TNPSC Thervupettagam

வெறிநாய்களை என்ன செய்வது?

May 20 , 2024 235 days 547 0
  • தெரு நாய் பிரச்சினை தினசரி செய்தியாகி விட்டது. நாய் பிரச்சினை காந்தியையும் விட்டுவைக்கவில்லை. 1925 முதல் திங்கள்கிழமைதோறும் அவர் மௌன விரதம் இருந்தார். அப்போதுதான் அந்தப் பிரச்சினை நேர்ந்தது. அகமதாபாத்தின் ஆலை முதலாளியான அம்பாலால் சாராபாயின் தொழிற்சாலைகளில் தெரு நாய்கள் அடிக்கடி புகுந்து நாசம் செய்தன.
  • அவற்றுள் 60 நாய்களைப் பிடித்து அவர் கொன்றுவிடச் செய்தார். நாய்களைக் கொன்ற சாராபாய்க்கு நிம்மதி போய்விட்டது. தனது மன வேதனையை மகாத்மாவிடம் தெரிவித்துக்கொண்டார். ‘வெறி நாய்களைக் கொல்லாமல் வேறு என்னதான் செய்ய முடியும்’ என்று எழுதிக்காட்டிச் சமாதானப்படுத்தினார் காந்தி. அந்த வாக்கியம் பெரும் புயலைக் கிளப்பிவிட்டது.
  • விலங்கு நலச் சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் இது ஜீவகாருண்யமா என்று கொதித்தனர். அவர்களைச் சாந்தப்படுத்த மூன்று மாதங்கள் தன் பத்திரிகையில் மாய்ந்து மாய்ந்து காந்தி எழுத வேண்டியிருந்தது.
  • மேல்நாட்டில் நாய் வளர்ப்பு பற்றிய அறிவியல்ரீதியான ஒரு கலையே இருக்கிறது. இந்தியாவில் அத்தகைய நிலை இல்லையே! அதுவரை கொல்லாமல் வேறு என்னதான் செய்வது என்று தன் நிலையில் வழக்கம்போல் உறுதியாக நின்றார் காந்தி.

மருந்தும் மாற்றங்களும்:

  • இன்று இந்தியாவில் கால்நடைப் பராமரிப்பு போதுமான அளவு இல்லாவிட்டாலும், நன்றாக வளர்ந்துவிட்டது. எனினும் நாய்களுக்கு வெறி பிடிப்பது நிற்கவில்லை. பண்பலை ஒலிபரப்பினால் உருவாகும் - நாய்களுக்குக் கேட்கும் - அல்ட்ரா ஒலி அலைகள் அதற்குப் புதிய காரணம் என்கிறார்கள். 1960இல் மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, நாய் கடித்து இறப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
  • நாய்க்கடியால் முதன் முதலில் ஐந்தாம் நூற்றாண்டில் மனிதர்கள் உயிரிழந்தது தெரியவருகிறது. வீட்டில் நாய்களை வளர்க்கும் பழக்கம் இந்தியாவில் மேற்கத்தியரின் வரவுக்குப் பிறகு ஏற்பட்டது. இன்றைக்கு ஏராளமானோர் நாய் வளர்க்கின்றனர்.
  • வளர்ப்பு நாய்கள் கடித்தாலும் சரி, வெறிநாய் கடித்தாலும் சரி ஊசி போட்டுக்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். தொப்புளைச் சுற்றி 21 ஊசிகள் போடுவது பழைய மருத்துவம். இப்போது நவீன சிசிவி (ரேபிபுர்) மருந்துகளைக் கையில் மாற்றி மாற்றிப் போட்டுக்கொண்டால் போதும். அதுவும் ஐந்து ஊசிகளே போதும். 0, 3, 7, 14, 28 ஆகிய நாள்களில் தொடர்ந்து போட்டுக்கொள்ள வேண்டும்.
  • குரைக்கிற நாய் கடிக்காது என்பது பொய் மொழி. நாய்கள் அவற்றுக்குள் கருத்து பரிமாறிக்கொள்ளவும் பிரிவுத் துயரை வெளிப்படுத்தவுமே பெரும்பாலும் குரைக்கின்றன. குரைத்தல் ஒரு கட்டத்தில் ஊளையாக மாறுகிறது. ஊளை தமிழ்ச் சமூகத்தில் தவிர்க்க வேண்டிய சகுனமாகக் கருதப்படுகிறது.

மகாபாரதத்தில்...

  • எல்லா நிலை மனிதர்களோடும் எல்லாக் காலத்திலும் நாய்களுக்கு ஓர் உறவு இருந்திருக்கிறது. மகாபாரதத்தின் தருமபுத்திரனிலிருந்து இது தொடங்குகிறது. மகாபாரதத்தில் கடைசிக் கட்டம். தருமபுத்திரன் மலை உச்சியை அடைந்திருக்கிறார். அங்கே தேவலோகத் தேர் காத்திருக்கிறது. “உங்கள் தம்பிகளும் மனைவியும் சொர்க்கத்தில் இருக்கிறார்கள்.
  • உங்களையும் அழைத்து வரும்படி தர்மராஜா என்னை அனுப்பினார்” என்றான் பாகன். தருமன் தேரில் ஏறப்போனபோது அவருடன் வந்த நாயும் ஏற முயன்றது. “நாய்க்குச் சொர்க்கத்தில் இடம் இல்லை” என்றான் பாகன். என்னை நம்பி என்னுடனே இருக்கும் இந்த நாய்க்கு இடம் இல்லை என்றால், எனக்கும் சொர்க்கம் வேண்டாம் என்றார் தருமன். உடனே நாய் மறைந்தது. இந்தச் சமயம் காட்சியளித்த தருமதேவன், “மகனே, உன்னைச் சோதிப்பதற்காகவே இந்தப் பரீட்சையை நடத்தினேன்.
  • ஒரு நாய்க்காகச் சொர்க்கத்தையே துறக்க முன்வந்த நீ மகத்தான மனிதன்” என்றார். பிறகு தருமன் சொர்க்கம் புகுந்தார் என்பது கதை. தன்னை அண்டி வந்தவரைக் கடைசிவரை காப்பாற்ற வேண்டும் என்கிற அடைக்கல தர்மம் இந்தக் கதையில் உணர்த்தப்படுகிறது. காந்தியின் மனிதர்களைப் புரக்கும் குணத்திலும், சுந்தர ராமசாமியின் நவீனமாக்கச் சித்திரத்திலும், கு.அழகிரிசாமியின் சமூக விமர்சனத்திலும் நாய்களுக்குப் பங்கு உண்டு.

தமிழரும் நாய்களும்:

  • நாய்கள் தமிழரோடு பன்னெடுங்காலமாக இருந்து வந்திருக்கின்றன. அதனால்தான் அதற்குத் தமிழில் பல பெயர்கள். அக்கன், அனகன், எகினம் (நீர் நாய்), குக்கல், குக்கன் (குக்க என்ற வழக்கு தெலுங்கில் பெரு வழக்கு), சாரமேயன், சதுஷ்பாதம், சுணங்கன், சுவா, சுவானம், சுனகன், சுனி, சூரன், ஞமலி, ஞாளி, நயக்கன், நாகு, பட்டி (மலையாளத்தில் வசை வழக்கு), பைரவர், முடுவல் இப்படிப் பலப் பல.
  • ‘நாய் பெற்ற தெங்கம் பழம்’, ‘நாயைக் கண்டால் கல்லைக் காணோம்’, ‘நாய் விற்ற காசு குரைக்காது’ என்பது போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பழமொழிகள் நாய் நம்மோடு நெடுங்காலமாக நெருங்கி இருந்தற்கான சான்றுகள். எனினும் நாய்களின் பண்புரு எப்போதும் கீழானதாகவே இருக்கிறது. நாயேன், நாயேன் என்று இறைவன் முன்னால் தாழ்த்திக்கொண்டார்கள் நாயன்மார்கள்.
  • ‘நாயினேனை நலமளி தில்லையுள் கோலமார்தரு பொதுவினில்’ என மாணிக்கவாசகர் (திருவாசகம்), ‘நாய்குகன் என எனை ஓதாரோ’ என்று குகன் (கம்பராமாயணம், 2316), ‘நாய்க்கும் கடையானேன் (இல்லையோ என் கண்ணி)’ எனத் தாயுமானவர், ‘ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்து’ (திருமந்திரம், 531) என்று திருமூலர் எனப் பலரும் நாயைப் பல நூற்றாண்டுக் காலமாகக் கேவலமாகவே பார்த்து வந்துள்ளனர். என்பில்லாதது என்று புழுவைக்கூட விடாதவர், ஆடு, மாடு, ஆமை, முதலை, குதிரை, பாம்பு, எலி, புலி, சிங்கம், மீன், மான் என்று யானை வரை சென்ற திருவள்ளுவரோ நாயை எதற்கும் உவமையாகக் காட்டவே இல்லை.
  • கீழ் நிலையில் உருள்வதும் புரள்வதும், தான் கக்கியதைத் தானே உண்ணும் இயல்பு மீறலும், இயற்கையே வாலால் மூடி வைத்திருக்கிற பிறப்புறுப்பை வாலைத் தூக்கி வெளிக்காட்டி வளைய வருவதுமான (!) காரணங்களால் அது கீழானதாகக் கருதப்பட்டிருக்குமோ? நாயை இழி பிறவியாகக் கருதும் போக்கு ஏன் தோன்றியது, எப்போது தோன்றியது

நன்றி: இந்து தமிழ் திசை (20 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories