TNPSC Thervupettagam

வெப்ப அலை.. கவனம்!

April 30 , 2024 271 days 287 0
  • முன்னெப்போதும் இல்லாத வகையில், கத்திரி வெயில் தொடங்கும் முன்பே தமிழகத்திலும், நாட்டின் மற்ற பகுதிகளிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. கடந்த 15 நாள்களுக்கும் மேலாகவே தமிழகத்தின் 10-க்கும் மேற்பட்ட நகரங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேலாக பதிவாகி வருகிறது.
  • கடந்த சில நாள்களுக்கு முன்னர், நாட்டிலேயே அதிகபட்சமாக ஒடிஸா மாநிலம் புவனேசுவரம், ஆந்திர மாநிலம் கடப்பா ஆகிய நகரங்களில் 111 டிகிரி பதிவான நிலையில் அடுத்த அதிகபட்சமாக சேலத்தில் 109 டிகிரி பதிவானது. அதேபோன்று ஈரோடு நகரிலும் சில நாள்கள் 109 டிகிரி பதிவாகி உள்ளது.
  • சேலம், ஈரோடு போன்ற நகரங்களாவது வெயிலுக்குப் பெயர் பெற்றவை. வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படாத கோவையில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாகவே 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. கோடைக் காலத்தில் வெப்பம் அதிக ரிக்கும்போது குளுமையாக இருக்கும் உதகை, ஏற்காடு, கொடைக் கானல் போன்ற ஊர்களை நோக்கி மக்கள் படையெடுப்பது வழக்கம். இப்போது இந்த ஊர்களும் வெப்பத்தின் பிடியில் சிக்கி உள்ளன.
  • கடந்த 1951-ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்.28) உதகையில் வெப்ப நிலை 84.2 டிகிரி பதிவாகி உள்ளது. நண்பகலில் மக்கள் தேவையின்றி வெளியே நடமாட வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது.
  • குளுமைக்குப் பெயர்பெற்ற மற்றோர் ஊரான ஏற்காட்டில் முதல் முறையாக மின்விசிறி பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். தமிழகத் துக்கு இந்த முறை கோடை மழையும் கைகொடுக்கவில்லை. வழக்கமாக கோடைக்கால பருவமழை 53.3 மி.மீ. பதிவாக வேண்டிய நிலையில், இந்த ஆண்டு 9.4 மி.மீ. அளவே மழை பெய்துள்ளது. இது வழக்கத்தைவிட 83 சதவீதம் குறைவாகும்.
  • ஒருபுறம் மனிதர்கள் வெயிலால் அவதிப்படும் நிலையில், போது மான மழைப் பொழிவு இல்லாதது, கடும் வெயில் போன்றவற்றால் வனப் பகுதிகளில் பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டுவிட்டன. பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் இருந்து 20 யானைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. வனங்களில் வறட்சி காரணமாக, யானை உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர், உணவு தேடி நகரங்களுக்குள் நுழைவதால் மக்கள் கடும் அச்சத்துக்கு ஆளாகும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
  • இந்த வெப்பச் சூழல் உடனடியாக மாறும் என்ற நிலையும் இல்லை. பல நகரங்களில் திங்கள்கிழமை (ஏப். 29) முதல் மே 2-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு 109 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக் கும் என்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
  • பஞ்சாப், ஹரியாணா, தில்லி போன்ற மாநிலங்களில்தான் வெப்ப அலை வீசுவது வழக்கம். ஆனால், தமிழகத்தில் முதல்முறையாக வெப்ப அலை வீசத் தொடங்கி உள்ளது. இந்த நிலை, மே மாத கடைசி வரை நீடிக்க வாய்ப்புள்ளது. எந்த இடமும் விதிவிலக்கு இல்லாமல் இப்படி வெயில் சுட்டெரிப்பதற்கான காரணங்கள் பருவ நிலை மாற்றமா அல்லது வேறு ஏதாவதா என்பது ஆய்வுக்குப் பின்னரே தெரியவரும்.
  • எதிர்பாராத இந்த வெப்பம், உடல் ரீதியாக பலவிதமான பாதிப்பு களை உண்டாக்கும். நீர்ச்சத்து இழப்பால் நாக்கு வறண்டுபோதல், சிறுநீர் அடர் மஞ்சளாக இருத்தல், தசைப்பிடிப்பு, தலைசுற்றல், கை கால் தளர்வு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. சின்னம்மை, தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, அக்கி, ருமாடிக் காய்ச்சல் போன்ற நோய்களாலும் பாதிக்கப்படலாம். நீர்ச்சத்து குறைந்தால் சிறுநீரகங்கள், இதயத்தின் செயல்பாடு பாதிப்படையும். உடனடியாக சிகிச்சை எடுக்காவிட்டால் உயிரிழப்புகூட ஏற்படலாம்.
  • இந்த வெப்பச் சூழலை எதிர்கொள்ள அரசும் பல்வேறு நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்களுக்குத் தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
  • நீர்ச்சத்து குறைபாட்டைப் போக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் 15 முதல் 25 மையங்கள் என 46 சுகாதார மாவட்டங்களில் 1000 மையங்களை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டு களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்கள் ஜூன் 30-ஆம் தேதி வரை செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அதேபோன்று, தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் 1,038 இடங்களிலும் பேரூராட்சிகள் உள்ளிட்ட 842 இடங்களிலும் அரசு சார்பில் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பல்வேறு அரசியல் கட்சியினரும் தங் களால் இயன்ற அளவு தண்ணீர்ப் பந்தல்கள் அமைத்து வருகின்றனர்.
  • இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பொதுமக்கள்தான் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ள வேண்டும். அத்தியாவசிய தேவை இல்லாத பட்சத்தில் நண்பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும். உடலின் தேவையை அறிந்து அதிகம் தண்ணீர் அருந்த வேண்டும்.
  • தண்ணீருடன் இளநீர், மோர், பழச்சாறு ஆகியவற்றை அருந்தலாம். குளிர்ந்த நீர், செயற்கை பானங்கள், மது பானங்களை அறவே தவிர்க்க வேண்டும். தினசரி இரு முறை குளிக்கலாம். தளர்வான பருத்தி ஆடைகளை அணியலாம். எண்ணெய், கொழுப்பு வகை உணவுகளைத் தவிர்க்கலாம்.
  • கடும் வெப்பம் காரணமாக, கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத் தில் 90 வயது மூதாட்டி ஒருவரும், கண்ணூர் மாவட்டத்தில் 53 வயது ஆண் ஒருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு வெயிலில் இருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்வோம்.

நன்றி: தினமணி (30 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories