TNPSC Thervupettagam

வெப்ப அலைப் பேரிடர்: நம்பிக்கை அளிக்கும் அறிவிப்பு

November 4 , 2024 60 days 214 0

வெப்ப அலைப் பேரிடர்: நம்பிக்கை அளிக்கும் அறிவிப்பு

  • வெப்ப அலையை மாநிலப் பேரிடராக அங்கீகரித்து, வெப்ப அலையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது வரவேற்புக்குரிய நடவடிக்கை.
  • கோடைக்காலமான ஏப்ரல், மே மாதங்களில் வெப்பநிலை அதிகமாகப் பதிவாகும் நாள்களில் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலை வீசுகிறது. வெப்ப அலை வீசும் நாள்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. இந்நிலையில், வெப்ப அலை மாநிலப் பேரிடராக அறிவிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் கடந்த ஜூன் மாதத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பைச் செயல்படுத்த தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையர் அரசுக்கு அனுப்பிய கருத்துருவில் இந்தஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் 16 நகரங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கரூரில் 44 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. ஈரோட்டில் 31 நாள்கள், கரூரில் 26 நாள்கள்,வேலூரில் 23 நாள்கள், தலைநகர் சென்னையில் 6 நாள்கள் 40 டிகிரி செல்சியஸுக்குமேல் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிக வெப்பநிலை நாள்களில் வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக உள்ளது. முதியோர், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள், திறந்த வெளியில் வேலை செய்பவர்கள் ஆகியோரின் அன்றாட வாழ்க்கைபெரிதும் பாதிக்கப்படுகிறது. அவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது.
  • மேற்கண்ட கருத்துருவைப் பரிசீலித்த அரசு, வெப்ப அலையை மாநிலப் பேரிடராக அறிவித்துள்ளது. மேலும், வெப்ப அலை பாதிப்புகளைத் தடுப்பதற்கும் எதிர்கொள்வதற்குமான மருத்துவ வசதிகள், ஓ.ஆர்.எஸ் நீர்க்கரைசல் வழங்குதல், குடிநீர்ப் பந்தல்களை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கும் மாநிலப் பேரிடர்நிதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு,வெப்ப அலையின் கொடுமையிலிருந்து மக்களைக் காப்பதற்கும் பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்படுவதற்கும் பெரிதும் உதவும் என்று நம்பலாம்.
  • காலநிலை மாற்றம், புவிவெப்பமாதல் போன்றவற்றின் கொடிய பாதிப்புகளைத் தடுக்க சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த நீண்ட கால நடவடிக்கைகள் அவசியம்; அவசரமும்கூட. சர்வதேச வானிலை ஆய்வு மையம் 2023ஆம் ஆண்டை இதுவரை பதிவான மிக வெப்பமயமான ஆண்டாக அறிவித்துள்ளது. வெப்ப அலையின் பாதிப்புகள் குறித்த ஆய்வு ஒன்றில், மிகத் தீவிரமான வெப்ப அலை பாதிப்புகள் இந்தியாவின் கங்கை மற்றும் சிந்து நதிக் கரைகளின் வேளாண் பகுதிகளில் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • மனித உடலின் வெப்பநிலை 37 டிகிரி செல்ஷியஸ் ஆகத் தக்கவைக்கப்பட வேண்டும். அதற்கு அதிகமான வெப்பநிலைக்குத் தொடர்ந்து ஆட்படுவது உடல் செயல்பாடுகள், முக்கிய உடல் உறுப்புகள் ஆகியவற்றைப் பாதிப்பதோடு, உயிரிழப்புக்கும் வழிவகுக்கும். நீண்ட கடலோர எல்லைப் பகுதிகளைக் கொண்டுள்ளதமிழ்நாடு கோடைக்காலத்தில் ஈரப்பதம் அதிகரிப்பதனால் ஏற்படும் பாதிப்புகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. வெப்பத்துடன் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் ஈரக்குமிழ் வெப்பநிலை புவிவெப்பமாதலின் விளைவாக 35 டிகிரி செல்ஷியஸை அடைந்துவிடும் என்று உலகப் பொருளாதார மன்றம் எச்சரித்துள்ளது. அந்த அளவைக் கடந்துவிட்டதால், வியர்வையை வெளியேற்றுவதன் மூலம் உடல் வெப்பத்தைத் தணிப்பதும் சாத்தியமற்றதாகிவிடும்.
  • கடுமையான இயற்கை நிகழ்வுகள் தவிர்க்க முடியாதவையாக ஆகிவிட்டதை உணர்ந்து வெப்ப அலையைப் பேரிடராக அங்கீகரிக்கும் அறிவிப்பைத் தமிழ்நாடுஅரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பிற மாநில அரசுகளும் இதைப் பின்பற்றவேண்டும். வெப்ப அலையின் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான திட்டங்கள் தேசிய அளவிலும் செயல்படுத்தப்பட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (04 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories