TNPSC Thervupettagam

வெடிவிபத்துகளுக்கு முற்றுப்புள்ளி...

May 14 , 2024 248 days 193 0
  • விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் கடந்த வியாழக்கிழமை (மே 9) ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்திருப்பது வர்ணிக்க இயலாத பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களில் ஒரு பெண் உள்பட 4 பேர் 35 வயதுக்குள்பட்டவர்கள். அந்த ஆலையில் இருந்த 15 அறைகளில் 8 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகிவிட்டன.
  • இந்தச் சுவடு மறைவதற்குள் அதே சிவகாசியில் நாரணாபுரம் என்ற இடத்தில் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் கடந்த சனிக்கிழமை (மே 11) காலை 6.15 மணியளவில் வெடிமருந்து இருப்பு வைத்திருந்த அறையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் மூன்று அறைகள் இடிந்து தரைமட்டமாகின. காலை நேரம் என்பதால், யாரும் பணிக்கு வராததால் அதிருஷ்டவசமாக உயிரிழப்புகள் நேரவில்லை.
  • தீபாவளி, வழிபாட்டுத் தலங்களில் நடைபெறும் விழாக்கள், அரசியல் கட்சியினரின் வெற்றிக் கொண்டாட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளின்போது நாம் பட்டாசு வெடித்து மகிழ்வதற்காக ஏராளமான இன்னுயிர்கள் தொடர்ந்து பலியாகி வருவது வருத்தத்துக்கு உரியதாகும். இதுபோன்ற விபத்துகள் தமிழகத்திலும், மற்ற மாநிலங்களிலும் தொடர் நிகழ்வாகவே உள்ளன.
  • விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்துள்ள வெம்பக்கோட்டை அருகே உள்ள ராமுத்தேவன்பட்டியில் 55 அறைகளில் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் கடந்த பிப். 17-ஆம் தேதி ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பெண்கள் உள்பட 11 பேர் பலியாயினர்.
  • கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே அத்திப்பள்ளியில் இருந்த பட்டாசுக் கடையில் பட்டாசுகளைக் கடந்த ஆண்டு அக்.7-ஆம் தேதி இறக்கிவைக்கும்போது பட்டாசுகள் வெடித்ததில் 16 பேரும், அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே விரகாலூர் கிராமத்தில் பட்டாசு விபத்தில் 12 பேரும் உயிரிழந்தனர்.
  • முன்னதாக, காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை அருகே வளத்தோட்டம் கிராமத்தில் கடந்த ஆண்டு மார்ச் 22-ஆம் தேதி நிகழ்ந்த விபத்தில் 9 பேரும், கிருஷ்ணகிரி பழையபேட்டையில் கடந்த ஆண்டு ஜூலை 29-ஆம் தேதி நிகழ்ந்த விபத்தில் ஆலை உரிமையாளர், அவரது மகன், மகள் உள்பட 9 பேரும் உயிரிழந்தனர்.
  • அதற்கும் முன்னர், சிவகாசி ஓம்சக்தி பட்டாசுத் தொழிற்சாலையில் கடந்த 2012-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி நிகழ்ந்த விபத்தில் 38 பேரும், சிவகாசி அருகே அச்சங்குளத்தில் 2021 பிப். 12-இல் 23 பேரும் உயிரிழந்தது நாட்டையே உலுக்கின.
  • மத்திய பிரதேச மாநிலம், ஹர்தா மாவட்டத்தில் உள்ள பைராகர் கிராமத்தில் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் கடந்த பிப். 6-ஆம் தேதி பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் 11 பேரும், உத்தர பிரதேச மாநிலம், கௌசாம்பி மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் கடந்த பிப். 25-ஆம் தேதி நிகழ்ந்த வெடிவிபத்தில் ஏழு பேரும் உயிரிழந்தனர்.
  • மற்ற பல தொழில்களைப்போல இல்லாமல் பட்டாசு தயாரிப்புத் தொழில் அபாயகரமானதாகும். ஒரு சிறு தீப்பொறியும் பலர் உயிரிழக்கக் காரணமாகி விடுகிறது.
  • தமிழகத்தில் 1,500-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கிவருகின்றன. இவற்றில் சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். இதில் கணிசமான எண்ணிக்கையில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தாங்கள் வருவாய் ஈட்டினால்தான் உணவுக்கே வழி என்பதால்தான் ஏழை எளிய மக்கள் உயிரைப் பணயம்வைத்து இந்தத் தொழிலில் ஈடுபடுகின்றனர். வெடிவிபத்துகளின்போது உயிரிழப்பவர்களின் குடும்பங்கள் நிர்க்கதியாகின்றன. உயிரிழப்பவர்கள் ஒருபுறம் என்றால் காயமடைந்தவர்களின் நிலை மிகவும் பரிதாபம். வாழ்நாள் முழுதும் உடல்ரீதியான பாதிப்பு என்ற வேதனையை சுமக்கின்றனர்.
  • பட்டாசு ஆலைகள் அதிகம் இயங்கும் விருதுநகர், அரியலூர் போன்ற மாவட்டங்களில் விவசாயமும், வேறு தொழில்களும் பெரிய அளவில் இல்லாததும் பெண்களும், முதியோரும்கூட இந்தத் தொழிலுக்கு வருவதற்கு முக்கிய காரணமாகும்.
  • பட்டாசு ஆலை அமைக்க உரிமம் பெறுபவர்கள் அறைகளை சட்டவிரோதமாக உள்வாடகைக்கு விடுதல், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக ரசாயனப் பொருள்களை இருப்பு வைத்தல், ஒரு குறிப்பிட்ட இடத்தில் அனுமதிக்கப்பட்டதைவிட கூடுதல் தொழிலாளர்களைப் பணியில் ஈடுபடுத்துதல், தேவையான அளவுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் இருத்தல் போன்ற விதிமீறல்களைக் கட்டுப்படுத்தினாலே ஓரளவுக்கு இதுபோன்ற விபத்துகள் குறையும்.
  • இதுபோன்ற வெடிவிபத்துகள் நடக்கும்போது, இறந்தவர்கள், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையாக சில லட்சம் ரூபாயை மத்திய, மாநில அரசுகள் வழங்குகின்றன. முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவிக்கின்றனர். அத்துடன் இதுபோன்ற சம்பவங்கள் மறக்கப்படுகின்றன.
  • ஒவ்வொரு விபத்தின்போதும் உடனடியாக ஆய்வு மேற்கொள்ளும் அரசு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஆலை விதிமுறைகளை மீறி செயல்பட்டது என்றும் இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க விதிமுறைகள் கடுமையாக்கப்படும் என்றும் கூறுவதும் தொடர்கிறது.
  • விருதுநகர் மாவட்டத்தில் சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் விதிகளை மீறி பட்டாசு தயாரிப்பில் ஈடுபடும் ஆலைகளைக் கண்டறிய நான்கு சிறப்பு நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன எனவும், அந்தக் குழுக்கள் ஆய்வு செய்து தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் விதிமீறும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் அறிவித்துள்ளார்.
  • அவரது உத்தரவாதத்தின்படி, ஆலைகளில் விரைந்து சோதனை நடத்தப்பட்டு விதிமீறல்கள் இருந்தால் உரிமத்தை ரத்து செய்வது, குறிப்பிட்ட காலகட்டத்தில் முறையாக ஆய்வு மேற்கொள்ளாத அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை போன்றவை காலத்தின் கட்டாயம் ஆகும்.
  • பட்டாசு ஆலைகளில் பணிபுரிவோரின் இன்னுயிர்களைக் காப்பது ஆலை உரிமையாளர்கள், அரசின் கடமையாகும்.

நன்றி: தினமணி (14 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories