக்குறை:

  • ஒரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை அளவிட நிதிப் பற்றாக்குறை எண் முக்கியம் ஆகும். எந்த அளவுக்கு பற்றாக்குறை குறைகிறதோ அந்த அளவுக்கு, அந்நிய முதலீடு நாட்டின் உள்ளே வரும். கரோனா பெருந்தொற்று காலத்தில், ஜிடிபியில் 9.2% என்ற அளவில் இருந்த நிதி பற்றாக்குறை தற்போது 4.9 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. வரும் நிதியாண்டில் இதை 4.4% ஆக குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது வரவேற்கத்தக்கது.
  • அந்நிய நிதி நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையில் பங்குகளை தொடர்ந்து விற்றுக் கொண்டு இருக்கின்றன. இதனால் பங்குச் சந்தைகள் அதிக ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. இன்னும் 6 மாதம் முதல் ஓராண்டு வரை இதே நிலை தொடர வாய்ப்பு உள்ளது. எனவே, முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ட்ரம்ப் கொள்கை முடிவுகள் மற்றும் வட்டிவிகித மாற்றங்கள்:

  • அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒவ்வொரு நாளும் வர்த்தக வரி விகிதங்களை பல்வேறு நாடுகளின் மேல் திணித்து வருவது, சர்வதேச பொருளாதார நிலைமையை மோசமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தனிப்பட்ட நாடுகள் பாதிக்கப்படுவதோடு, உலக பொருளாதாரமும் பாதிக்கப்படலாம். மேலும் அமெரிக்க மத்திய வங்கியும், இந்தியாவின் ரிசர்வ் வங்கியும் வருங்கால வட்டிவிகித குறைப்பை பற்றி தெளிவாக குறிப்பிடவில்லை.
  • ஒருவேளை பணவீக்கம் கூடும் என்ற அச்சமும் இவர்களுக்கு உண்டு. இதனால், பொருளாதார ஊக்குவிப்பு குறையலாம். இதனால் நிறுவனங்களின் எதிர்பார்த்த வளர்ச்சியும் பாதிக்கப்படலாம். இவையெல்லாம் பங்குச்சந்தையின் வீழ்ச்சியை மேலும் துரிதப்படுத்தலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories