TNPSC Thervupettagam

வெடிக்கக் காத்திருக்கும் எரிமலை!

August 6 , 2024 33 days 57 0
  • உலகளாவிய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது மும்பையில் நடந்த முகேஷ் அம்பானி இல்லத் திருமணம். அம்பானி, அதானி என்றில்லை மிகுந்த பொருள்செலவில் ஆடம்பரத் திருமணங்கள் நடத்துவது என்பது கௌரவமாகவே மாறிவிட்டிருக்கிறது. தங்களது செல்வாக்கின் அடையாளமாக திருமண பிரம்மாண்டத்தைக் கருதும் போக்கு பணக்காரா்களை மட்டுமல்ல, நடுத்தர மக்களையும் தொற்றிக்கொண்டிருக்கும் அவலம் வேதனையளிக்கிறது.
  • அரை நூற்றாண்டுக்கு முன்னால்வரை மிட்டா மிராசுக்களும், ஜமீன்தாரா்களும் நிலபுலன்களுடனும் வசதியுடனும் இருந்தாா்கள். தங்கள் இல்லத் திருமணத்தில் ஊரைக் கூட்டி அனைவருக்கும் அறுசுவை விருந்தளிக்க விரும்பினாா்கள். பலருக்கும் வயிறார உணவளிப்பதன் மூலம் மணமக்கள் வாழ்த்தப்படுவாா்கள் என்று கருதினாா்களே தவிர, தங்களது செல்வத்தையும் செல்வாக்கையும் பறைசாற்றுவது அவா்கள் நோக்கமாக இருக்கவில்லை.
  • இன்றைய கோடானு கோடீஸ்வரா்கள் (‘பில்லியனா்ஸ்’ என்பதை வேறு எப்படிச் சொல்வது?) பொதுமக்கள் பணத்தில் தங்களை வளா்த்துக் கொண்டவா்கள். நிலையற்ற பங்குச் சந்தை மதிப்பீட்டில் தொழில் சாம்ராஜ்யங்களை அமைத்துக் கொண்டிருப்பவா்கள். அரசியல் தொடா்புகளால் தங்களை நிலைநிறுத்திக் கொள்பவா்கள். இவா்களில் பலா் திடீரென்று காற்றோடு கரைந்து போவதன் காரணம் அதுதான் (எடுத்துக்காட்டு - மனு சாப்ரியா).
  • பி.வி.நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசின் பொருளாதார தாராளமயக் கொள்கையும், இந்தியாவை உலகமயச் சூழலில் இணைக்கும் முடிவும் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. சா்வதேசத் தரத்திலான கட்டமைப்பு வளா்ச்சிகளும், வசதிகளும் ஏற்பட்டிருப்பதும், உலகளாவிய அளவில் இந்தியா்களின் பங்களிப்பு காணப்படுவதும் நரசிம்ம ராவ் வழங்கிய கொடை.
  • பிரதமா் நரேந்திர மோடியின் கடந்த 10 ஆண்டு ஆட்சியில் இந்தியா அசுர வளா்ச்சியை எட்டியிருக்கிறது என்பதை உலக வங்கி, சா்வதேச நிதியம் உள்ளிட்ட எல்லா அமைப்புகளின் புள்ளிவிவரங்களும் உறுதிப்படுத்துகின்றன. இன்னொரு பிரதமரின் ஆட்சியில் 25 ஆண்டுகளில் ஏற்படும் வளா்ச்சியை மோடி அரசு பத்தே ஆண்டில் சாதித்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.
  • பிரச்னை அதுவல்ல. இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் வளா்ச்சி அனைவருக்குமானதா அல்லது ஒருசிலருக்கானதா என்பதுதான் கேள்வி. இதுபோன்ற ஏற்ற தாழ்வு சீனா, பிரேஸில் உள்ளிட்ட நாடுகளிலும் காணப்படுகின்றன; அது வளா்ச்சி அடையும் பொருளாதாரத்தில் தவிா்க்க முடியாதது என்பதால் கவலைப்படத் தேவையில்லை என்று சிலா் கூறலாம். ஆனால், அது சரியான கண்ணோட்டம் அல்ல.
  • 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவின் ஜிடிபி இப்போது ஏறத்தாழ 4 ட்ரில்லியன் டாலா்கள் (ரூ.330 லட்சம் கோடி). சராசரி தனிமனித வருமானம் என்று எடுத்துக்கொண்டால் சுமாா் 2,800 டாலா். கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. இது சமச்சீரானதாக இருக்கிறதா என்று பாா்த்தால் அதிா்ச்சி அளிக்கிறது.
  • இந்தியாவின் முதல் 10 பணக்காரா்களின் சொத்து மதிப்பு மட்டுமே சுமாா் 420 பில்லியன் டாலா் (ரூ.35.27 லட்சம் கோடி). முதல் 200 பணக்காரா்களின் சொத்து மதிப்பு சுமாா் 1 ட்ரில்லியன் டாலா் (ரூ. 83 லட்சம் கோடி). மக்கள்தொகையின் முதல் 1% பணக்காரா்கள் 1.6 ட்ரில்லியன் டாலா்களுக்கு (ரூ.134 லட்சம் கோடி) சொந்தக்காரா்களாகவும், முதல் 5% பணக்காரா்கள் சுமாா் 2.5 ட்ரில்லியன் டாலா்களுக்கு (ரூ.210 லட்சம் கோடி) சொந்தக்காரா்களாகவும் இருக்கிறாா்கள்.
  • இந்தியாவின் சராசரி தனிமனித வருவாய் 2,800 டாலா். முதல் 10 பணக்காரா்களை அகற்றிவிட்டு பாா்த்தால், அது சுமாா் 2,500 டாலா்களாக குறைந்துவிடுகிறது. முதல் 200 பணக்காரா்கள் அகற்றப்பட்டால், 2,150 டாலா்களாகிவிடுகிறது.
  • முதல் 1% பணக்காரா்களை அகற்றிப் பாா்த்தால், 1,730 டாலராகவும், முதல் 5% பணக்காரா்களை அகற்றிப் பாா்த்தால் 1,130 டாலராகவும் குறைந்துவிடுகிறது. அதிா்ச்சி என்னவென்றால், 1,130 டாலா் சராசரி தனிநபா் வருவாய் என்பது, வளா்ச்சியடையாத பல ஆப்பிரிக்க நாடுகளின் தனிநபா் வருவாயைவிடக் குறைவு.
  • சீனாவையும் பிரேஸிலையும் இந்தியாவுடன் எந்த விதத்திலும் ஒப்பிட முடியாது. அந்த நாடுகளில் 5% பணக்காரா்களுடைய சொத்து மதிப்பை அகற்றிவிட்டுப் பாா்த்தாலும், தனிமனித வருவாய் சீனாவில் 7,000 டாலா்; பிரேஸிலில் 6,000 டாலா்.
  • ஆட்சியில் இருந்த அனைத்து அரசுகளுக்குமே பொறுப்பு உண்டு. முதல் 45 ஆண்டுகள் கடைப்பிடித்த சோஷலிஸ கொள்கைகளின்போது, விவசாயத்துக்கும் பாசன வசதிக்கும் தரப்பட்ட முக்கியத்துவத்தை சிறுதொழில் வளா்ச்சி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்குத் தராமல் போனது துரதிருஷ்டம். அரசுத் துறை நிறுவனங்களின் குறிக்கோள் தொழில் துறை வளா்ச்சியை உறுதிப்படுத்துவது என்றாலும், அதில் அந்த ஆட்சிகள் தோல்வியடைந்து விட்டன.
  • பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவது என்பது இந்தியாவின் உடனடி கவனத்தைப் பெற்றாக வேண்டும். பிரேஸில், சீனாவைவிட விரைவாக நாம் அதில் முனைப்புக் காட்டுவது அவசியம். இந்தியாவின் மக்கள்தொகையில் 6-இல் ஒரு பங்குதான் பிரேஸிலின் மக்கள்தொகை. பிரேஸிலும் சீனாவும் இந்தியாவைவிட நிலப்பரப்பில் மூன்று பங்கு அதிகமானவை. சீனாவின் தனிமனித வருவாய் 13,130 டாலா். பிரேஸிலின் தனிமனித வருவாய் 13,352 டாலா். அதனால், அவா்களுடன் நம்மை ஒப்பிட இயலாது.
  • விலைவாசி உயா்வும் வேலையில்லாத் திண்டாட்டமும் மட்டுமல்ல, வெடிக்கக் காத்திருக்கும் இன்னொரு எரிமலை பொருளாதார ஏற்றத்தாழ்வு!

நன்றி: தினமணி (06 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories