TNPSC Thervupettagam

வெப்பத்தை சமாளிக்க விதிமுறைகள்

April 4 , 2024 281 days 269 0
  • உலகெங்கும் அதிகரித்து வரும் வெப்பம் மற்றும் அதனால் ஏற்படும் வெப்ப அலைகளின் தாக்கம் இந்திய நகரங்களில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.  கட்டமைப்பை மாற்றியமைக்க இயலாத பெருநகரங்களில்  காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் உத்திகளுடன் கூடிய வாழ்வாதார மேம்பாட்டு கொள்கைகளும் வேகமான மக்கள்தொகை வளர்ச்சி கொண்ட சிறு நகரங்களில்  வெப்ப தடுப்பு நடவடிக்கைகளும் தேவைப்படுகின்றன.
  • வெப்பத் தீவுகளாக உருவெடுக்கும் பெரு நகரங்களின் கட்டமைப்புகளில் மறுசீரமைப்பு தேவைப்படும் நிலையில் சிறு நகரங்களுக்கு கால மாற்றம் ஏற்படுத்தும் வெப்பத்தை சமாளிக்கும் வகையில் பெருந்திட்டமும் (மாஸ்டர் பிளான்) அதற்கான விதிமுறைகளும் தேவைப்படுகின்றன.
  • மனிதன் உருவாக்கிய உட்கட்டமைப்பையும் இந்த கட்டமைப்பு ஏற்படுத்தும் விளைவுகளின் செயல்பாடுகளையும் ஒருங்கே கொண்ட தனித்துவமான அமைப்பினை ஒவ்வொரு நகரமும் கொண்டுள்ளது. நெருக்கமாக நிரம்பிய கட்டடங்களைக் கொண்ட நகரங்களில் குறுகிய பயணம் வாகன உமிழ்வினையும் காற்று மாசுபாட்டையும் குறைத்தாலும் கட்டட அடர்த்தி வெப்பத்தினை அதிகரிக்கச் செய்யும்.
  • நீர்நிலைகளை கொண்ட பசுமையான சுற்றுச்சூழல் கரிம உமிழ்வை கட்டுப்படுத்தி நகரில் குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தும். பசுமையான சுற்றுச்சூழல், நீர்நிலைகள், கட்டடங்கள் ஆகியவற்றின் கலவையானது நகர்ப்புற வடிவத்தினைத் தீர்மானிக்கிறது. வெப்பத்தை எதிர்க்கும் தன்மை கொண்ட நன்கு வடிவமைக்கப்பட்ட நகர்ப்புற வடிவம் மக்களின் வாழ்வாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • தில்லியில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் மையம் பல்வேறு நகர்ப்புற வடிவங்களில் வெப்ப தாக்கத்தினை ஏற்படுத்தும் காரணிகள் குறித்த ஆய்வை 2022 -ஆம் ஆண்டு முதல் புணே, தில்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஜெய்ப்பூர் உள்ளிட்ட 10 நகரங்களில் நடத்தி வருகிறது. இதுவரை இந்த ஆய்வில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இந்தியாவில் வெப்பத்தை எதிர்த்துப் போராட தொழில்நுட்பப் பயன்பாடும் பொது மக்களின் ஈடுபாடும் அவசியம் என தெரியவந்துள்ளது.
  • நகர்ப்புற வடிவத்தை இயற்பொருள் சார்ந்த அளவுருக்களான நகர வடிவமைப்பியல் (அர்பன் மார்பாலஜி), உருவ விகிதம் (ஆஸ்பெக்ட் ரேசியோ), ஆகாய பார்வை (ஸ்கை வியூ) காரணி, பசுமை உட்கட்டமைப்பு (கிரீன் இன்ப்ராஸ்ட்ரக்சர்), தளப்பரப்பு வீதம் (பிளோர் ஏரியா ரேசியோ) அல்லது தரை வெளி அடைவு தகவு (பிளோர் ஸ்பேஸ் இன்டெஸ்) மற்றும் தெரு திசையமைவு (ஸ்ட்ரீட் ஓரியன்டேசன்) ஆகியவற்றை கொண்டு எளிதில் அறிந்து கொள்ளலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
  • நகரங்களின் வடிவம், அமைப்பு பற்றிய நகர வடிவமைப்பியல் ஆய்வு அதிக வெப்பம் நிலவும் 49 இடங்களில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்படி குறைந்தளவு தாவரங்கள் சூழ்ந்த மூன்று தளங்களுக்கு மேல் உயரமான கட்டடங்களின் அடர்த்தி குறைந்த பகுதிகளிலும் தாவரங்களற்ற மூன்று தளங்களுக்கு மேல் ஏழு தளங்கள் வரை உயரமான கட்டிடங்களின் அடர்த்தியான பகுதிகளிலும் நில மேற்பரப்பு வெப்பநிலை 41.29 செல்சியஸ் முதல் 42.73 செல்சியஸ் வரை பதிவாகியிருந்தது.
  • அரிதாக தாவரங்கள் சூழ்ந்த சராசரி உயரம் உள்ள வீடுகள் மற்றும் தொழில் நிறுவன கட்டடங்கள் உள்ள பகுதியின் நில மேற்பரப்பு வெப்பநிலை மற்ற பகுதிகளை விட 2 முதல் 4 செல்சியஸ் அதிகமாயிருந்தது (45.26 செல்சியஸ் முதல் 46.75 செல்சியஸ் வரை) இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
  • கட்டடங்களின் வெப்பநிலைக்கு அதன் உயரமும் தெருவின் அகலமும் மிக முக்கிய காரணங்களாக இருக்கின்றன. கட்டடத்தின் உயரத்தையும் தெருவின் அகலத்தையும் சூரிய ஒளியின் அளவோடு ஒப்பிட்டு கணக்கிடப்படும் தோற்ற விகிதம் அதிகமாக இருந்தால் நில மேற்பரப்பு வெப்பநிலை குறைவாக இருக்கும் என்றும், தோற்ற விகிதத்தை 2-லிருந்து 1- ஆக குறைக்கும் போது நில மேற்பரப்பு வெப்பநிலை 40-இலிருந்து 46 -செல்சியஸôக உயரும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
  • தரையின் ஒரு புள்ளியிலிருந்து கட்டடங்களுக்கிடையே தெரியும் வானத்தின் அளவு கொண்டு நில மேற்பரப்பு வெப்பத்தினை தீர்மானிக்க முடியும். ஆகாய பார்வை காரணி என்று அழைக்கப்படும் இதன் அளவு 0 -க்கும் 1 -க்கும் இடையில் இருக்கும். ஆகாய பார்வை காரணியின் மதிப்பு 0.2 லிருந்து 0.9 வரை உயரும் போது நில மேற்பரப்பு வெப்பநிலை 10 செல்சியஸ் வரை உயரும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
  • நகர்ப்புறத்தின் நுட்பருவநிலையை (மைக்ரோக்ளைமேட்) மேம்படுத்துவதில் புல், புதர் மற்றும் அடர்த்தியான இலைகள் கொண்ட மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை ஒழுங்குபடுத்தி காற்றின் தரத்தை மேம்படுத்துகின்றன. இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கும் நகர்ப்புற வெப்ப தாக்கத்தின் விளைவைக் குறைப்பதற்கும் பயனுறு பசுமைச் சூழல் (எபெக்ட்டிவ் வெஜிடேடிவ் கவர்) என்ற கணக்கீடு முறை சிங்கப்பூர் நாட்டின் குடியிருப்புக் கட்டடங்களுக்கான பசுமை அடையாள திட்ட அளவையின் (கிரீன் மார்க் கிரைடீரியா) கீழ் பயன்படுத்தப்படுகிறது.
  • பயனுறு பசுமைச் சூழல் 30 சதவீதம் அதிகரிக்கும் போது நில மேற்பரப்பு வெப்பநிலை 2ஊ முதல் 4ஊ செல்சியஸ் வரை குறையும் என்று அறிவியல் மற்றும் சுற்றுசூழல் மன்றத்தின் ஆய்வு கூறுகிறது.
  • நகரங்களில் மனையின் கட்டுமான அளவை வரையறுக்கும் தளப்பரப்பு வீதம் அதிகரிக்கும் போது நில மேற்பரப்பு வெப்பநிலை குறைவதாகவும் இந்தியாவில் 100 முதல் 300 வரை தளப்பரப்பு வீதம் கொண்ட பகுதிகளின் நில மேற்பரப்பு வெப்பநிலை 51 முதல் 40 செல்சியஸாக இருப்பதாகவும் கட்டுமான வல்லுனர்கள் கூறுகின்றனர்.
  • சூரிய ஒளி மற்றும் காற்றின் வேகம் காரணமாக ஏற்படும் வெப்ப அதிகரிப்பிற்கும் நகர வீதிகள் அமைந்துள்ள திசைக்கும் தொடர்பிருப்பதாகவும் கிழக்கு மேற்காக அமைந்துள்ள தெருக்களுடன் ஒப்பிடும்போது வடக்கு தெற்காக அமைந்துள்ள தெருக்களின் நில மேற்பரப்பு வெப்பநிலை ஒரு செல்சியஸ் அதிகமாக இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. சுற்றுப்புற சூழல் சார்ந்து நகரங்கள் வடிவமைக்கப்படும் போது நில மேற்பரப்பு வெப்பநிலை குறையும். வெப்பநிலை ஒரு செல்சியஸ் குறையும் போது நகரின் மின் கட்டணம் 2 சதவீதம் குறையும்.

நன்றி: தினமணி (04 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories