- வெப்ப அலையின் தாக்கம், பவளத்திட்டுகளையும் விட்டு வைக்கவில்லை. உலக அளவில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு பவளத்திட்டுகள் நிறமிழப்புக்கு உள்ளாகியுள்ளன. நிறமிழப்பு என்பது அவற்றின் மரித்தல் நிகழ்வுதான். கடலில் வாழும் அனிமோன், சொறி மீன்போல பாலிப் என்பதும் ஒரு வகை குழிமெல்லுடலி.
- இது கடல் நீரில் உள்ள சுண்ணாம்பை எடுத்துக்கொண்டு, கடினமான பவளத்திட்டாக மாறுகிறது. இது நுண்ணுயிர்களை உண்டு வாழும். பாலிப் இறந்த பின்னர், பவளத்திட்டும் உயிரற்ற பவளத்திட்டு ஆகிவிடும். இதன் மீது ஒட்டிக்கொண்டு வாழும் பாசிகள் மட்டுமே நம் கண்களுக்குத் தெரிந்தாலும், நான்கில் ஒரு பங்கு கடல்வாழ் உயிரினங்களுக்குப் பவளத் திட்டுகளே வாழ்விடமாக உள்ளன.
- மிதமான தட்பவெப்பம் கொண்ட கடல் பகுதியில் மட்டுமே பவளத்திட்டுகள் காணப்படும். வெப்பநிலையில் ஏற்பட்ட அதிகப்படியான உயர்வால் 2023 பிப்ரவரியிலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளில் பவளத்திட்டுகளின் மீது இருந்த பாசிகளும் மரித்து, வெளிறிப்போய் வெள்ளை நிறத்துக்கு மாறியுள்ளன.
- ஆஸ்திரேலியா, கென்யா, மெக்ஸிகோ உள்பட 54க்கும் மேற்பட்ட நாடுகளைச் சுற்றியுள்ள கடல்களில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயுள்ள மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள பவளத்திட்டுகளும் இப்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. பவளத்திட்டு வெளிறும் நிகழ்வுகளில், உலகம் எதிர்கொள்ளும் நான்காவது மிகப் பெரிய நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: இந்து தமிழ் திசை (26 – 05 – 2024)