- பூமியில் வாழும் உயிரினங்களுக்கு நீர் எப்படி அவசியமோ, அதேபோல வெப்பமும் அவசியம். தேவையான வெப்பம் இல்லை என்றால் உயிரினங்களால் அன்றாட வேலைகளைச் செய்ய முடியாது. உணவு தேட முடியாது. ஏன் உயிர் வாழவே முடியாது. எப்படி உயிரினங்களின் வாழ்வில் வெப்பம் முக்கியத்துவம் பெறுகிறது? இதைத் தெரிந்து கொள்வதற்கு நாம் வேதிவினைகளைப் (Chemical Reactions) பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.
- பிரபஞ்சத்தில் எல்லாப் பொருள்களும் வேதிவினைகளுக்கு உள்பட்டுள்ளன. ஓர் ஐஸ்கட்டி கரைந்து நீராகிறது. ஈரத்தால் இரும்பு துருப் பிடிக்கிறது. பிரபஞ்சத்தின் இயக்கமே இந்த வினைகளால்தாம் நடைபெறுகிறது. அதேபோல உயிரினங்கள் இயங்குவதற்கும் வேதிவினைகளே காரணமாக இருக்கின்றன.
- உயிரினங்களின் உடலுக்கு வெளியேயும் உள்ளேயும் தொடர்ச்சியாக வினைகள் நடைபெறுகின்றன. தூங்குவது, சுவாசிப்பது, சிந்திப்பது என அனைத்தும் வேதிவினைகளால்தாம் நிகழ்கின்றன. இந்த வினைகள் சீராக நடைபெறுவதற்கு வெப்பம் அவசியம். வெப்பத்தின் அளவு கூடும்போதோ, குறையும்போதோ அது வேதிவினைகளைப் பாதிக்கிறது. இப்படி ஏன் நிகழ்கிறது?
- ஒவ்வொரு வேதிவினையும் நடைபெறுவதற்கு ஒரு குறிப்பிட்ட கால அளவை எடுத்துக்கொள்கிறது. இந்தக் காலத்தை வெப்பம்தான் கட்டுப்படுத்துகிறது. வெப்ப அளவு மாறுபடும் போது அந்த வினை நடைபெறும் வேகமும் மாறுவதால், அந்த வினையால் ஏற்படும் விளைவும் பாதிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்வோம்.
- உணவுப் பொருள்கள் கெடுவது வேதிவினையால் நிகழ்கிறது. சாதாரண வெப்பநிலையில் ஓர் உணவுப் பொருள் கெடுவதற்குச் சில மணி நேரம் ஆகிறது. ஆனால், அந்த உணவுப் பொருளே குளிர்ப்பதனப் பெட்டியில் இருக்கும்போது சில நாள்கள்வரைகூடக் கெடாமல் இருக்கிறது இல்லையா? இதற்குக் காரணம் குளிர்ச்சியாக இருக்கும் இடத்தில் வேதிவினை தாமதமாக நடைபெறுவதால், கெட்டுப் போவதும் தாமதமாகிறது. இதுவே வெப்பம் அதிகமான இடத்தில் இருந்தால், வேதிவினை மிக வேகமாக நடைபெறும். அதனால் உணவும் சீக்கிரம் கெட்டுவிடும்.
- உணவில் நடைபெறும் அதே போன்ற வினைகள்தாம் உயிரினங்களின் உடலுக்குள்ளும் நடைபெறுகின்றன. நம் இதயத் துடிப்பு, சுவாசம், திசுக்களின் வளர்ச்சி ஆகிய அனைத்தும் செல்களுக்குள், மூலக்கூறுகளுக்குள் நடைபெறும் வேதிவினைகளால்தாம் நிகழ்கின்றன. இது சரியான வேகத்தில் சீராக நடைபெறுவதற்கு வெப்பம் தேவைப்படுகிறது. இந்த வெப்பத்தை உணவுப் பொருளின் மூலமும் சுற்றுப்புறத்தில் இருந்தும் உடல் எடுத்துக்கொள்கிறது.
- ஆனால், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. நமக்குக் குறிப்பிட்ட அளவு வெப்பம் மட்டுமே தேவையாக இருக்கிறது. வெப்பம் உடலுக்குள் அதிகரித்தாலோ, குறைந்தாலோ அவற்றால் நம் உடல் இயக்கம் பாதிக்கப்படலாம். சுவாசம் என்கிற வினை வெப்பம் குறைந்த நிலையில் தாமதமாக நடைபெற்றால், நம் உடல் பாகங்களுக்குச் சரியான நேரத்தில் ஆக்சிஜன் கிடைக்காமல் வேலை செய்யாது. அதேபோல வெப்பத்தின் அளவு அதிகரித்தாலும் வேதிவினை வேகமாக நடைபெற்று செல்களில் உள்ள மூலக்கூறுகள், புரதங்களின் கட்டமைப்புகள் சிதைந்துவிடும். அப்படி என்றால் நமது உடலுக்கு அதிக வெப்பம் கிடைத்தாலோ குறைந்த வெப்பம் கிடைத்தாலோ என்ன ஆகும்?
- இந்தச் சிக்கலை நிவர்த்தி செய்யத்தான் உயிரினங்களின் உடலுக்குள்ளேயே வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்பும் இருக்கிறது. நமது உடலில் வெப்பம் அதிகரிக்கும்போது ரத்த நாளங்கள் விரிந்து, சருமத்தில் உள்ள ரோமங்கள் தளர்ந்து, வியர்வை வெளியேறுவதன் மூலம் உடல் குளிர்ச்சியடைகிறது. இதுவே வெப்ப அளவு குறையும்போது நம் உடல் நடுங்குவதன் மூலம் தசைகளில் அசைவுகளை உண்டாக்கி, வெப்பத்தை உண்டாக்க முயற்சி செய்கிறது.
- ரத்த நாளங்கள் சுருங்கி, வியர்வையும் நின்று விடுகிறது. இத்தகைய தன்மையைப் பெற்ற உயிரினங்களை நாம் வெப்ப ரத்த (Warm blooded) உயிரினங்கள் என்கிறோம். மனிதர்கள் உள்ளிட்ட பாலூட்டிகள், பறவைகள் எல்லாம் வெப்ப ரத்த உயிரின வகையைச் சேர்ந்தவை. ஆனால், குளிர் ரத்த (Cold blooded) உயிரினங்கள் என அழைக்கப்படும் பாம்பு, பல்லி, மீன், தவளை போன்றவற்றுக்கு உடலின் உள்ளேயே வெப்பத்தைக் கட்டுப்படுத்தி வைக்கும் ஆற்றல் கிடையாது.
- அவை சுற்றுப்புறத்தில் கிடைக்கும் வெப்பத்தை மட்டுமே சார்ந்து இருக்கின்றன. அவற்றை வைத்தே அந்த உயிரினங்களின் உடலுக்குள் வேதிவினைகளும் நடைபெறுகின்றன. வெப்பம் அதிகமுள்ள காலத்தில் அவை குளிர்ந்த இடங்களுக்கு நகர்தல் போன்ற நடவடிக்கைகளிலும், வெப்பம் குறைவான காலத்தில் சூரிய ஒளியில் அதிக நேரம் செலவிடுதல் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றன.
- இதுபோன்ற உயிரினங்களுக்குக் கிடைக்கும் கொஞ்சம் வெப்பமும் குளிர்காலத்தில் கிடைக்காது. அதைச் சமாளிக்க நெடுந்தூக்கம் என்கிற தகவமைப்பும் இருக்கிறது. குளிர்காலத்தில் அவை உடல் இயக்கத்தை நிறுத்திவிட்டு, ஆழ்ந்த உறக்க நிலைக்குச் (Hibernation) சென்றுவிடுகின்றன.
- பிறகு தேவையான வெப்பம் கிடைக்கும் காலத்தில் மீண்டும் இயங்கத் தொடங்குகின்றன. குளிர்ப் பிரதேசங்களில் வாழும் உயிரினங்கள் கிடைக்கும் குறுகிய கால சூரிய வெப்பத்தைத் தக்கவைப்பதற்கான உடல் அமைப்புகளைக் கொண்டிருக்கின்றன. இவ்வாறாக ஒவ்வோர் உயிரினமும் வெப்பத்தை அதற்கு வேண்டிய அளவில் மட்டுமே பயன்படுத்திக்கொள்கின்றன.
- எது எப்படியோ மனித உடல், சூட்டைத் தானாகவே தணித்துக்கொள்கிறது என்பதற்காகத் தண்ணீரே குடிக்க வேண்டாம் என்று நினைத்து விடாதீர்கள். இந்தியா போன்ற வெப்பப் பிரதேசங்களில் வாழ்பவர்கள் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது அவசியம்.
நன்றி: இந்து தமிழ் திசை (09 – 08 – 2023)