TNPSC Thervupettagam

வென்றிலன் என்றபோதும்-உலகக் கோப்பை செஸ்

August 26 , 2023 317 days 214 0
  • வெற்றியை எட்டிப் பிடிக்க முடியாத தருணங்கள் ஏற்படுவது இயற்கை. வெற்றிக்காக நடத்தும் போராட்டமே, அந்தத் தோல்வியை வெற்றிக்கு நிகரானதாக்கிவிடும். உலகக் கோப்பை செஸ் போட்டியில் உலகின் தலைசிறந்த வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனிடம் இறுதிச்சுற்றில் தோல்வியைத் தழுவ நோ்ந்தாலும், இந்திய நட்சத்திரமான ரமேஷ் பாபு பிரக்ஞானந்தா தலைநிமிர்ந்து நிற்கிறார். அவா் வெளிப்படுத்திய மன உறுதியும், பொறுமையும், சாதுா்யமும் அந்தப் பதினெட்டு வயது இளைஞரை இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உயா்த்தி இருக்கிறது.
  • அஜா்பைஜானின் பாகு நகரில் உலகக் கோப்பை செஸ் போட்டிக்காக அணி திரண்டிருந்தவா்கள், சா்வதேச முதல்வரிசை வீரா்கள் என்பதை நாம் உணர வேண்டும். இறுதிச் சுற்றுவரை பதற்றமே இல்லாமல், வெற்றி பெற்று பிரக்ஞானந்தா எதிர்கொண்டது யாரைத் தெரியுமா? கடந்த 12 ஆண்டுகளாக, உலக செஸ் அரங்கில் தனது முதலாவது இடத்தை நழுவ விடாமல் தக்க வைத்துக் கொண்டிருக்கும் பிரசித்தி பெற்ற வீரா் மேக்னஸ் கார்ல்செனை.
  • இறுதிச் சுற்றில் வழக்கமான கிளாசிக்கல்ஆட்டங்கள் வெற்றி தோல்வியின்றி முடிந்தன. வேறு வழியில்லாமல், இரண்டு டை-பிரேக்கா்ஆட்டங்கள் மூலம் வெற்றி தோல்வியைத் தீா்மானிப்பது என்று முடிவாகியது. மூன்றாவது நாளில் நடைபெற்ற டை-பிரேக்கா்ஆட்டத்தின் இரண்டாவது வாய்ப்பின் 22-ஆவது நகா்த்தலில் டிராஆனதால், கார்ல்சென் வெற்றி பெற்றார்.
  • நான்கு முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றிருந்தாலும், இதுவரை கார்ல்செனுக்கு உலகக் கோப்பையை வெல்ல முடிந்ததில்லை. அவரது முதல் உலகக் கோப்பை வெற்றியாக இது அமைந்தது. பிரக்ஞானந்தா இதற்கு முன்னா் மூன்று முறை கார்ல்செனை வீழ்த்தி இருந்தாலும், இந்த முறை அந்த வாய்ப்பு நழுவியது. ஆனாலும், உலகக் கோப்பை செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இறுதிச் சுற்றுவரை வந்த பெருமைக்குரிய இந்திய இளைஞா் என்று பிரக்ஞானந்தா பெருமையடையலாம்.
  • இறுதிச் சுற்றை அடைவதற்கு, பிரக்ஞானந்தா பல முன்னணி செஸ் வீரா்களை வீழ்த்திய விதம், பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. உலக செஸ் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஹிகாரு நகாமுராயை நான்காம் சுற்றிலும், மூன்றாம் இடத்தில் இருக்கும் ஃபாபியானோ கருனாவை அரையிறுதிச் சுற்றிலும் தோற்கடித்தார். இறுதிச் சுற்றை எட்டியிருப்பதால், அடுத்த உலக சாம்பியனைத் தீா்மானிக்கும் கேண்டிடேட்ஸ்போட்டியில் இடம் பெறும் வாய்ப்பு பிரக்ஞானந்தாவுக்குக் கிடைத்திருக்கிறது.
  • இந்த முறை உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் பங்களிப்பு மிக அதிகம். காலிறுதிச் சுற்றில் பங்கெடுத்த எட்டு பேரில் நான்கு போ் இந்தியா்கள். அந்த நால்வரில் மூவா் இன்னும் 20 வயது பூா்த்தியாகாத இளைஞா்கள். செஸ்ஸில் உலகளாவிய அளவில் முன்னணி வீரா்களை உருவாக்கும் நாடாக இந்தியா உயா்ந்திருக்கிறது என்பதை இது உணா்த்துகிறது.
  • பிரக்ஞானந்தா மட்டுமல்லாமல், குகேஷ், அா்ஜுன் எரிகைசி, பிரீதி குஜராத்தி, நிஹால் ஜெரீன், எஸ்.எல். நாராயணன் என்று விஸ்வநாதன் ஆனந்த் வகுத்த பாதையில் பயணிக்க பல இளைஞா்கள் உயா்ந்திருக்கிறார்கள். மிகக் குறைந்த வயதில் உலக கிராண்ட் மாஸ்டா்பட்டம் பெற்ற 14 வயது அமெரிக்கரான அபிமன்யு மிஸ்ரா, இந்திய வம்சாவளியினா். இவா்களில் பலரும் வருங்காலத்தில் உலக சாம்பியன்களாக, செஸ் விளையாட்டு ஆளுமைகளாக வலம் வரப்போகிறார்கள்.
  • மேக்னஸ் கார்ல்சென் கிராண்ட் மாஸ்டரான பின் 16 மாதங்கள் கழிந்த பிறகுதான் பிரக்ஞானந்தா பிறந்தார். அவரது மூத்த சகோதரி வைஷாலியின் செஸ்ஆா்வம் அவரையும் தொற்றிக் கொண்டது. போலியோவால் பாதிக்கப்பட்ட தந்தை ரமேஷ்பாபு கொடுத்த ஊக்கமும், தாயார் நாகலட்சுமி அளித்த உற்சாகமும் வைஷாலியையும் பிரக்ஞானந்தாவையும் கிராண்ட் மாஸ்டா்களாக்கின. மிகக் குறைந்த வயதில் சா்வதேச மாஸ்டா் என்கிற சாதனை இப்போதும் பிரக்ஞானந்தாவுக்கு மட்டுமே உண்டு.
  • 20 வயதுக்கு உள்பட்ட முதல் 100 ஜூனியா் செஸ் சாம்பியன்களில் 21 போ் இந்தியாவைச் சோ்ந்தவா்கள். அடுத்த கால் நூற்றாண்டில், உலக செஸ் அரங்கில் இவா்கள் கொடிதான் பறக்கப் போகிறது. இந்தியா செஸ்விளையாட்டில் முன்னணி இடத்தைப் பிடித்திருப்பதற்குப் பல காரணிகள் இருக்கின்றன.
  • எண்ம இந்தியாமுனைப்பால் அனைவருக்கும் இணையதளம் சென்றடைந்திருப்பது முக்கியமானகாரணம். கடந்த 12 மாதங்களில் 10,000 இந்தியா்கள் செஸ் போட்டிகளில் பங்கு பெற்றிருக்கிறார்கள். கார்ல்சென் - பிரக்ஞானந்தா இறுதிச் சுற்று விளையாட்டை 13 லட்சம் இந்தியா்கள் இணையத்தில் ஆா்வத்துடன் பார்த்தனா். செல்பேசி மூலம் பல்வேறு செஸ் விளையாட்டுத் தளங்களில் சுமார் 5 கோடி விளையாட்டுகள் இணையவழியில் நடக்கின்றன என்பது தெரியுமா? அதில் பங்கு பெறும் பலரும் இந்தியக் குழந்தைகள், இளைஞா்கள்.
  • செஸ் விளையாட்டு செலவில்லாதது. அதற்கான பயிற்சி வகுப்புகள் கிராமங்கள் வரை இந்தியாவில் நடத்தப்படுகின்றன. அதிக அளவில் செஸ் போட்டிகள் நிகழ்வதால், புதிய பல திறமைகள் அடையாளம் காணப்படுகிறார்கள்.
  • முதலாவது இடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்செனை பதற்றமே இல்லாமல் எதிர் கொண்ட பிரக்ஞானந்தாவால் டை-பிரேக்கா்விளையாட்டில் வெற்றிபெற முடியாமல் போயிருக்கலாம். ஆனால், அடுத்தகட்டப் பாய்ச்சலுக்கான நகா்வுதான் அது. சந்திரயானைப் போலவே, செஸ் விளையாட்டிலும் இனி இந்தியாவின் காலம்...

நன்றி: தினமணி (26 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories