- இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர மோட்டார் வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டார் நிறுவனம் தனது தொழிற்சாலையை இந்த மாதத்தில் நான்கு நாள்கள் மூடுகிறது.
- இந்தியாவின் மிகப் பெரிய மகிழுந்து உற்பத்தியாளரான மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம், விற்பனை வீழ்ச்சியைத் தொடர்ந்து மூவாயிரம் தற்காலிகத் தொழிலாளர்களைப் பணியிலிருந்து நிறுத்தியிருக்கிறது. நடப்புக் காலாண்டில் மகேந்திரா நிறுவனம் எட்டு முதல் 14 நாள்கள் தங்களது உற்பத்தியை நிறுத்த உத்தேசித்திருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் அதேபோல, விற்பனைக்கு ஏற்றாற்போல தன்னுடைய உற்பத்தியை நிர்ணயித்துக்கொள்ள முடிவெடுத்திருக்கிறது.
நிறுவனம் – உற்பத்தி
- மோட்டார் வாகனத் தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல, உதிரிபாக உற்பத்தியாளர்களும் தங்களது உற்பத்தியைக் குறைத்துக்கொள்ள முடிவெடுத்திருக்கிறார்கள். கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூலை மாதம் விற்பனை குறைந்ததையடுத்து, ஒட்டுமொத்த மோட்டார் வாகனத் துறையே கலகலத்துப் போயிருக்கிறது.
ஜூலை மாதத்தில் மோட்டார் வாகனங்களின் விற்பனை 18.7% வீழ்ச்சியடைந்திருக்கிறது. தொடர்ந்து 9 மாதங்களாகக் குறைந்துவரும் பயணிகள் வாகன விற்பனை ஜூலை மாதத்தில் 31% குறைந்திருக்கிறது. இரு சக்கர மோட்டார் வாகனங்களின் விற்பனை 17% குறைந்தது என்றால், சரக்கு வாகனங்களின் விற்பனை 26% குறைந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
- மோட்டார் வாகன விற்பனை வீழ்ச்சியடையும்போது, ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் அது பாதிக்கிறது. ஏனென்றால், உற்பத்தித் துறை ஜிடிபியில் 49% மோட்டார் வாகன உற்பத்தி என்பதால் இது குறித்து நாம் கவலைப்பட்டாக வேண்டும்.
மோட்டார் வாகனத் துறை ஏனைய எல்லா உற்பத்தித் துறைகளுடனும் தொடர்புடையதாக இருக்கும் நிலையில், இதன் பாதிப்புகள் மற்ற துறைகளையும் நிச்சயமாகப் பாதிக்கக்கூடும்.
முந்தைய மாதங்களில்...
- கடந்த மூன்று மாதங்களில் மட்டும் மோட்டார் வாகன விற்பனையாளர்கள் 2 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களை தற்காலிகப் பணி நிறுத்தம் செய்திருக்கிறார்கள். மோட்டார் வாகனத் துறையில் மூன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பணி நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
வாகன விற்பனையாளர்கள் 2 லட்சம் பேரையும், உதிரிபாக உற்பத்தியாளர்கள் ஒன்றரை லட்சம் பேரையும், மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் 15 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்களையும் தற்காலிக நீக்கம் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதே நிலைமை தொடருமானால், 10 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம்.
- ஏற்கெனவே 300-க்கும் அதிகமான மோட்டார் வாகன விற்பனையாளர்கள் விற்பனைக் குறைவு காரணமாக தங்களது நிறுவனங்களை மூடியிருக்கிறார்கள். இப்படியோர் அசாதாரணமான நிலைமை ஏற்படுவதற்கு பெரு நகரங்கள், நகரங்கள், ஊரகப்புறங்கள் என்றில்லாமல் எல்லா தளங்களிலும் வாங்கும் சக்தி குறைந்திருப்பது மிக முக்கியமான காரணம்.
- இதை இந்திய ரிசர்வ் வங்கியே ஏற்றுக்கொண்டிருக்கிறது.
மோட்டார் வாகன விற்பனையில் ஏற்பட்டிருக்கும் கடும் வீழ்ச்சிக்கு மக்களின் வாங்கும் சக்தி குறைந்திருக்கிறது என்பது மட்டுமல்லாமல், மோட்டார் வாகனங்கள் வாங்குவதற்கான கடன் வசதி குறைந்திருப்பதும் காரணம். பல வங்கிசாரா நிதி நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்கியதைத் தொடர்ந்து, வாகனக் கடன் வசதி பாதிக்கப்பட்டிருக்கிறது. வாகனங்களுக்கான காப்பீட்டுக் கட்டணம் அதிகரித்திருப்பதும், மோட்டார் வாகனங்கள் மீது 28% ஜிஎஸ்டி விதித்திருப்பதும் விற்பனையைப் பாதித்திருக்கின்றன என்பது மோட்டார் வாகன உற்பத்தியாளர்களின் வாதம். ஒட்டுமொத்த பொருளாதாரமும் மந்தகதியில் இருக்கும் நிலையில், மேலே குறிப்பிட்ட காரணங்களால் நிலைமை மேலும் மோசமடைந்திருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளலாம்.
தொலைநோக்குப் பார்வை
- மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் தொலைநோக்குப் பார்வையில்லாமல் தங்களது உற்பத்தித் திறனை அதிகரித்ததாலும், அதற்காகப் பெரிய அளவில் முதலீடு செய்திருப்பதாலும், திடீர் வீழ்ச்சியால் மிகப் பெரிய பாதிப்பை எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, கடந்த 2012-இல் டீசல் வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை ரூ.1,700 கோடி முதலீட்டில் மாருதி சுஸுகி நிறுவனம் நிறுவியது. இப்போது விற்பனையில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியால், டீசல் வாகனங்களை விற்பதையே நிறுத்திக் கொண்டிருக்கிறது.
- இதேபோல ஏனைய நிறுவனங்களும் தொலைநோக்குப் பார்வை இல்லாமல் போட்டி போட்டுக்கொண்டு தங்களது உற்பத்தித் திறனை அதிகரிப்பதும், புதிய ரக வாகனங்களை அறிமுகப்படுத்துவதுமாக இருந்ததன் விளைவை இப்போது எதிர்கொள்கின்றன. அவர்களது தவறான முனைப்பின் விளைவால் லட்சக்கணக்கானோர் வேலை இழப்பை எதிர்கொள்கிறார்கள் என்பதை யாரும் சுட்டிக்காட்டத் தயாராக இல்லை.
- மிகப் பெரிய பாதிப்பை எதிர்கொள்ளும் மோட்டார் வாகன உற்பத்தித் துறையைக் கடும் வீழ்ச்சியிலிருந்து காப்பாற்ற அரசு முன்வர வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது. முன்பு இதேபோல, விமான சேவைத் துறையும் கோரிக்கை எழுப்பியது. தனியார்மயம், சந்தைப் பொருளாதாரம், அரசின் தலையீடு கூடாது என்றெல்லாம் வாதிடுபவர்கள், குறிப்பிட்ட துறையினர் தங்களது தவறுகளால் வீழ்ச்சியை எதிர்கொள்ளும்போது, மக்களின் வரிப் பணத்தில் அவர்களை அரசு மீட்க வேண்டும் என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.
- 10 லட்சம் தொழிலாளர்களின் வருங்காலம் கேள்விக்குறியாகும்போது, அரசு தலையிடாமல் இருக்கவும் முடியாதே, என்ன செய்வது?
நன்றி: தினமணி(21-08-2019)